வியாழன், 8 ஜூலை, 2010

இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சில பிரச்சினைகள் கண்டி இந்திய உதவி தூதுவரின் கவனத்திற்கு முரளிரகுநாதன் கொண்டு வந்துள்ளார்.

மலையக இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சில பிரச்சினைகள் குறித்து கண்டியிலுள்ள உதவி இந்திய தூதுவரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மனோகணேசனின் ஆலோசனைக்கேற்ப இந்திய வம்சாவளித்தமிழ்ச்சமூகத்தினரின் வேலையில்லாப்பிரச்சினைகள் ,தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப்பிரச்சினைகள் ,தோட்டப்பகுதியிலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் ,கண்டி உதவி இந்திய தூதரகத்தில் விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்பன குறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் கண்டியிலுள்ள உதவி இந்திய தூதுவர் ஆக்கேஷ்குமார் மிஸ்ராவைச் சந்தித்து ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் பேசியுள்ளார்.
இந்தக்கலந்துரையாடல் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : கண்டியிலுள்ள இந்திய உதவி தூதரகத்தில் தற்போது உடனடியாக விசாபெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்துப்பேசிய போது இந்தியா செல்வதற்கான விசா அனுமதி கோருகின்றவர்களின் எண்ணிக்கை தற்போது நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் இவ்வாறு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வகையில் அறிவிக்கப்படுமென்றும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் போது விசா அனுமதித்தொடர்பில் பொதுமக்களுக்கு உரிய அறிவித்தல்களைப் பார்வைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். தோட்டப்பகுதிகளில் படித்து விட்டு தொழில் வாய்ப்பில்லாமலிருக்கின்றவர்களின் விபரங்களை தருகின்ற பட்சத்தில் இந்திய வளவாளர்களைக்கொண்டு அவர்களுக்கான சுயத்தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவைப்படுகின்ற வைத்திய உபகரணங்கள் குறித்த தகவல்களைத்தருகின்ற பட்சத்தில் அந்த வைத்தியசாலைக்குத்தேவையான வைத்திய உபகரணங்களைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கண்டியிலுள்ள உதவி இந்திய தூதுவர் தன்னிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: