ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பாரதிதாசனை சந்தித்தார் முரளிரகுநாதன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய மாகாண பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் கண்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் பாரதிதாசனை ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் இன்று சந்தித்துப்பேசியுள்ளார்.
இதே வேளை பாரதிதாசனின் கைது தொடர்பாகவும் மலையகத்தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அரசியற்பிரிவு முதன்மைச்செயலாளரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அயடின் பரிசோதனை நாளை முதல் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் உடலில் காணப்படுகின்ற அயடின் கொள்ளவை பரீட்சிப்பதற்கான வேலைத்திட்டமொன்று நாளை முதல் ஆரம்பம்.
இதற்கேற்ப நாடளாவிய ரீதியில் கல்வி வலயங்கள் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களிடத்தில் இந்தத்திட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.இதன் படி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களிடத்தில் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு இந்த மாணவர்கள் வீட்டில் பயன்படுத்துகின்ற உப்பு வகை குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.இந்த ஆய்வின் போது மாணவர்களின் அயடின் பயன்பாடு குறைத்த தகவல்கள் திரட்டப்படவுள்ளன.இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக 48 பொதுசுகாதார பரிசோதகர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

சனி, 30 அக்டோபர், 2010

தலவாக்கலை த.ம.வித்தியாலயத்துக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியால் மினிபஸ் : திகாம்பரம் எம்.பி ஏற்பாடு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இந்திய அரசாங்கத்தினால் மினி பஸ் ஒன்று வழங்கப்படவுள்ளது. இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக தலவாக்கலைத்தமிழ் மகா வித்தியாலய நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கும் வைபவமொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் ,இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் .கே.காந்தா ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ,பிரதிச்செயலாளர் எம்.திலக்ராஜ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

கஞ்சா வர்த்தகர் நாவலப்பிட்டியவில் கைது

நாவலப்பிட்டிய நகரப்பகுதியில் வாழுகின்ற கோடிஸ்வர கஞ்சா வியாபாரி ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கண்டி ,கம்பளை ,நாவலப்பிட்டி ,கினிகத்தேனை மற்றும் அட்டன் பிரதேசங்களைச்சேர்ந்த தோட்டப்பகுதிகளில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இந்த கோடிஸ்வர வர்த்தகரைப் பொலிஸார் கைது செய்த போது அவர் 76 பவுண் தங்காபரணங்களை உடலில் அணிந்திருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கோடிஸ்வரவ வர்த்தகர் தொடர்பில் பொலிஸாருக்குக்கிடைத்த தகவல்களைத்தொடர்ந்து இவரின் நடவடிக்கைகள் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த வர்த்தகர் தனது சொகுசு வாகனத்தில் கஞ்சா பொதியொன்றை மறைவாக எடுத்துச்சென்று தனது மாடிவீட்டில் வைப்பதற்கு முற்பட்ட சமயத்தில் மறைந்திருந்த பொலிஸ் குழு இவரை கஞ்சா பொதியுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனமல்;வில , எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளிலிருந்து இவருக்கு கஞ்சா விநியோகிக்கப்படுவதாகவும் இந்தக் காஞ்சாவை விநியோகிப்பதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருசிலரின் தொடர்பும் இவருக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்குக் 2 கிலோ கஞ்சா கொண்டு வந்த இராணுவ வீரர் ஒருவரை அண்மையில் நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தமைக்குறி;பிடத்தக்கது. இதே வேளை மேற படி கஞ்சா வர்த்தகரை நேற்று 28 ஆம் திகதி நாவல்பபிட்டி நீதிமன்றில் நாவலப்பிட்டி பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வியாழன், 28 அக்டோபர், 2010

ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணத்தமிழ் மாணவர்களின் பெறுபேறு மட்டம் உயர்வு : அனுஷியா சிவராஜா

