திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மலையகத்தின் ஏகத்தலைமை இ.தொ.கா.தான் : கட்சி மாறிய கணபதி கனகராஜ் தெரிவிப்பு

எந்த விதமான சுயநல அரசியல் நோக்கமுமின்றி மலையகத்தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்காகவே இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{டன் தாம் இணைந்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதிகனகராஜ் ,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் நிதிச்செயலாளரும் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.சிவசுந்தரம் தமது 500 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் கடந்த சனிக்கிழமை
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{டன் இணைந்து கொண்டனர்.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழினுட்ப நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு இவர்கள் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், மத்திய அனுஷியா சிவராஜா ,ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ,இ.தொ.கா.வின் ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இ.தொ.கா. உடன் இணைந்து கொண்டமைத்தொடர்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :
மலையகத்தமிழ்ச்சமூகம் தொழிற்சங்க அரசியல் ரீதியாக பிரிந்துள்ளதால் இந்தச்சமூகத்திற்குரிய உரிமைகளைப்பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுள்ளது. இந்த நாட்டில் மூன்றாவது பிரஜைகளான மலையகத்தமிழர்கள் 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்க அரசியல் கட்சி ரீதியாக பிரிந்துள்ளனர் என்பது ஆரோக்கிமானதல்ல . இ.தொ.கா.வின் தலைமையின் கீழ் அனைவரும் ஓரணி திரளுகின்ற பட்சத்திலேயே எமது சமூகம் பல்வேறு உரிமைகளைப்பெற்றுக்கொள்ள முடியும். இ.தொ.கா. மூலமாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குடும்பத்தினர் மூலமாகவும் இந்தச்சமூகத்திற்கு அளப்பெரிய சேவைகள் கிடைத்துள்ளன.இவற்றை யாராலும் மறுக்க முடியாது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திறமையும் வீரமும் மலையகத்தமிழ்ச் சமூகத்தைக்காக்கக் கூடியதென்பதால் இவரது தலைமையின் கீழ் அரசியல் பணியாற்றுவதில் பெருமைக்கொள்கின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை: