ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மலையகத்தமிழ் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் திட்டம், 2010

2009 ஆம் வருடம் க.பொ.த. (உயர்தர)ப் பரீட்சைக்குத் தோற்றி, சித்தி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழ்மொழிமூல மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகமொன்றில் பொறியியல் (எந்திரவியல், தொடர்பூட்டல், இலத்திரனியல்), கலை மற்றும் வர்த்தக கற்கைநெறியை பின்பற்றுவதற்கான புலமைப் பரிசில் திட்டமொன்றை தமிழ்நாடு, நாமக்கல் மாவட்ட கோமரபாளயத்திலுள்ள எஸ்.எஸ்.எம் கல்லூரி வழங்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் உறுப்பினர்களும் பிரபல தொழிலதிபர்களுமான கே. கருணாகரன்,. கந்தசாமி செல்லகுமார், டாக்டர் எம். ராமசுப்பு, மணிமுத்து,. முத்துசாமி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.



பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பப் பின்னணியிலுள்ள பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்த அவர்கள் முதற்கட்டமாக பொறியியல் கற்றைநெறிகளுக்கு 3 மாணவர்களும் கலை மற்றும் வர்த்தக கற்கைநெறிகளுக்கு 4 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்கள். இந்தப் புலமைப் பரிசில் உதவியானது நாலு வருடங்களைக் கொண்ட பொறியியற்றுறை கற்கைநெறிகளான தொடர்பூட்டல், இலத்திரனியல் மற்றும் எந்தரவியல் ஆகியவற்றிற்கும் மூன்று வருடங்களைக் கொண்ட கலை மற்றும் வர்த்தக கற்கைநெறிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசிலுக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான, வதிவிட, உணவு மற்றும் பல்கலைக்கழக கட்டணங்களையும் கற்கைநெறி காலப்பகுதியில் வருடந்தோறும் ஒரு தடவை இலங்கை வந்து செல்வதற்கான விமானப் போக்குவரத்துச் செலவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம் மாணவர் ஒருவருக்கு வருடந்தோறும் ரூபா 25000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் உரிய விண்ணப்பப்படிவங்களை
அட்டன் சீடா வள நிலையத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
குறுகிய காலப்பகுதியிலேயே இப்புலமைப் பரிசில் திட்டத்தை வடிவமைத்து, நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளதாக இத்திட்டத்தின் பணிப்பாளாரன கே. கருணாகரன் தெரிவித்தார். மேலும், இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆந்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக கே. கருணாகரன், செயற்றிட்டப் பணிப்பாளர், பான்ஓடியோ, இல. 3இ 1ஃ1இ ஸ்டேசன் வீதி, கொள்ளுப்பிட்டிய, கொழும்பு 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரிகள், தாம் தெரிவுசெய்துள்ள கற்கைநெறியையும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், முழுப்பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு, க.பொ.த. சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் நிழற்பிரதிகள், பாடசாலை விடுகைப்பத்திரம், பாடசாலை அதிபரின் நற்சான்றிதழ், பெற்றோரின் வதிவிடத்தை உறுதிபடுத்திய கிராம அலுவலர் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களது மாத வருமானம் மற்றும் இதனை உறுதிபடுத்திய கிராம அலுவலர் அல்லது தோட்ட முகாமையாளர் அல்லது நிறுவனத் தலைவர் என்றவாறு உரிய ஒருவரது சான்றிதழ், தேசிய ஆளடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நிழற்பிரதிகளையும் பின்னிணைக்க வேண்டும். இந்த ஆவணங்களின் மூலப்பிரதிகளைப் பின்னிணைக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: