மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
புதன், 28 ஜூலை, 2010
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி அமுலாக்கல் திருப்தியில்லை : உதயகுமார்
தமிழ் மக்கள் செறிந்தது வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரியவகையில் அமுல் படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களைத் தொடர்ந்து எதிர்நோக்கி வருவதால் இவ்விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம் .உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் ,கல்விப்பணிமனைகள் ,பிரதேச செயலகங்கள் , வைத்தியசாலைகள் ,தொழிற்திணைக்கள பணிமனைகள் ,நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரியவகையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குக் கடந்த பல வருடங்களாக உள்ளாகி வருகின்றனர். தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் அரசகரும மொழியான தமிழ் மொழி உரியவகையில் அமுல் படுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த அமுல் படுத்தல் இதுவரை நடை முறைக்கு வரவில்லை. குறிப்பிட்ட அரச நிறுவனங்களில் தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய உத்தியோகஸ்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதால் இத்தைய நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரிவகையில் மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற போதும் தமிழ் உத்தியோகஸ்தர்கள் போதுமானதாக உள்ள அரச நிறுவனங்களில் கூட தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில் அசமந்தப்போக்குக் கடைப்பிடிப்பதானது விசனத்துக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில் அரச நிறுவனங்களில் தமிழ் ,சிங்கள மக்களின் நலன் கருதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சமூகத்தொடர்பாடல் வசதியளிப்பாளர் நியமனங்கள் கூட தற்போது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் இன்று பெருந்தோட்டப்பகுதியில் படித்து விட்டு தொழில் வாய்ப்பின்றி ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் உள்ளனர்.இவர்களுக்கு அரசகரும மொழி தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஏனைய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உரிய நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் .இவ்வாறான நியமனங்கள் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கலைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் . இவ்விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக