வியாழன், 23 ஏப்ரல், 2015

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் பணிகள் கண்டி மாவட்டத்துக்கும் விஸ்தரிப்பு : மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்





தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் தனி வீட்டுத்திட்டம் கண்டி மாவட்டத்தில் புசல்லாவை  சோகம தோட்டத்தில் முதன் முறையாக ஆரம்பித்து வைத்ததன் மூலம் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சின் பணிகள் கண்டி மாவட்டத்துக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்று தொழிலாளர் தேசிய சங்கதின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

புசல்லாவை சோகம தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் , ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் வி.புத்திரசிகாமணி , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் இராஜரட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

கடந்த பல வருட காலமாக சோகம தோட்ட மக்கள் மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியதால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 21 குடும்பங்கள் வேறொரு இடத்துக்கு இடம் பெயர்ந்த போதும் மரப்பலகையால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் துன்பபாடுகள் குறித்துப் பலருக்கு அறிவிக்கப்பட்ட போதும்  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்தச்சந்தர்ப்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமையைத் தொடர்ந்து இன்று தனி வீடுகளைக்கட்டிக்கொடுக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 12 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. 
21 வீடுகளுக்கும் இரண்டு கோடியே 52 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் நிதியில் இலவசமாக தோட்டத் தொழிலாளர்களுக்குத் தனிவீடுகளையும் அந்த வீடுகள் அமைந்துள்ள நிலத்துக்குக் காணி உரிமையைப் பெற்றுக் கொடுப்பதும் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வரலாற்று சாதனையாகும்.  இதற்கு வழிசமைத்த இன்றைய ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டமைப்பின் மூலமாகவே இவ்வாறான சாதனைகளை எம்மால் செய்ய முடிகின்றது. இவ்வாறான சேவைகளைச் செய்வதற்கு மலையகத்தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.


93 ரூபாவுக்கு வழங்க வேண்டிய ஒரு கிலோ கோதுமை மாவை 105 ரூபாவுக்கு வழங்கும் பொகவந்தலாவை தோட்ட நிருவாகம் : மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனிடம் தொழிலாளர்கள் முறைப்பாடு

தலைப்பைச் சேருங்கள்


பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை மற்றும் டின்சின் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கோதுமை மா அதிக விலையில் வழங்கப்படுகின்றமைத் தொடர்பில் தொழிலாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பொகவந்தலாவை மற்றும் டின்சின் தோட்டங்களில் 1250 தொழிலாளர்கள் வாழுகின்றனர். இவர்களுக்கு மாதாந்தம் 3300 கிலோகிராம் கோதுமை மா தோட்ட நிருவாகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது. இந்த கோதுமை மாவுக்கான கட்டணம் தொழிலாளர்களின் மாதாந்த வேதனத்தில் அறவிடப்படுகின்றது.
இந்த நிலையில் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா  93 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் தொழிலாளர்களுக்கு  ஒரு கிலோ கோதுமை மா 105ரூபாவுக்கு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும் கோதுமை மாவை நிறுவை செய்யப்படும் தராசு நியமத்தன்மை அற்றதெனவும் இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினால்  கடிதம் அனுப்பப் பட்டுள்ள போதும் பொகவந்தலாவை தோட்ட நிருவாகம் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நுவரெலியா மாவட்ட விலைக்கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.