கடந்த வருடங்களை விட இம்முறை ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணத் தமிழ் பாடசாலை மாணவர்களின் பெறுபேறு உயர்வு நிலையை அடைந்துள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.
இம்முறை ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா ,மாத்தளை ,கண்டி ஆகிய மாவட்டங்களில் சித்திப்பெற்ற தமிழ் மொழிமூல மாணவர்களுக்குப் பதக்கம் அணிவித்து பாராட்டும் விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இன்று 28 ஆம் திகதி இடம் பெற்ற இந்த விழாவில் மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். இந்த விழாவில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்காரம் பொன்னையா ,ராம் ,மத்திய மாகாணத்தமிழ்க் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ,உதவிச்செயலாளர் திருமதி சத்தியேந்திரா ,அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் ,நுவரெலியா கல்வி வலயத்தின் மேலதிகக்கல்விப்பணிப்பாளர் இராஜசேகர் ,சீடா தகவல் நிலையப்பொறுப்பாளர் விஜயானந்தன் உட்பட கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
தேசிய மட்டப்பரீட்சை ஒன்றில் மலையகத்தமிழ் பாடசாலை மாணவர்களும் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.கடந்த வருடங்களைவிட மத்திய மாகாணத்திலுள்ள நுவரெலியா ,கண்டி ,மாத்தளை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் மாணவர்கள் இந்த ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளின்; அடிப்படையில் கணிசமானோர் சித்திப்பெற்றுள்ள அதே வேளை 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மத்திய மாகாணத்தில் ஆரம்பக்கல்வி வளர்ச்சியைக் காட்டுகின்றது.இதற்காக பாடுபடுகிக்னற கல்வி அதிகாரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குளுக்கு எனது வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒரு காலத்தில் எமது பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தை தோட்டக்காட்டான் ,பட்டிக்காட்டான் ,படிப்பறிவில்லாதவன் என்றெல்லாம் இழிவு படுத்தினார்கள். ஆனால் இன்று எமது சமூகம் ஏனைய சமூகத்துக்கு சளைத்தவர்களில்லை என்பதை பறைசாற்றி வருகின்றது. 1979 ஆம் ஆண்டு முதல் எமது பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாரளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்த காரணத்தினால் தான் எமது மலையகத்தமிழ்ச் சமூகத்துக்கு இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் சங்கமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.அன்று முதல் எமது சமூகம் படிப்படியாக முன்னேறி வருகின்றமையை யாராலும் மறுக்க முடியாது.இன்று எமது அரசியல் பலத்தினால் இந்த மலைகத்தமிழ்ச் சமூகத்திற்கு எவ்வளவோ வளங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.
அதனொரு வெளிப்பாடாகவே இன்று கல்வித்துறையில் எம்மவர்கள் ஓரளவு சாதனைப்படைத்துக்கொண்டும் பல்வேறு துறைகளில் தடம் பதித்துக்கொண்டும் வருகின்றனர்.இவை அனைத்தும் ஒரு பின்தங்கிய சமூகம் என்ற அடிப்படையில் நோக்கும் போது சடுதியாக முன்னேறி வருகின்றோம்.இந்த நிலையில் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களை பாராட்டுவதன் மூலமாக அவர்கள் தொடர்ந்து கல்வியின் பால் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் ஏனைய மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துவதற்குமாகவே இந்தப் பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளோம்.இதே போல க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை என்பனவற்றிலும் எமது மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் .இதற்கு பெற்றோரின் பங்களிப்பும் இன்றியமையாதது

செவ்வாய், 26 அக்டோபர், 2010

நோயாளர் நலன் கருதி பஸ் சேவை : முரளிரகுநாதன் ஏற்பாடு

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் பார்வை நேரங்களில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக செல்லுபவர்களின் நலன் கருதி அட்டன் பஸ் டிப்போவினால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து சேவை ஒன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.
மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் பத்துல யாலேகமவிடம் தான் விடுத்த கோரிக்கைக்கேற்பவே இந்த பேருந்துச்சேவை இடம் பெறவுள்ளது.இதன் படி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடுகின்ற காலப்பகுதியில் அட்டனிலிருந்து நோர்வூட்டுக்கும் நோர்வூட்டிலிருந்து கிளங்கனுக்கும் இந்தப் பஸ்சேவைகள் இடம் பெறவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் மேலும் தெரிவித்தார்.

