புதன், 29 செப்டம்பர், 2010

ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரியில் 17 பேர் சித்தி

இவ்வருடம் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியைச்சேர்ந்த 17 மாணவர்கள் சித்திப்பெற்றுள்ளனர் சித்திப்பெற்ற மாணவர்களுடன் கல்லூரியின் அதிபர் எஸ்.இராஜேந்திரன் கற்பித்த ஆசியர்களான யோகராஜ ,திருமதி சசிகலா , திருமதி .நவலெட்சுமி ஆகியோர் அமர்ந்திருப்பதைப்படங்களில் காணலாம். சித்திப்பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு : கNணுஷன் சுரேந்திரன்
( 169) மனோகரன் சந்தோஸ் (150 ) கோட்லியர் ரொகான் ( 147 ) ராஜன் பிரலக்ஷா
( 149 ) ஸ்ரீதர் துலஷிக்கா ( 142) ரவிச்சந்திரன் அஸ்வினி ( 142 ) குமாரவேல் ரேன்பிரியந்தி ( 151 ) சேனாதிராஜா அனுதர்ஷினி ( 142 ) ரவி சஜீவன் ( 148 ) ராமகிருஷ்ணன் நவின்பிரசாந் ( 148 ) பாலசுப்பிரமணியம் கோபிஹநாத் ( 162 ) பிரபாகரன் சுதர்ஷன் ( 157 ) சந்திரன் டொரின் ( 149 ) மனோகரன் சியாமளன்( 159 ) தாமோதரம் சஜித்ரா ( 147 ) ஜெயகாந்தன் ஹரிசாந் (142 ) கோவிந்தசாமி ரனுஜன்
( 155 )

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமாரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமாரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரின் ஏற்பாட்டில் அட்டன் பிட்டவின் முன்பள்ளி மாணவர்களுக்கு
தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு
செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களும் நுவரெலியா சிறுவர் கிராமிய அபிவிருத்தி நிலையத்தின் சிறுவர்களும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. இதன்படி லிந்துலை மவுசாஎல்ல ,அட்டன் பிட்டவின் ஆகிய முன்பள்ளிகளின் சிறுவர்களுக்கும் நுவரெலியா சிறுவர் கிராமிய அபிவிருத்தி நிலையத்தின் சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள்
உட்பட மேலும் பல அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டன.
இன்று 28 ஆம் திகதி இடம் பெற்ற இந்த நிகழ்வுகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

தோட்டத்தொழிலாளர்களுக்கு முழுமையான அடிப்படைச்சம்பளம் வழங்கப்படவேண்டும் இ.தொ.ஐ.முன்னணி தீர்மானம்

இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிருவாக சபைக்கூட்டம் இந்த முன்னணியின் நுவரெலியா பணிமனையில் இடம் பெற்ற போது முக்கிய தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்குத் தற்போது பகுதி பகுதியாக வழங்கப்படுகின்ற சம்பளத்தினை அடிப்படைச்சம்பளமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சுகாதார வைத்தியசேவையைக்கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கம் எம்பலன்ஸ் வாகனங்களை வழங்க வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற வீடமைப்புத்திட்டங்கள் அரசியல் தொழிற்சங்க வேறுபாடின்றி தேவையானவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படவேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கட்சியிலிருந்து சுயமாக விலகிய பொதுச்செயலாளர் நிதிச்செயலாளர் மற்றும் உபதலைவர் ஆகியோர் கட்சியிலிருந்து விலக்குவதாகவும் நிருவாக சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சதாசிவம் மேலும் தெரிவித்தார்.

சனி, 25 செப்டம்பர், 2010

மில்லேனியம் இலக்குகள் பெருந்தோட்டத் துறையில் படு தோல்வி அடைந்துள்ளன ஜனாதிபதியின் ஐக்கிய நாட்டு உரை தொடர்பில் : மனோ கணேசன் கருத்து

இந்நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஐநா சபையால் நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தொடர்பிலான மில்லேனியம் இலக்குகளை இலங்கை வெற்றிகரமாக அண்மித்து வருவதாக ஜனாதிபதி ஐநா உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த இலக்குகளில் வறுமை குறைப்பு என்பது முக்கியமானதாகும். தேசிய ரீதியாக இலங்கையிலே வறுமை குறைந்திருந்தாலும், மலையக பெருந்தோட்டங்களில் வறுமை அதிகரித்துள்ளது. எனவே மலையக பெருந்தோட்டத் துறையை பொறுத்தவரையில் ஜனாதிபதி ஐநா சபையில் தெரிவித்த கருத்து தவறானதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஐநா உரை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

2015ம் ஆண்டையே மில்லேனியம் இலக்குகளின் கால எல்லையாக ஐநா தீர்மானித்துள்ளது. அந்த 2015ம் ஆண்டில் அடையவேண்டிய சமூக பொருளாதார இலக்குகளை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் உலகவங்கி உட்பட சர்வதேச நிதி நிருவனங்கள் செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றன. 2015ம் ஆண்டில் இலங்கை எட்டவேண்டிய தேசிய வறுமை நிலை 13 விகிதமாகும். 2002ம் ஆண்டில் 23 விகிதமாக இருந்த இந்த விகிதாசாரம் இன்றைய 2011ம் ஆண்டில் சுமார் 15 விகிதமாக குறைந்திருக்கின்றது. எனவே இன்னும் நான்கு வருடம் கழித்து 2015ம் ஆண்டில் மில்லேனியம் இலக்கான 13 விகிதத்தை மிக சுலபமாக இலங்கை தொட்டுவிடும் என்பதையே ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகின்றார். ஆனால் இலங்கையில் மலையகத்தின் பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் சமூகத்தில் 2002ம் ஆண்டிலேயே வறுமை நிலை 30 விகிதமாக இருந்தது. இன்றைய 2011ம் ஆண்டில் அது குறைவதற்கு பதிலாக சுமார் 33 விகிதமாக உயர்ந்திருக்கின்றது. எனவே இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து மில்லேனியம் இலக்குகளின் இறுதி ஆண்டான 2015ம் ஆண்டில் மலையக பெருந்தோட்டத் துறையில் வறுமை நிலை 35 விகிதத்தை கடந்துவிடக்கூடிய மோசமான நிலைமை நிலவுகின்றது. ஒரு தீவான இலங்கைக்குள்ளே மலையக பெருந்தோட்டத் துறை இன்னும் ஒரு தீவாக இருப்பதையே இது காட்டுகின்றது. இதற்கு இன்றைய அரசாங்கம் உட்பட இந்நாட்டை தொடர்ச்சியாக ஆண்டுவந்த அரசாங்கங்களும், இந்த அரசாங்கங்களுக்குள்ளே இடம்பெற்றுவரும் மலையக அரசியல் பிரதிநிதிகளும் முழுமையாக பொறுப்பேற்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் மலையகத்திலே தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கத்திற்குள் சங்கமமாகியுள்ளனர். இவர்கள் இந்த மலையக வறுமை நிலமையை பற்றி புரிந்துகொள்ளவேண்டும். ஏனைய கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி ஆகிய அனைத்து இலக்குகளுக்கும் இந்த வறுமை என்ற விடையம்தான் அடிப்படையாக இருக்கின்றது. மலையகத்திலே வறுமையை போக்குவதற்கு ஆளுகின்ற அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் முடுக்கிவிடவேண்டிய கடமை, இன்றைய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகளினதும் தலையாய கடமை ஆகும்.என்று தெரிவித்துள்ளார்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் காணப்படுகின்றது.இதனால் அட்டன் - நுவரெலியா மற்றும் நுவரெலியா – புசல்லாவை ஆகிய பிரதான பாதைகளில் வாகனம் செலுத்துகின்றவர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ அறிவித்துள்ளார் இதே வேளை மலையகத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி ,நுவரெலியா,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் அடைமழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றது.

நாவலப்பிட்டி தமிழ்ச்சங்க மாதாந்த ஒன்று கூடல்







நாவலப்பிட்டி
தமிழ்ச்சங்கத்தின் மாதாந்த ஒன்று கூடலின் போது சாரல் நாடன் எழுதிய இளைஞர் தளபதி இரா.சிவலிங்கம் என்ற நூலின் அறிமுக நிகழ்வும் மலையகத்தின் மூத்த ஆய்வாளர் ஏ.லோரன்ஸ் வழங்கிய புதிய அரசியலமைப்பு யோசனைகளும் மலையக மக்களும் என்ற தொனிப்பொருளிலான பேச்சும் கவிஞர் சிவ .இராஜேந்திரன் தலைமையிலான சிறப்பு கவியரங்கம் ஒன்றும் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இயற்கை மூலிகைத்தொடர்பான செயலமர்வு

இயற்கை மூலிகைகளும் அவற்றின் பயன்பாடுகளும் இறைவனின் படைப்பும் என்ற தொனிப்பொருளில் நாவலப்பிட்டி சாந்த அன்ரூஸ் தேவாலயத்தில் செயலமர்வொன்று இடம் பெற்றது.இந்தச்செயலமர்வில் இயற்கை மூலிகைகளும் அவற்றின் பயன்பாடுகளும் இறைவனின் படைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன் இந்தச்செயலமர்வு ஆரம்பமாவதற்கு முன்பு பரிசுத்த நற்கருணை ஆராதனை ஒன்றும் இடம் பெற்றது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

உறவினர்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய சிறுவன் நீதிவானின் உத்தரவின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவைப்பிரதேசத்தில் உறவினர்களின் துன்புறுத்தலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒன்பது வயது சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து நீதிவானின் உத்தரவுக்கேற்ப குறிப்பிட்டச்சிறுவன் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றான்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த இந்தச்சிறுவனின் தந்தை வேறொருவரை திருமணம் முடித்துக்கொண்டு வாழுகின்ற நிலையில் இந்தச்சிறுவனின் தாய் கொழும்பில் தொழில் புரிகின்றார்.இந்தச்சிறுவன் உறவினர் வீடொன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அந்த உறவினர்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.இந்த துன்புறுத்தல்களைப்பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவன் நேற்று 22 ஆம் திகதி வீட்டை விட்டு பொகவந்தலாவையிலிருந்து அட்டனுக்குச்சென்று அங்கிருந்து நபரொருவரின் உதவியுடன் தலவாக்கலை செல்லும் பஸ் ஒன்றில் ஏறி சென்று கொண்டிருந்த போது இந்தச்சிறுவனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பஸ் சாரதி அந்தச்சிறுவனை அட்டன் மல்லியப்பூ சந்தியில் உள்ள பொலிஸ் காவலரண் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அட்டன் பொலிஸார் சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இந்தச்சிறுவனின் உடம்பில் தீக்காயங்கள் காணப்பட்டதால் அந்தச்சிறுவனை வைத்தியசாலை அனுமித்து சிகிச்சைப்பெற நடவடிக்கை எடுக்குமாறு அட்டன் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அக்கரப்பத்தனை டயகமவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம மேற்கு பிரிவு 5 ஆம் இலக்க தோட்டத்திலுள்ள ஆற்றின் பிரதான பாலத்துக்கு அருகில் ஆணொருவரின் சடலமொன்றினை டயகம பொலிஸார் நேற்று 22 ஆம் திகதி இரவு மீட்டெடுத்தனர். இவ்வாறு சடலமாக மீட்டெடுக்கப்பட்டவர் டயகம தோட்டத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான செங்கோடன் வரதன் ( வயது 57 ) என்பவராவார். இவரின் சடலத்தை மீட்ட பொலிஸார் சடலத்தினை அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்குக்கொண்டு சென்றனர். அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக இந்தச்சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகளில் டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தொழிலாளர்கள் பணிநிறுத்தம்

பெண்தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்குப் பெண்கண்காணிப்பாளர்களை நியமிக்கக்கோரி பொகவந்தலாவை கெம்பியன் மேற்பிரிவைச்சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று 20 ஆம் திகதி பணிநிறுத்தப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த ஆண் கங்காணி ஒருவர் திருமணமாகாத பெண் தொழிலாளி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதால் அந்தப்பெண் தற்போது கர்ப்பிணியாக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவத்துக்குக் காரணமாண கங்காணி ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை என்றும் தெரிய வருகின்றது. இந்தக் குற்றத்தைப்புரிந்த நபரை தோட்ட நிருவாகம் பணியிலிருந்து நிறுத்த வேண்டுமென்பதை வற்புறுத்தியும் மேற்படி தோட்டத்தொழிலாளர்கள் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்விடயம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கைத்தொடர்பில் கெம்பியன் தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குக்குலகம தோட்டத்தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு பிரதமமந்திரியிடம் கோரிக்கை

இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை தோல குக்குலகம தோட்டத்தில் இடம் பெற்ற வன்முறை சம்பவத்தினால் இந்தத்தோட்டத்தை விட்டு அச்சத்தினால் இடம் பெயர்ந்துள்ள தமிழ்க்குடும்பங்கள் தொடர்பில் பிரதம மந்திரியும் பதில் பாதுகாப்பு அமைச்சருமான தி.மு.ஜயரட்ணவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார். குக்கூல கமதோட்டத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றைத்தொடர்ந்து அந்தத்தோட்டத்தில் வாழுகின்ற தமிழர்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமைத்தொடர்பிலும் தமிழ் இடம் பெயர்ந்துள்ளமைத்தொடர்பிலும் பிரதம மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதனைத்தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவுள்ளதாக பிரதம மந்திரி என்னிடம் உறுதியளித்துள்ளார். லங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

மத்திய மாகாண மின்சக்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மின் விநியோகத்திட்டங்கள்

மத்திய மாகாண சபை உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல்பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ்pன் சிபார்சின்படி மத்திய மாகாண மின்சக்தி அமைச்சு 2010 ஆம் ஆண்டுக்கு அட்டன் மற்றும் நோட்டன் பிரதேசத்தில் நான்கு புதிய மின் இணைப்பு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி அட்டன் பன்மூர் தோட்ட புதிய வீடமைப்பு திட்டம், டிக்கோயா மணிக்கவத்தை குடியேற்ற வீடமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி, நோட்டன் ஒஸ்போன் தோட்ட புதிய வீடமைப்பு திட்டம், அப்கொட் கவிரவெல தோட்ட புதிய வீடமைப்புத்திட்டம் ஆகியவற்றிற்கே மின்சார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நிவத்திகலை தோல குக்கூலகம தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பி.திகாம்பரம் எம்.பி வேண்டு கோள்

நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோல குக்கூலகம தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு நிவத்திகலை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குக்கூலகம தோட்ட மக்கள் பீதி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளிடங்களுக்குப் பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்துள்ளதாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பாக நிவத்திகலை பொலிஸாருடன் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளேன்.அத்துடன் இடம் பெயர்ந்தவர்கள் மீளவும் இந்தத்தோட்டத்தில் குடியேறும் வகையில் அவர்களுக்கு உரிய பாதகாப்பினை வழங்குமாறும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்..தனிப்பட்ட காரணங்களுக்காக இனரீதியான வன்முறைகள் தூண்டி விடப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.இதே வேளை நிவத்திகலை பிரதேசத்திலுள்ள தோட்டப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சகத்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தரமுயர்த்தும் பணிகள் விரைவில் ஆரம்பம் : கண்டி உதவி இந்திய தூதுவர் உறுதி

நுவரெலியா மாவட்டம் டிக்கோயா கிளங்கன் மாவட்டவைத்தியசாலையைத் தரமுயர்த்துவதற்கும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சில உதவிகளையும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா உறுதியளித்துள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.
மத்திய மாகாணசபையின் உறுப்பினர் முரளிரகுநாதனின் அழைப்புக்கேற்ப கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை ,மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை என்பனவற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயம் தொடர்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கண்டி உதவி இந்திய தூதுவர் இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளைக்கேட்டறிந்து கொண்டார். இதன் பின்பு இந்த வைத்தியசாலையை ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தும் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த தரமுயர்த்தும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் இலங்கை ரூபாவில் 600 மில்லியனைச் செலவிடவுள்ளதாகவும் கண்டி உதவி இந்திய தூதுவர் தெரிவித்தார்.அத்துடன் தோட்டப்பகுதி மக்களின் அவசர மருத்து சேவைகளுக்காக 5 எம்புலன்ஸ் வாகனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் கல்வி மற்றும் சுகாதார தேவைகள் குறித்து இந்திய அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் கண்டி உதவி இந்திய தூதுவர் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள சில தோட்டங்களுக்கும் பாடசாலைகள் சிலவற்றுக்கும் எனது அழைப்புக்கேற்ப விஜயம் செய்தமைக் குறிப்பிடத்தக்கது.இதே வேளை இந்த விஜயத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சிலவும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்கள் சிலவும் விநியோகிக்ப்பட்டன என்று தெரிவித்தார்.

சனி, 18 செப்டம்பர், 2010

பொகவந்தலாவை – அட்டன் பயணிகள் போக்குவரத்துச் சீரில்லை : பயணிகள் புகார்

பொகவந்தலாவை – அட்டன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பயணிகள் போக்குவரத்துச்சேவையில் ஈடுபடுவோர் பயணிகளின் உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. பொகவந்தலாவை – அட்டன் பிரதான பாதையில் தனியார் மற்றும் இ.போ.ச.பஸ்கள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. பொதுவாக தனியார் பயணிகள் பஸ்கள் குறித்து நேரத்துக்குள் பயணிக்காத காரணத்தினால் தமது பொன்னான நேரம் மண்ணாகி விடுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் முதியோர் ,அங்கவீனர்களுக்கான ஆசனபயன்பாடு உரிய வகையில் கிடைக்காத காரணத்தினால் முதியோரும் அங்கவீனர்களும் கால்கடுக்க நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவைப் பிரதேச பயணிகள் சுட்டிக்காட்டுகின்றார். மேலும் பயணக்கட்டணங்களை அறவிடுவதிலும் நடத்துநர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவையிலிருந்து அட்டனுக்கு 34 ரூபா பயணக்கட்டணமாகும் ஆனால் 35 ரூபாவை அறவிடப்படுவதாகவும் அத்துடன் 9 ருபா கட்டணத்திற்கு 10 ரூபாவும் 22 ரூபா கட்டணத்திற்கு 25 ரூபாவும் 32 ரூபா கட்டணத்திற்கு 35 ரூபாவும் அறவிடப்படுவதாகவும் உரிய சில்லறைக்காசு இல்லாவிட்டால் மீதிப்பணத்தினைப்பெற்றுக்கொள்வதிலும் ஏமாற்றப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொகவந்தலாவை – அட்டன் பிரதான பாதையில் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவையினரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் இ.போ.ச.பஸ்சேவைகளை அட்டன் பஸ் டிப்போ மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொகவந்தலாவை நகரின் உட்கட்டமைப்புக் குறைபாடுகள்

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவை நகரில் நீண்டகாலமாக உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் இந்த நகரில் வாழுகின்ற மக்களும் இந்த நகருக்கு வந்து செல்லுகின்ற மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொகவந்தலாவை நகர வர்த்தகர்களிடமிருந்து அம்பகமுவ பிரதேச சபையினால் பல்வேறு கட்டணங்கள் ,வரிகள் அறவிடப்படுவதாகவும் எனினும் இந்தப்பிரதேச சபையின் சேவை தமக்குத்திருப்பி கரமாக கிடைபப்தில்லையெனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக பொகவந்தலாவை பிரதான நகரின் வடிகான் கட்டமைப்பு முழுமையாக சீரற்ற நிலையிலுள்ளதாகவும் மழைக்காலங்களில் வெள்ள நீர் நகரை ஆக்கரமித்து விடுவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விடயம் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும் பொகவந்தலாவை நகரிலிருந்து மாவட்ட வைத்தியசாலைக்குச்செல்லுகின்ற வீதி ,பௌத்த விஹாரைக்குச்செல்லுகின்ற வீதி என்பன நீண்டகாலமாக செப்பனிடப்படாதுள்ளன. அத்துடன் பொகவந்தலாவை நகரில் பஸ்தரிப்பு நிலையமொன்றுமில்லை.பொலிஸ நிலையத்துக்கு முன்னால் பஸ்தரிப்பு நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டத்தொழிற்சங்கமொன்றின் அரசியல் பிரமுகர்களால் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதி வழங்கப்படுவதாகவும் தேர்தலுக்குப்பிறகு இந்த வாக்குறுதிகள் மீறப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மணிச்செய்திகள்

கவிஞர் எலியாசனின் நூல் வெளியீட்டு விழா ஹட்டனில் இடம் பெறவுள்ளது.
கவிஞர் எலியாசனின் ஆன்றெழுந்தால் விடுதலையாம் என்ற கவிதைத்தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 19 ஆம் திகதி காலை 10 மணி;க்கு அட்டன் -டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. அட்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் .எஸ்.முரளிதரன் தலைமையில்; இடம் பெறவுள்ள இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அட்டன் டிக்கோயா நகர சபைத்தலைவர் ஏ.நந்தகுமார் கலந்து கொள்ளவுள்ளார். இந்தக்கவிதை தொகுதியின் முதற்பிரதியை சட்டத்தரணி ஏ.பி.கணபதிப்பிள்ளை பெற்றுக்கொள்ளவுள்ளார். செங்கொடிச்சங்கத்தின் செயலாளர் நாயகம் ஓ.ஏ.இராமையா சிறப்புரையையும் கலாபூஷணம் சாரல் நாடன் நூலறிமுக உரையையும் மேலும் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணப்பிரகாசம் ,விரிவுரையாளர் ஏ.செல்வேந்திரன் ,ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.நேசமணி ஆகியோர் சிறப்புரைகளையும் கவிஞர் சி.ஏ.எலியாசன் ஏற்புரையையும் கலாபூஷணம் பி.எம்.லிங்கம் நன்றியுரையையும் ஆற்றவுள்ளனர்.

மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழவை முன்னிட்டு பாடசாலை மாணர்களுக்கிடையில் கட்டுரை ,கவிதை ,சித்திரப்போட்டிகள்


மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழாவினை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் கட்டுரை ,கவிதை ,சித்திரப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப்போட்டிகளில் வலய மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெறுவோருக்கும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தப்போட்டிகள் தொடர்பான சுற்று அறிக்கைகள் மத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் நுவரெலியா மாவட்டத்தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்து ஆலயங்களை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் : உதயகுமார் தெரிவிப்பு


நுவரெலியா மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படுகின்ற பட்சத்திலேயே இந்த ஆலயங்களின் பல்வேறு தேவைகளுக்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படாமலுள்ளன. இதன் காரணமாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளையும் அரச திணைக்களங்களின் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படாமலுள்ள ஆலயங்கள் தொடர்பில் தனக்கு அறிவிக்கும் பட்சத்தில் அவற்றினை முறையாக பதிவு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் கீழ்த் தோட்டங்கள் உள்ளடக்கப்படவேண்டும் : கணபதி கனகராஜ்
பெருந்தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக கொண்டு வரக்கோரி மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றைச் சமர்பிக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை நிர்வாக கட்டமைப்புக்குள் சட்டரீதியாக இணைத்துக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் இந்தச் சபைகளுக்கு பெருந்தோட்ட பிரதேச மக்கள் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து வருகின்றனர். பெருந்தேட்ட குடியிருப்ப பிரதேசங்களை மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக இணைத்துக்கொள்ளும் பட்சத்தில் தோட்டப்பகுதி மலையக மக்களின் அபிவிருத்தியில் இச்சபைகள் பெரும் பங்களிப்பை நல்க முடியும் .இதனைக்கருத்திற் கொண்டே பெருந்தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக கொண்டு வரக்கோரிய ;பிரேரணையை மத்திய மாகாணத்தில் மத்திய மாகாணசபையில் சமர்பிக்கவுள்ளதாக கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹேவாஹெட்ட ருக்குட் இரண்டாமிலக்க தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

ஹேவாஹெட்ட ருக்குட் இரண்டாமிலக்க தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய மு.ப 9.00 மணிமுதல் 11.58 மணிவரை சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கிரியாகால நேற்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இன்று சனிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நவாக்கினி ஹோமம், தீபாராதனை, கங்கையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து என்பனவற்றைத்தொடர்ந்து எண்ணை காப்பு சாத்துதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ப+ஜைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 10.00 மணிமுதல் 11.58 மணிக்குள் ஸ்தூபி அபிஷேகமும், 12.00 மணிக்கு மஹாகுமம்பாபிஷேகம் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கபடும்.கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஹட்டன் தரவளை மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரம்ம ஸ்ரீ ச. சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெறும்.

மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழா தொட்ரபான ஊடகவியலாளர் சந்திப்பு ஹட்டனில் இடம் பெறவுள்ளது
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் அட்டனில் இடம் பெறவுள்ள மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணிக்கு அட்டன் சீடா வளநிலையத்தில்
இடம் பெறவுள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜாவின் பிரத்தியேக செயலாளர் துரைமதியுகராஜா அறிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கூட்டத்தில்
மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா தலைமையில் இடம் பெறவுள்ள இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மலையகப்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

நவசக்தி செயற்றிட்டத்தின் ஊடாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயத்தொழில் கடனுதவி

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நவசக்தி செயல்திட்டத்தினூடாக சுயத்தொழில்களை ஊக்குவிக்குமுகமாக பல்வேறு துறைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக பிரஜாசக்தி செயற்திட்ட முகாமையாளர் ஜி. நகுலேந்திரன் தெரிவித்தார்.
இந்தக்கடனுதவித் திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நவசக்தி சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவிகளை நாம் இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கு முன்னதாக, பிரஜாசக்தி நிலையங்களுக்கு உட்பட்ட பெருந்தோட்ட பிரதேசங்களிலிருந்து இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான செயலமர்வுகள் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்; ஆலோசகரால் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் முதல் கட்ட நிகழ்வாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 75 இளைஞர் யுவதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக பதுளை, மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 68 இளைஞர் யுவதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 72 இளைஞர் யுவதிகளுக்கும், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் மக்கள் வங்கியினூடாக சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவி வழங்கப்பட்டது. நான்காம் கட்டமாக நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளுக்கு செயலமர்வு நடாத்தப்பட்டு சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இக் கடன் உதவியானது சிறுகைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்றது. அவர்களின் சுயத்தொழில் கோரிக்கைகளுக்கு அமைவாகவே அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இச் சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவியானது கடன் பெறுநரின் சொத்து அடமானமற்ற குறைந்த வட்டியிலான கடனுதவியாகவே வழங்கப்படுகின்றது. மீளச்செலுத்தும் கடன் தொகையானது மூன்று மாதங்களின் பின்னரே அறவிடப்படுகின்றது. ஐந்தாம் கட்டமாக கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் பாற் கிராமங்களை அமைக்கும் நோக்கத்துடன் அமைச்சுடன் இணைந்து நவசக்தி செயல்திட்டமும் செயற்பட்டுவருகின்றது. மேலும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் பிரஜாசக்தி நிலையங்களுடாக பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக மேலும் கால்நடைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. கால்நடை வளர்ப்பினை சுயத்தொழிலாக தெரிவுசெய்யும் இளைஞர் யுவதிகளுக்கு கண்டி மாபெரிதென்ன கால்நடை பயிற்சி நிலையத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. நவசக்தி செயல்திட்டத்தினூடாக கால்நடைகளை பெற்றுக்கொடுப்பதுடன், அமைச்சினூடாக கால்நடை வளர்ப்பு தொழுவங்களை அமைப்பதற்காக குறிப்பிட்டதொரு தொகையும் பெற்றுக்கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 200 இளைஞர் யுவதிகள்; தெரிவுசெய்யப்பட்டு கால்நடை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகளும், நவசக்தியினூடாக முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதில் 112 இளைஞர் யுவதிகள் சுயத்தொழில் கடனுதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டனர். இதன் முதன் நிகழ்வாக ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின்; 98வது ஜனனதின வைபவத்தினத்தன்று கொட்டகலை கலாசார மண்டபத்தில் 50 கால்நடைகள் சுயத்தொழில் ஊக்குவிப்பிற்காக வழங்கப்பட்டன.

புதன், 15 செப்டம்பர், 2010

கோவில் நிர்மாணப்பணிகளுக்கு சீமெந்து பைக்கற்றுக்கள் விநியோகம்.

கொத்மலைப்பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதி கோவில்களின் நிர்மாணப்பணிகளுக்காக சீமெந்து பைக்கற்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இ.தொ.கா.வின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஷ் தெரிவித்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப பொருளாதார பிரதியமைசச்ர் முத்துசிவலிங்கத்தின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட சீமெந்து பைக்கற்கள் கொத்தமலை பிரதேச சபைக்கு உட்பட்ட கோயில்கள் சிலவற்றின் நிருமாணப்பணிகளுக்காக
விநியோகிக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

வறிய குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் விநியோகிக்க நடவடிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் சிபாரிசுக்கேற்ப மத்திய மாகாண வீடமைப்புத்திணைக்களத்தினால் ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்தின் ஊடாக தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் காலங்களில் மத்திய மாகாண வீடமைப்பு திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற வறிய குடும்பங்களுக்கு இலவசமாக கூரைத்தகரங்களைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்திய உதவி தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சுயத்தொழில் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

நுவரெலியா மாவட்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து தொழிற்பயிற்சிக்காக சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் ஒரு பகுதியை ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸராவைச் சந்தித்து கையளித்துள்ளார். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு கணனி மற்றம் சுயத்தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கண்டி உதவி இந்திய தூதுவர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக
மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

இ.தொ.கா.வுடன் இணைந்து கொண்ட கணபதிகனகராஜுவுக்கு அரசியற்பிரின் உதவிச்செயலாளர் பதவி

மத்திய மாகாணசபையின் உறுப்பினர் கணபதி கனகராஜிக்கு இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் அரசியற்பிரிவு உதவிச்செயலாளர் பதவி இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக ,கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினால் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளராகவிருந்த கணபதி கனகராஜ் அந்த முன்னணியிலிருந்து விலகி அண்மையில் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{டன் இணைந்து கொண்டமைக்குறிப்பிடத்தக்கது. அதே வேளை இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச்செயலாளராகவிருந்து அந்த முன்னணியிலிருந்து விலகி இ.தொ.கா.உடன் இணைந்து கொண்ட அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரத்திற்கு இ.தொ.கா.வின் உதவிச்செயலாளர்களில்
ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி அமைச்சு – கல்விக்காகவா? கட்சி அரசியலுக்காகவா? பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஆவேசம்

மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்த்pய மாகாணத்துக்கு என வழங்கப்பட்டுள்ள தமிழ் கல்வி அமைச்சு மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றக்கூடிய பணிகளை விடுத்து கட்சி அரசியலை முன்னெடுப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருவதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆசிரியர் இடமாற்றங்கள் பதவியுர்வுகள் வழங்குவதில் நிலவும் குளறுபடிகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்திய ஊவா மாகாண சபைகளுக்கு கீழாக வேறு எந்த துறைக்குமென அல்லாது தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு என கல்வி அமைச்சு ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. திறனற்ற செயற்பாடுகளால் ஊவா மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு எமது கையை விட்டுச் சென்று பல வருடங்களைக் கடந்து விட்டன. இன்று மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி அமைச்சு செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கு ஏற்பட்ட நிலை மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் நிலவுகின்றது.
ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த அமைச்சில் அரசியல் தலையீடுகள் இருந்து வந்தபோதும் கடந்த பொதுத் தேர்தலோடு முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட கட்சிசார்ந்த அமைச்சாக அதன் செயற்பாடுகள் மாற்றம் அடைந்து வருவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தை விட குறைவான தமிழ் சனத்தொகை கொண்ட கண்டி , மாத்தளை மாவட்டங்களில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டபோதும் கூட நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தமிழ்மொழிமூல பாடசாலை கூட தேசிய பாடசாலையாக தரமுயரத்தப்படவில்லை. இது மத்திய மாகாண கல்வியமைச்சு தமது கட்சி சார்ந்த அதிகார பிடியில் பாடசாலைகளையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் வைத்துக்கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகும். கண்டி மாத்தளை மாவட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளதனால் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளை கல்வியமைச்சின் ஊடாக இ.தொ.கா தமது கட்சி கூடாரமாக மாற்றியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பாடசாலை நேரங்களில் அதிபர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பிரசார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். இதில் தகைமையில் குறைவாக இருந்துகொண்டு உயர் பதவிகளைப் பெறுவதற்காக அரசியல் தூபம் போடும் சில ஆசிரியர்கள் அதிபர்கள் ஈடுபட்டது உண்மையே. அதே நேரம் தமக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட நேர்ந்த பல அதிபர்கள் ஆசியரியர்கள் இன்று இ.தொ.கா சார்பானவர்களாக மாறி செயற்பட வேண்டியவர்களாக மாறிப்போயுள்ளனர். மத்திய மாகாணத்தமிழ்க் கல்வியமைச்சர் ஒரு பிரதியமைச்சர் போலவும் அதற்கான பிரதான அமைச்சராக மத்தியில் உள்ள கால்நடை, கிராம அபிவிருத்தி அமைச்சரே செயற்படுவதாகவுமே தெரிகிறது. அதிபர், ஆசியரியர்கள் இடமாற்றத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் தலையிடுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனைக்கும் உரியதமாகும். மலையக கல்விக்கு வரப்பிரசாதமாக கிடைத்த அரிய வளங்களும் மூலங்களும் தனிப்பட்ட கட்சி சார்ந்த நலன்களுக்கு பயன்படுத்தப்படுவது மலையகத்தில் வளர்ந்து வரும் கல்வித்துறைக்கு பாரிய சவாலாக அமைந்துவிடும்.

தொழிலாளர்களைப் போன்று ஆசியர்களும் கட்சி அரசியல் மயப்படுவது ஆரோக்கியமானதல்ல. அமைச்சர்களின் ஆள் மாற்றத்துக்கு ஏற்ப தாங்களும் தம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது. கல்வித்துறையினர் அரசியலில் ஈடுபடலாம். ஈடுபடவும் வேண்டும். அது ஒட்டுமொத்த மக்களுக்கான தூரநோக்க அரசியல் இலக்குகளை அடைவதற்கானதாக இருத்தல் வேண்டும். தமது பதவிகளை தக்கவைத்து கொள்வதற்கான கட்சி சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது. மலையகத்தில் கட்சி அரசியல் மயப்படுப்படுத்தப்பட்ட பாடசாலை நிர்வாகங்களுக்கு எதிராக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தற்போது கிளர்ந்தெழ தொடங்கிவிட்டனர். இந்த போக்குகள் பாடசாலைகளின் நாளாந்த நிர்வாகத்தில் இடையூறாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் இறுதியாக பாதிக்கப்படப்போவது மாணவர் சமூகமே. எதிர்கால மலையகமே. நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவும் கட்சி அரசியல் செயற்பாடுகள் தொடருமானால் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி போராட தயங்கமாட்டேன், எனவம் தெரிவித்துள்ளார்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

கண்டி உதவி இந்திய தூதுவர் மலையக வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் : முரளிரகுநாதன் தகவல்

டிக்கோயா கிளங்கன் மற்றும் மஸ்கெலியா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற தேவைப்பாடுகளை குறித்து அறிந்து கொள்வதற்காக கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா எதிர்வரும் 19 ஆம் திகதி தனது வேண்டு கோளுக்கிணங்க விஜயம் செய்யவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காஙிகரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் நிருமாணப்பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி இந்திய உதவி தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கூரை உடைந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