திங்கள், 25 அக்டோபர், 2010

தோட்டப்பகுதி வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படும் : பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

புசல்லாவை பிரதேசத்திலுள்ள புரொட்டொப் தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் தமது வைத்திய தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்வதில் கடந்த காலங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தத்தோட்டத்தில் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு உடனடியாக பிரசவம் பார்ப்பதற்கான வசதி கிடைக்காத காரணத்தினால் தோட்ட லொறியில் புசல்லாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த கர்ப்பிணித் தாய்க்கு செல்லும் வழியில் லொறியினுள்ளேயே பிரசவம் ஏற்பட்டு பிறந்த சிசு உடனடியாக உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதே வேளை இந்தப்பிரதேசத்தில் உரிய வைத்தியசாலை வசதியின்மையால் பிரதேச நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்டிருந்த புரொட்டொப் பிரதேச வைத்திய சாலை கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படாமலிந்தன.
இவ்விடயம் குறித்து ஊடகங்கள் வாயிலாக செய்திகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப புசல்லாவை புரொட்டொப் வைத்தியசாலை பொது மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த வாரம் திறந்த வைக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :
அடிப்படை வசகளின்றி இருக்கின்ற தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொற்பேற்று வசதிகளுடன் நடத்த வேண்டும் என்பது அமரர் சௌமியமூர்த்தித் தொண்டமானின் எண்ணமாகவிருந்தது. இவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள 53 வைத்தியசாலைகளைத்தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.இதனடிப்படையிலேயே தோட்ட வைத்தியசாலைகள் தற்போது தரமுயர்த்தப்பட்டு வருகின்றன. .இந்த நிலையில் தோட்ட மக்களுக்கு மருந்து கொடுக்கின்ற நிலையமாகவிருந்த புரொட்டொப் வைத்தியசாலை இன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசகை;கேற்ப சகலவசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்தப்பட்டுள்ளது.இந்த வைத்தியசாலையை மத்திய மாகாண சுகாதார அமைச்சு நிருவகிக்கவுள்ளது.எனவே இந்த வைத்தியசாலையின் மூலம் பிரதேச மக்கள் உரிய பலனைப்பெற்றுக்கொள்ள வேண்டும்.இதேவேளை தோட்டப்பகுதிகளிலுள்ள மேலும் பல வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தத்திறப்பு விழா நிகழ்வில் மத்திய மாகாணசுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை ,மத்திய மாகாணத் தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி .அனுஷியா சிவராஜா ,ம்ததிய மாகாணசபை உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 21 அக்டோபர், 2010

நாவலப்பிட்டியவில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் நிஸாந்த ரணசிங்ஹ தெரிவித்தார். நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டடு மைதானம் 20 மில்லியன் ரூபா அரச நிதியில் புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழாவில் சுமார் 2500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் நிஸாந்த ரணசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

புதன், 20 அக்டோபர், 2010

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தேசிய அரங்கிற்கு கொண்டு வரப்பட வேண்டும் - ஜமமு தலைவர் மனோ கணேசன்

போர் முடிவுற்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தேசிய அரசியல் மற்றும் உடனடி நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால் இப்பிரச்சினைகளை பின் தள்ளிவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்கட்சிகளும் செயற்படுகின்றன. தமிழ் பேசும் மக்களது தேசிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்கு கொண்டுவரப்படவேண்டியது இன்றைய வரலாற்று கடமையாகும். இந்நோக்கத்திற்கான புதிய ஒரு அரசியல் களத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தென்னிலங்கையின் முற்போக்கு அமைப்புகளுடன் தீவிரமாக கலந்து ஆலோசித்து வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தை சார்ந்த தமிழ் அமைச்சர்களும் அரசுடன் புதிதாக சங்கமித்துள்ள தமிழ் எம்பிக்களும் அரசாங்கம் வரையறை செய்துள்ள வட்டத்திற்குள்ளேயே செயற்படுகின்றார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இவர்களால் ஒருபோதும் முரண்பட முடியாது. அதேவேளையில் ஐதேக, ஜேவிபி ஆகிய எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகா கைது, 18வது திருத்தம் ஆகிய விவகாரங்களுக்கு வெளியில் செல்வதாக தெரியவில்லை. 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தை, மீள் குடியேற்றம், வடகிழக்கிலும், கொழும்பிலும் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் தொடர்பிலான பிரச்சினை, சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விவகாரம், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வும், அவர்கள் தொடர்பிலான வெளிப்படையற்ற தன்மையும், தொடர்ச்சியாக வறுமை கோட்டிற்கு கீழேயே திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் தோட்டத்தொழிலாளர் விவகாரம், பெருந்தோட்டப் பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் ஆகிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்கு கொண்டுவரப்படவேண்டும். இவற்றை உதாசீனம் செய்துவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்கட்சிகளும் பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் நிலைமை மாற்றப்படவேண்டும்.

சரத் பொன்சேகா மற்றும் 18ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஆகிய அமைப்பு ரீதியான போராட்டங்களில் பங்குபற்றும் அதேவேளையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய அரங்;கிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். புதிய ஒரு அமைப்பு ரீதியான அரசியல் களத்தை ஏற்படுத்துவற்காக தென்னிலங்கை இடதுசாரி கட்சிகள், மலையக மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் கருத்து பறிமாற்றங்கள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

அட்டன் செனன் பாடசாலையின் முன்னாள் அதிபருக்குப் பாராட்டு விழா



அட்டன் கல்வி வலயத்தில் கடந்த 37 வருடங்களாக பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் சேவையாற்றி ஓய்வு பெற்ற அட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பரமநாதனைப் பாராட்டும் நிகழ்வு அட்டன் செனன் பாடசாலையில் இடம் பெற்றது.
அட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பரமநாதனை செனனன் பாடசாலை சமூகத்தினர் அட்டன் நகரிலிருந்து வாகன பவனியாகவும் செனன் ஆக்ரோயா சந்தியிலிருந்து ஊர்வலமாகவும் அட்டன் சென்னன் பாடசாலைக்கு அழைத்து வந்தனர். இதன் போது முன்னாள் அதிபருக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து இடம் பெற்ற பாராட்டு விழாவில் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் முன்னாள் அதிபர் எஸ்.பரமநாதனுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் வழங்கியும் பாராட்டினர்.

திங்கள், 18 அக்டோபர், 2010

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமாரனின் இறுதிக்கிரியைகள் இன்று அட்டனில் இடம் பெற்றன.

கடந்த 16 ஆம் திகதி மாரடைப்பால் மரணமான மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் s.விஜயகுமாரனின் இறுதிக்கிரியைகள் இன்று 18 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் கொட்டகலை கொமர்ஷல் மின்தகன மயானத்தில் பிற்பகல் 6.45 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. அட்டன் தும்புருகிரியவில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் மாலை செலுத்தி கட்சி கொடியினைப் போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதிக்கிரியைகளுக்குப்பின்னர் இடம் பெற்ற இரங்கல் உரையாற்றும் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் ,பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் உட்பட தொழிற்சங்க அரசியல்கட்சிகள் சார்பாகவும் குடும்பத்தின் சார்பாகவும் இரங்கல் உரைகள் ஆற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை அட்டன் நகரூடாக கொட்டகலை கொமர்ஷல் மின்தகன மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சனி, 16 அக்டோபர், 2010