கூரையின் மீது நின்று கொண்டு தொலைபேசி கம்பியை உயர்த்திய நபரொருவர் அந்தக்கூரை திடீரென உடைந்ததால் கீழே தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்வமொன்று இன்று 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கொட்டகலை நகரின் ட்ரைட்டன் பஜாரில் இடம் பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு தேர் பவனி இன்று கொட்டகலை நகரூடாக இடம் பெற்றது.இதன்போது கொட்டகலை ட்ரைட்டன் பஜாரில் உள்ள மில்கோ பால்சேகரிப்பு நிலையத்துக்கு அருகில் தேர்பவனி வந்துள்ளது.இதன் போது தேரின் கோபுரத்தில் தொலைபேசி கம்பி ஒன்று உரசும் நிலையில் இருந்ததால் மில்கோ பால் நிலையத்தில் தொழில் புரிகின்ற ஒருவர் அந்த நிலையத்தின் கூரையின் மீது ஏறி தொலை பேசி கம்பியை தடி ஒன்றின் உதவியுடன் உயர்த்துவதற்கு எத்தனித்துள்ளார். இந்த வேளையில் எஸ்பெஸ்ட்ரோ கூரையானது திடிரென உடைந்ததில் கூரையில் மேலிருந்தவரும் திடீரென கீழே விழுந்துள்ளார்.இதன் போது இவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவரைப் பொதுமக்கள் உடனடியாக கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது வழியில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கொட்டகலை மாவட்டவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில்
பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டகலை ட்ரைட்டன் கே.ஓ. தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத்தந்தையான நடராஜ் சுதாகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சனி, 11 செப்டம்பர், 2010

கொத்மலையில் கற்பாறைகள் புரண்டு விழும் அபாயம் : ஐந்து குடும்பங்கள் இடம் பெயர்வு


நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்ஹேவா கிராமப்பகுதி மலைக்குன்றிலிருந்து பாறைக்கற்கள் இரண்டு உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சிலர் பாதுகாப்பான இடமொன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ தெரிவித்தார். இந்தப்பாறைக்கற்கள் உருண்டு விழும் பட்சத்தில் 5 குடும்பங்கள் பாதிப்படையக்கூடிய அபாய நிலையிலுள்ளதால் இந்தக்குடுப்பங்களைச்சேர்ந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கு கொத்மலைப்பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்டச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

வாக்களித்த மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் பாராளுமன்றில் தனித்துச்செற்படுவேன் : வி.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவிப்பு

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் என்னுடன் எந்த விதமான தொடர்பையும் பேணாத போது என்னைத்தொடர்ந்து ஒதுக்கி வைக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதால் எனக்கு வாக்களித்த மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் தனித்துச்செயற்படுவேன் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இலஙக்கைத்தொழிலாளர் காங்கிரஸைச்சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியுடன் இணையப்போவதாகவும் அதன் பின்பு அவ்வாறு இணையப்போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் மறுப்புத் தெரிவித்திருந்தார் .இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போதைய அவரின் அரசியல் செயற்பாடுகள் குறித்து கேட்டப்போதே மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் :
நான் இ.தொ.கா.விலிருந்து மலையக மக்கள் முன்னணியுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல் தான் இ.தொ.கா.வுக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடென்று சிலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அவ்வாறில்லை.என்னவெனின் பொதுத்தேர்தல் முடிந்து குறுகிய காலத்துக்குள்ளேயே நான் இ.தொ.கா.விலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டேன்.ஜனாதிபதி அமைச்சுப்பதவி வழங்கிய போது நான் எனக்கும் பிரதி அமைச்சுப்பதவி ஒன்றைப்பெற்றுத்தருமாறு இ.தொ.கா.வின் உயர்பீடத்திடம் கேட்டிருந்தேன்.இவ்விடயம் தொட்ரபாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுமில்லை எனக்கு பதிலளிக்கவுமில்லை. ஆனால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு நெருக்கமான ஒருவரிடம் எனக்கு எவ்விதத்திலும் பிரதி அமைச்சுப்பதவி ஒன்றைப்பெற்றுத்தர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
நான் அவரிடம் பிரதி அமைச்சுப்பதவி கேட்டதால் என்னை ஓரங்கட்ட நினைத்து இ.தொ.கா.வின் எந்த விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை.மத்திய மாகாணத்தில் நான் பலவருடங்களாக அமைச்சராகவிருந்த அனுபவமிருந்ததால் தான் எனக்கு வாக்களித்த மக்களுக்குச்சேவை செய்வதற்காக அமைச்சுப்பதவி கேட்டேன்.இதுதான் நியாயம்.இதற்காக என்னை ஓரங்கட்டி விடடார்கள்.இந்த நிலையில் இ.தொ.கா.வுடன் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கு பலமுறை முயற்சித்தப்போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கத்திடமும் இதப்பற்றி தெரிவித்த போதும் எவ்வித பதிலும் கிடைக்கவி;ல்லை.இ.தொ.கா.வுக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.


இவ்வாறானதொரு நிலையில் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் என்னை சந்திக்க விரும்பினார்.இந்தச்சந்திப்பின் போது மலையக மக்கள் முன்னணியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுங்கள் என்று எனக்கு அவர் அழைப்பு விடுத்தப்போது நான் எனக்கு வாக்களித்த மக்களுடன் பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தேன்.இதனை ஊடகங்கள் நான் மலையக மக்கள் முன்னணியுடன் இணையப்போவதாக செய்தி வெளியிட்டு விட்டன.எனக்கு அவ்வாறானதொரு எண்ணமிருக்கவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்றில் நான் தன்னிச்சையாக செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்காக திட்டமொன்றைச்செயற்படுத்தவுள்ளேன்.எனவே எனக்கு வாக்களித் மக்கள் எவருக்கும் அஞ்சத்தேவையில்லை.என்னுடன் எப்போதும் தொடர்பு கொண்டு எனது சேவையைப்பெற்றுக்கொள்ள முடியும்.என்று தெரிவித்தார்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

நுவரெலியா மாவட்ட வறிய குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் விநியோகம்










தொழிலாளர்
தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபையின் உறுப்பினருமான எம்.உதயகுமார் மத்திய மாகாண வீடமைப்புத்திணைக்களத்திற்கு வழங்கிய சிபாரிசுக்கேற்ப நுவரெலியா மாவட்டத்தைச்சேர்ந்த வறிய
குடும்பங்களைச்சேர்ந்த சிலருக்கு தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக்கூரைத்தகடுகளைப்பயனாளிகள் பெற்றுக் கொல்வதைப்படாங்களில் காணலாம். இந்தக்கூரைத்தகடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நுவரெலியா பிரதேச செயலகத்தில்இடம் பெற்றமைக்குறிப்பிடத்தக்கது.

புதன், 8 செப்டம்பர், 2010

அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டம்


18 ஆவது அரசியலமைப்புத் திருத்ததுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாவலப்பிட்டிய நகரில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
இன்று 8 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் நாவலப்பிட்டி நகர மத்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் 11 மணி வரை இடம் பெற்றது.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு எதிராகவும் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாவலப்பிட்டி பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

மத்திய மாகாண சாகித்திய விருதுக்கு விண்ணப்பம் கோரல்

அடுத்த மாதம் ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் அட்டனில் இடம் பெறவுள்ள மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழாவில் சாகித்திய விருதுகளுக்கான விண்ணப்பங்களைத் தகுதியானவர்களிடமிருந்து மத்திய மாகாணத்தமிழ்க்கல்வி மற்றும் இந்துக்கலாசார அமைச்சு கோரியுள்ளது. கலை ,சமூகசேவைகள் ,ஆன்மீகம் ,இலக்கியம் ,ஊடகம்,கல்வி ,விளையாட்டு உட்பட பிறதுறைகளில் தத்தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களும்; சிறந்த நூல்களை வெளியிட்டவர்களும் இந்த சாகித்திய விருதுக்கு அதற்குரிய விண்ணப்பப்படிவங்களை மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சில் பெற்று எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக சேவையாற்றுவேன் : உதயகுமார் தெரிவிப்பு