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் மாரடைப்பால் மரணம்

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமாரன் மாரடைப்பு காரணமாக இன்று 16 ஆம் திகதி தனது 55 வயதில் காலமானார். இன்று காலையில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதன் போது இவரை உறவினர்கள் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி காலை 9.45 மணியளவில் உயிரிழந்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரியாக செயற்பட்ட இவர் 1989 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார். மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிலும் பின்னர் கெவுன்ஷிலிலும் அங்கத்துவம் பெற்ற அவர் கடந்த 6 வருடங்களுக்கும் அதிகமாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்தார். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அக்கரப்பத்தனை பசுமலையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது அட்டன் நகரில் மல்லியப்பூ வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இவரின் மனைவி ஒராசிரியராவார்.இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அமர் விஜயகுமார் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 அக்டோபர், 2010

தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் சீனித்தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்தமைத் தொடர்பில் எதிர்ப்பு

மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள மொக்கா தோட்ட நிருவாகம் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களை பெல்வத்தையிலுள்ள சீனி உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பதாகவும் இந்த விடயம் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுச்செயலெனவும் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் முரளிரகுநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட தோட்ட நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மொக்கா தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்குத் தோட்டத்தில் தொழில் வழங்குவதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்பதைக்காரணம் காட்டி பெல்வத்தையிலுள்ள சீனி உற்பத்தி தொழிற்சாலைக்கு இதுவரை 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தங்குமிடம் ,உணவு உட்பட ஏனைய வசதிகள் குறித்து உரியவகையில் அக்கறை செலுத்தப்படவில்லையெனவும் முரளிரகுநாதன் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதே வேளை தோட்டத்தொழிலாளர்களை அவர்களின் விருப்பதற்கு மாறாக ஏனைய தொழிலுக்கு அனுப்புவது கூட்டொப்பந்தத்திற்கு எதிரானதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதன், 13 அக்டோபர், 2010

மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம்










இலங்கைத்தொழிலாளர்
காங்கிரஸ் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜின் அழைப்புக்கேற்ப மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க இன்று 13 ஆம் திகதி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இவருடன் மத்திய மாகாணசுகாதார அமைச்சின் செயலாளர் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.
44 தோட்டங்களை உள்ளடக்கிய பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் மூலமாக பொகவந்தலாவை பிரதேசத்தைச்சேர்ந்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது சுகாதார வைத்திய சேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
இந்த வைத்தியசாலையில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் திருத்தப்பட வேண்டிய நிலையிலுள்ளன. அத்துடன் மேலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்தக்குறைபாடுகளை அவதானித்த மத்திய மாகாணசுகாதார அமைச்சர் 2011ம் ஆண்டு மத்திய மாகாண வைத்தியசாலைகள் பலவற்றை அபிவிருத்தி செய்ய தாம் தீர்மானித்துள்ளதாகவும், அதனடிப்படையில் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இவ் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விரிவான அறிக்கையென்றை தமக்கு சமர்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கும், மத்திய மாகாண சுகாதார திணைக்கள இயக்குநருக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தலைமையிலான வைத்தியசாலை நிருவாகத்தினர் அமைச்சர் குழுவை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அட்டன் பொஸ்கோ கல்லூரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அட்டன் நகர பிதா அக்கறை


அட்டன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர்களின் நலன் கருதி இந்தக்கல்லூரியின் சுற்றுச்சூழலை உரிய வகையில் பேணும் வகையில் அட்டன் - டிக்கோயா நகர சபையின் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இந்த நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
அட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு விஜயம் செய்த அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் உட்பட பொதுசுகாதார பிரிவினர் கல்லூரியின் சுற்றுச்சுழலைப் பார்வையிட்டதன் பின்பு இந்தக்கல்லூரியின் சுற்றுச் சுழலைப் பேணும் வகையில் நகரசபையின் சுகாதார ஊழியர் ஒருவரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், 11 அக்டோபர், 2010

தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் : சதாசிவம் தெரிவிப்பு

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிடும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மலையகத்தமிழ் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார். அட்டனில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சிலதொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டொப்பந்தத்தினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதில்லையென இன்று அனைவராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிலர் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நேரடியாக தலையிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.அதே போல் எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக தோட்டத்தொழிலாளர்களுக்கு நிhயமானதொரு அடிப்படைச்சம்;பளத்தினை ஜனாதிபதியின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு பாராளுமன்றத்தை அங்கம் வகின்ற மலையகத்தலைமைகள் முன்வர வேண்டும் என்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு கோதுமை மா மானியத்தைப்பெற்றுக்கொடுக்க வேண்டும் : மனோகணேசன்

தோட்டத்தொழிலாளர்களின் பாரம்பரிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையேற்றத்தினால் தோட்டத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதால் எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மலையக நாடாளுமன்ற உறு;பினர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அட்டன் ,பொகவந்தலாவை ,மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம் பெற்ற பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மலையகத்தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று மண்ணையும் புல்லையும் உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்றைய அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள மலையகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார பிரச்சினைகள் குறித்து பேசுவதாக தெரியவில்லை. தோட்டத்தொழிலாளர்களின் முக்கிய உணவு பொருளான கோதுமைமாவி;ன் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு கோதுமைமாவுக்கான நிவாரணத்தினைப்பெற்றுக்கொடுப்பதற்கு முன்வராத அமைச்சர்கள் கோதுமை மாவுக்குப்பதிலாக அரிசி மாவினை உட்கொள்ளுமாறு உபதேசம் செய்து வருகின்றனர்.இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.எனவே எதிர்வரும் வரவு –செலவு திட்டத்தின் மூலமாவது தோட்டத்தொழிலாளர்களுக்குப் பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைக்கும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவேண்டும். னநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்

அட்டன் ஹைலண்ஸில் 33 பேர் சித்தி

அண்மையில் வெளியாகிய ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச்சேர்ந்த 33 மாணவர்கள் சித்திப்பெற்றுள்ளனர் .சித்திப்பெற்ற மாணவர்களுடன் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் பிரதியதிபர் எம்.ஜோர்ஜ் கற்பித்த ஆசிரியைகளான திருமதிகளான வி.புஷ்பராணி ,எஸ்.நவமணி,ஏ.மேரிஏஞ்சல் மற்றும் பொறுப்பாசிரியைகளான திருமதி .எம்.சுமங்கலா தேவி, திருமதி.எஸ்.சூரியபிரபா ஆகியோரைப் படங்களில் காணலாம்.
சித்திப்பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு : எஸ்.கவினாஷ் ( 175 ) சி.துஷான் ( 174 ) ஆர்.பவாஷினி ( 172 ) எஸ்.ஸ்ரீமதுஷன் ( 163 ) ஆர்.ஜெனிட்டா ( 162 ) எஸ்.சுருப்திகா (160 ) ஏ.அபிலாஷ் ( 160 ) எஸ்.மகிழன் (155 ) ஏ.நட்டாஷாஐவோனி (155 ) ஆர்.ராம்பிரஷாத் (154 ) வி.ரெஸிந்தன் ( 154 ) சி.சத்யஜோதி ( 152) ஏ.டிம்னா ( 151 ) எஸ்.மிஷானி ( 151 ) என்.திலக்ஷன் ( 151 ) என்.கிறிஸ்னி ( 149 ) வி.நிர்த்தனி ( 148 ) எஸ்.துஷாந்தன் ( 148 ) பி.டிக்ஷன் ( 148 ) எஸ்.கரண் ( 147 ) எம்.ரூபிகா (146 ) டி.சுவஸ்திகா ( 146 ) எஸ்.அற்வின் ( 145 ) பி.லங்கேஸ் ( 145 ) டி.எனிகிவ்ரி ( 145 ) எம்.நிவேதிஹா ( 145 ) டி.துவாகரன் (144) எம்.எப்.பாத்திமா ரிப்கா ( 144) ஆர்.நந்தனி ( 143 ) என்.ஆர்.பாத்திமாஷப்ரா ( 143) வி.துஜிதரன் ( 142 ) ஸ்மித் ஆசேர் (141) கே.அபிரா (140 )