நுவரெலியா
மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்குத் தொடர்ந்து நேர்மையாக சேவையாற்றுவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்..உதயகுமார் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொட்டகலையிலுள்ள நுவரெலியா பிரதேச சபை தலைமைக்காரியாலய முன்றலில் பகிரங்காக காட்சிப்படுத்தியதன் பின்பு பயனாளிகளுக்கு வழங்கி வைத்துப்பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ,உபதலைவர் புண்ணியமூர்த்தி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன் ,நாகராஜ் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கியஸ்தர்களும் தோட்டக் கமிட்டித்தலைவர்களும் தோட்டத்தலைவர்களும் கலந்து கொண்டனர்..பத்தனை பொரஸ்கிரீக் , குயின்ஸ்பெரி வெஸ்ட் ,நானுஓயா டெஸ்போர்ட் லோன் டிவிசன் ,கிளாஸ்கோ மேற்பிரிவு ,தம்பத்தலாவ , தலவாக்கலை மட்டக்கெல ,கிரேட்வெஸ்டன் லுசா ,கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு ,எதன்சைட் மேற்பிரிவு ,லிந்துலை தங்ககெல ,சலாங்கந்த ,நுவரெலியா வெஸ்டோடா ,கந்தப்பளை டிவிசன் ஆகிய தோட்டங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயனாளிகள் பெற்றுக்கொண்டனர்.
எம்.உதயகுமார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகள் முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டினை அண்மைக்காலமாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணசபையில் எனக்கு ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபா நிதி முழுமையாக மக்களின் அபிவிருத்தித்திட்டங்களுக்குப்பயன் படுத்த வேண்டும்.இவ்வாறான நிதியொதுக்கீடுகள் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.மத்திய மாகாணத்தில் எமக்கு ஒதுக்குகின்ற நிதியானது சிறிய அளவாக இருந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு அதனை நேர்மையாக பயன்டுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் ,பிரதேச செயலகங்கள் ஊடாக பலவேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
இந்த வேலைத்திட்டங்கள் அந்தந்த நிறுவனங்கள் ஊடாக உரியர்களுக்கு ஒப்படைக்கப்படும்.அதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளுக்கு நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான பொருட்களே இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. என்னைப்பொறுத்த வரையில் நான் மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் மாத்திரம் மக்களுக்குச்சேவை செய்வதில்லை.எனது சொந்த நிதியின் மூலமாகவும் மக்களுக்குச் சேவை செய்து வருகின்றேன். அத்துடன்; நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை .அரசியல் தொழிற்சங்க பேதமின்றி மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக எமது தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்துடன் தோள் கொடுத்து சேவையாற்ற வந்துள்ளேன்., நாம் மலையகத்தின் கல்வி ,விளையாட்டு ,சுகாதாரம் ,சுயத்தொழில் போன்றனவற்றுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவோம். இதே வேளை நான் மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் பல அபிவிருத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய மாகாணசுகாதார அமைச்சு ஏற்க வேண்டுமென நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவ்விடயம் குறித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன் மத்திய மாகாணசபையில் எனது கோரிக்கைக்கேற்ப தோட்டப்பகுதிகளுக்கான மின்சார இணைப்புக்காக 25 இலட்சமும் குடிநீர் விநியோகத்திற்காக 8 இலட்சமும் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் நான் சுட்டிக்காட்டிய சில பாதைகளைச்செப்பனிடுவதற்கும் மத்திய மாகாணசபையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தப்பொதுத்தேர்தலில் எனக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் அளித்த போதும் எனது வெற்றி மயிரிழையில் இல்லாமல் போய் விட்டது.எனினும் எனது மாகாணசபை பதவியின் மூலம் வாக்களித்த மக்களுக்கு நான் நேர்மையாக சேவை செய்வேன்.

பொகவந்தலாவை சென்மேரிஸ் நிருவாகத்திற்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டம்

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களும் மாணவர்களும் பெற்றோரின் ஒரு பகுதியினரும் இன்று 7 ஆம் திகதி கவனீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்தக்கல்லூரியின் நிருவாக சீர்கேடுகளையும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் வீழ்ச்சியையும் ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டியே இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஈடுபட்டனர். இதே வேளை இந்தக்கல்லூரியின் மாணவர்கள் நேற்று வகுப்பறைக்குச்செல்லாது மைதானத்தில் கூடியிருந்தனர். இந்த நிலையில் பழைய மாணவர்கள் கல்லூரியில் காணப்படுகின்ற சீர்கேடுகள் தொடர்பாக
சுட்டிக்காட்டி கல்லூரியின் அதிபருடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு
வகுப்பறைகளுக்குச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச்சம்பவத்தைக்கேள்வியுற்ற பொகவந்தலாவைப் பொலிஸார் கல்லூரியின் வளாகப்பகுதியில் விசேட பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்தச்சம்பவம் தொடர்பில் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு இந்தச்சம்பவம் தொட்ரபாக ஆராய்வதற்காக கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை இந்தக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொகவந்தலாவை நகர வர்த்தகர்கள் சிலர் கதவடைப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

18 ஆம் அரசியல் சீர்த்திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கவுள்ள 18 ஆம் அரசியல் சீர்த்திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபை நடவடிக்கைகளிலிருந்து வெளி நடப்பு செய்ததாக ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

நுவரெலியா தோட்டப்பகுதி மக்களின் நலன் கருதி அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு :மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை
சம்பந்தப்பட்டவர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு நாளை 7 ஆம் திகதி முற்பகல் 11.௩0 மணியளவில் கொட்டகலையில் இடம் பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கியஸ்தர்களும் தோட்டக் கமிட்டித்தலைவர்களும் தோட்டத்தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். பத்தனை பொரஸ்கிரீக் , குயின்ஸ்பெரி வெஸ்ட் ,நானுஓயா டெஸ்போர்ட் லோன் டிவிசன் ,கிளாஸ்கோ மேற்பிரிவு ,தம்பத்தலாவ , தலவாக்கலை மட்டக்கெல ,கிரேட்வெஸ்டன் லுசா , கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு ,எதன்சைட் மேற்பிரிவு ,லிந்துலை தங்ககெல ,சலாங்கந்த ,நுவரெலியா வெஸ்டோடா ,கந்தப்பளை டிவிசன் ஆகிய தோட்டங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டமொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமைக்காலை 10 மணிக்கு அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இடம் பெறவுள்ளதாக இலங்கைத்திறந்த பல்கலைகழகத்தின் சமூக கற்கை துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். அட்டன் நகரின் மல்லியப்பூ பகுதியில் இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனினும் பல்வேறு காரணங்களால் இந்த நிலத்தில் கட்டிடமொன்றினை அமைக்கப்பட முடியாத நிலைமை கடந்த பல வருடங்களாக ஏற்பட்டது.இந்த நிலையில் இந்த நிலத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களை அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஆர்வமுள்ளவர்களுடன் கலந்துரையாடும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் : முரளிரகுநாதன் தெரிவிப்பு

கண்டி மாவட்டத்தலுள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு உட்பட்ட தோட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலுள்ள தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து ஊழியர் சேமலாபநிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி போன்றன அறவிடப்படுகின்ற போதும் இவை உரிய நிதி நிறுவனங்களில் வைப்புச்செய்யப்படுவதில்லையென பாதிக்கப்பட்டத் தோட்டத்தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிதியினைப்பெற்றத்தருமாறு இப்பகுதித்தோட்டத்தொழிலாளர்கள் கடந்த காலங்களில் பல்வேறு கவனயீர்ப்புப்போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.எனினும் இதுவரை தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவில்லை.இவ்வாறானதொரு நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் மேலம் தெரிவித்தார்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தோட்டப்பகுதி விளையாட்டு மைதானங்களைச் செப்பனிடக்கோரிக்கை

பொகவந்தலாவை கொட்டியாக்கலைத் தோட்ட பொது விளையாட்டு மைதானத்தினை உரிய வகையில் செப்பனிட்டுத்தருவதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுத்தேர்தல் இடம் பெற்ற காலத்தில் இந்த மைதானத்தினைச் செப்பனிடுவது போல குறிப்பிட்ட தொழிற்சங்கமொன்று பாசாங்கு செய்ததாகவும் தேர்தலுக்குப் பின்பு இந்த விளையாட்டு மைதானம் செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் கொட்டியாக்கலைத்தோட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் டிக்கோயா வனராஜா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றினையும் பொதுத்தேர்தல் காலத்தில் செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தலுக்குப்பிறகு இந்தச்செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சனி, 4 செப்டம்பர், 2010

ஜனாதிபதி கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டிகளின் நுவரெலியா மாவட்டத்தற்கான இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம் பெறவுள்ளன.



அரச நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு நாடாத்தப்படுகின்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் நுவரெலியா மாவட்டத்திற்கான இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முற்பகல் 10
மணிக்கு நுவரெலியா மாநகரசபை உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது. அரச நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவின் ஆலோசனைக்கேற்ப இலங்கைக் கரப்பந்தாட்டச்சங்கத்தின் அனுசரணையுடன் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்தச்சுற்றுப்போட்டிக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து 253 ஆண்கள் கரப்பந்தாட்டக் குழுக்களும் 81; பெண்கள் கரப்பந்தாட்டக்குழுக்களும் தெரிவாகியுள்ளன. இந்தச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகளுக்கு நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப்பிரிவு மட்டங்களில் முதலாமிடத்தினைப்பெற்றுள்ள ஆண்கள் கரப்பந்தாட்டக்குழுக்கள்; ஐந்தும் பெண்கள் கரப்பந்தாட்டக்குழுக்கள் ஐந்தும் பங்கு பற்றவுள்ளன. இந்தக் கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி;.பி .இரத்நாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் கே.என்.சுனந்த பியஸ்ரீ அறிவித்துள்ளார்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

பதுளையில் இரத்த தான நிகழ்வு









அமரர் சௌமியமூர்த்தித் தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு பதுளை மாவட்ட இ.தொ.கா.வின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் பதுளை மாவட்ட இளைஞரணி அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்

இ.தொ.கா.வின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமா அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டம் ? தொ.தே.சங்கத்தின் முக்கியஸ்தர் கேள்வி

கொட்டகலை மற்றும் பத்தனை பிரதேச தோட்டங்களில் அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டங்கள் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுமென்று பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனைப் பிரதேச கிளைச்செயலாளர் என்.ஆர்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் புதிய வீடமைப்புத்திட்டங்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான வீடமைப்புத்திட்டங்கள் இ.தொ.கா.வின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுமென்று தோட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏனைய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கொட்டகலை ரொசிட்டாத்தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாடிவீட்டுத்திட்டத்தில் இந்தத்தோட்டத்தில் வீடில்லாதவர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை.இவ்விடயங்கள் குறித்து அரசாங்கம் உரிய நடவடி;ககை எடுக்க வேண்டும்.

காச்சாமலைத்தோட்ட நிருவாகத்தின் கெடுபிடிகள் குறித்து முரளிரகுநாதன் விசனம்


கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட காச்சாமலைத்தோட்ட நிருவாகம் தொழிலாளர்கள் தொடர்பில் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
காச்சாமலைத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது வீட்டுத்தோட்டத்தில் வாழைமரம் ஒன்றை நாட்டியமைத்தொடர்ந்து அதே தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரால் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் தோட்டத்திலுள்ள மரக்கன்றொன்றினை வெட்டியதாகத் தெரிவித்து பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் தோட்ட உதவி அதிகாரி முறைப்பாடு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிஸார் குறிப்பிடத்தொழிலாளி மீது சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸாருடன் நான் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினேன்.இந்த நிலையில் குறிப்பிடத்தோட்டத்தொழிலாளிக்கு தோட்டத்தில் வேலை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் மறுப்புத்தெரிவித்துள்ளது. இவ்வாறு தோட்டத்தொழிலாளியின் மீது தோட்ட நிருவாகம் மேற்கொள்கின்ற கெடுபடிகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது இவ்விடயம் குறித்து தொழிற்திணைக்களத்திடம் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளேன்.

பொகவந்தலாவை தோட்ட மக்களுக்குத் தபால் சேவை சீரில்லை

பொகவந்தலாவை தோட்ட மக்களுக்கு உரியவகையில் தபால் விநியோகம் இடம் பெறாத காரணத்தினால் இந்தத்தோட்ட மக்கள் தமக்குரிய கடிதங்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொகவந்தலாவைப்பிரதேச தோட்டங்கள் சிலவற்றில் மாத்திரமே தபால் ஊழியர்களால் நேரடியாக தபால் விநியோகம் இடம் பெறுகின்றது.எனினும் சிலத்தோட்டங்களில் தோட்ட நிருவாகத்தினால் நியமிக்கப்படுகின்ற ஊழியர்கள் மூலமாகவே தபால் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.இந்த நிலையில் பொகவந்தலாவைத் தோட்டத்தில் இவ்வாறு ஒரு ஊழியர் கடந்த இரண்டு வருடங்களாக நியமிக்கப்படாததால் இந்தத்தோட்ட மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் உரியநேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து தபால் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொகவந்தலாவைத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தில் மருத்துவ சேவைகள்சீரில்லை : தோட்ட மக்கள் புகார்













சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தைச்சேர்ந்த நான்கு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்களுக்கான வைத்தியசேவைகள் உரிய வகையில் கிடைப்பதில்லையென தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பபி.திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ட்ரஸ்பி தோட்டத்திலுள்ள மருந்தகத்தின் மூலமாக மாதத்தில் 15 நாட்களுக்கு மாத்திரமே தோட்ட மருத்துவ உத்தியோகஸ்தரின் சேவை கிடைப்பதாகவும் முக்கிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் தோட்ட மக்கள் மேலும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அட்டன் பிராந்திய நிறுவனத்துடன் தான் தொடர்பு கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

அட்டனில் பாற்பொருள் விற்பனைக்கூடம்

கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் அட்டன் பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உற்பத்திப்பொருள் விற்பனைக்கூடமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனைக்கூடத்தினை கால்நடை அபிவிருத்தி ,சமூக ,கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பிற்கேற்ப பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண திறந்து வைத்ததன் பின்பு நுகர்வோர் ஒருவருக்கு பொருட்களை சம்பிரதாயப்பூர்வமாக விற்பனை செய்தார்.