சனி, 9 அக்டோபர், 2010

நாவலப்பிட்டி நகரில் போக்குவரத்து ஒழுங்குகளைப் பேணுவதில் பொலிஸார் தீவிரம்

நாவலப்பிட்டி நகரில் உரிய வகையில் போக்குவரத்துச் சட்டங்களைப் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பேணும் வகையில் நாவலப்பிட்டி பொலிஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாவலப்பிட்டி நகரின் பிரதான பாதைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் கடவைகளில் மாத்திரமே பாதசாரிகள் பிராதான பாதையினை கடப்பதற்குப் பயன் படுத்த வேண்டும் என்ற அறிவித்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நாவலப்பிட்டி நகர சபையின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி பிரதான பஸ்தரிப்பு நிலையப்பகுதியில் மேம்பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

சர்வதேச ஒலிம்பியாட் கணித விஞ்ஞானப்போட்டிக்கு ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன் தெரிவு


அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தன் சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற இந்த வருடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் இப்போட்டி நிகழ்ச்சி இந்தோனேசியாவில் நாளை 10 முதல ஆம் திகதி; 18 ஆந்திகதி வரை நடைபெறவுள்ளது. கணிதம் மற்றும் விஞ்ஞான கல்விப்பிரிவில் நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பாடசாலை மாணவருள் அருள்மொழிவர்மன் திஷாந்தனும் ஒருவராவார். இவர் 2009ஆம் வருட சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கும் தெரிவானவராவார்.

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தன் இந்தோனேசியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதிக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் ஏற்படும் செலவுகளை இலங்கை இந்திய சமுதாய பேரவை ஏற்றுக் கொண்டு அதற்கான பணத்தை வழங்கி, பாராட்டியுள்ளது. இப்பாராட்டு வைபவமும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் தலைமைப் பணிமனையில் இடம் பெற்றது.
இப்பாராட்டு நிகழ்வில் பேரவையின் பிரதித் தலைவர் முத்துசாமி, பேரவையின் செயற்றிட்டத் தலைவர் கே. கருணாகரன், கந்தசாமி செல்லகுமார், வைத்திய கலாநிதி ராமசுப்பு, பேரவையின் கௌரவ செயலாளர் தேவராஜ் உட்பட பலரும் பங்குபற்றினர். இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் கௌரவத் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்; சார்பில் பண முடிப்பை பிரதித் தலைவர் முத்துசாமி; செல்வன் அருள்மொழிவர்மன் திஷாந்தனிடம் வழங்கினார்.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள கனிட்ட பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ள ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தனுக்கு இப்போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்ற இந்தோனேசியா செல்வதற்கான விமான போக்குவரத்து செலவின் ஒரு பகுதியை மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜர் வழங்கிப் பாராட்டியுள்ளார்.

தேசிய கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் பங்கு பற்றவுள்ள நுவரெலியா மாவட்ட அணிக்குப் பொருளுதவி


அரசாங்க நிருவாக அமைச்சின் 40 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டப்போட்டியில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்ற அக்கரப்பத்தனை அவுடி கழகத்தின் வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பனவற்றை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் பெற்றுக்கொடுத்துள்ளார்.இந்தப்பொருட்களை அவடி கரப்பந்தாட்டக்குழுவின் பயிற்றுவிப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் அணியின் வீரர்களுக்கு அக்கரப்பத்தனை சின்னத்தோட்ட கொழுந்து மடுவத்தில் வைத்து வழங்கினார். இந்த அண. தேசிய மட்டக்கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கொழும்பில் இடம் பெறவுள்ள போது பங்குபற்றவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் தொடர்ச்சியான அடை மழை


நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழக்கைப்பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொட்ரச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.காசல்ரி ,மவுசாகலை ,கெனியன் ,லக்ஸபான போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்ற இந்த நிலையில் லக்ஸபான ,கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொட்டகலை பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் ஹரிங்டன் பகுதியிலுள்ள 25 வீடுகள் நேற்று 7 ஆம் திகதி மாலை வெள்ள நீரின் பாதிப்புக்கு உள்ளாகியதால் இந்த வீடுகளைச்சேர்ந்த குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில் அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.அத்துடன் நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவொன்று நேற்று இடம் பெற்றதால் இந்தப்பாதையின் ஊடான போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைகளிலும் மாணவர் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அடைமழைக்காரணமாக மலையக நகரங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் தமது வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதே வேளை தொட்ரச்சியான மழை வீழ்ச்சியினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப்பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 அக்டோபர், 2010

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மக்களுக்கு முழுமையாக பயன் படுதத்ப்பட வேண்டும் : எம்.உதயகுமார் தெரிவிப்பு





தமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.அந்த மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாகும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்தார் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெறப்பட்ட பொருட்களை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உபதலைவர் புண்ணியமூர்த்தி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சபை உறுப்பினர்களான நாகராஜ் ,சிவகுமார் ,மனோகர், அந்தனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது சாமிமலை ஒல்டன் கீழ்ப்பிரிவு , கிங்காரோ ,மொக்கா மேற்பிரிவு ,கியூ மேற்பிரிவு ,பொய்ஸ்டன், மோறார் மேற்பிரிவு ,செனன் தொழிற்சாலை பிரிவு ,கொட்டியாக்கலை என் .சி ,சென்என்ரூஸ் மேற்பிரிவு,பொகவந்தலாவை கீழ்ப்பிரிவு ,வெஞ்சர் 50 ஏக்கர் ,பீரட் ,எடம்ஸ்பீக் ,போடைஸ் ,எல்பட கீழ்ப்பிரிவு ,வட்டவளை லொனொக் ஆகிய தோட்டங்களின் பல்வேறு அபிவிருத்திக்கு இந்தப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன. மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : அரசாங்கத்தின் பெரும்பாலான நிதியொதுக்கீடுகள் தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. இதனைக்கருத்திற்கொண்டு தான் மக்கள் தமது வாக்குகளை அளித்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.எனவே மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டிய கடப்பாட்டிலுள்ளோம்.இன்று மலையகத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் உரியவகையில் மக்களுக்குச் சென்றடைவதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய மாகாணத்தில் எனக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியிலிருந்து பெறப்படுகின்ற பொருட்கள் பிரதேச செயலகம் ,பிரதேச சபைகள் மூலமாக குறிப்பிட்ட மக்களை வரவழைத்து பகீரங்கமாக வழங்கி வருகின்றேன்.இவ்வாறு செயற்படுகின்ற போது ஊழலுக்கு பெரும்பாலும் இடமில்லை என்று நான் திடமாக நம்புகின்றேன்.இன்று தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு பட்டவகையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் வாழுகின்ற சூழல் காணப்படுகின்றது.இந்த நிலையில் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருந் துணையாற்றுகின்ற இவர்கள் தொடர்ந்து உழைப்புக்கேற்ற ஊதியமின்றி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.காலை முதல் மாலை வரை கடுமையாக உழகை;கின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைப்பதில்லை.இந்த நிலையில் கோதுமைமா போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தினாலும் தோட்டத்தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் எனது மாகாணசபை பதவியின் மூலமாக உயர்ந்த பட்ச சேவையாற்ற வேண்டும் என்ற ரீதியில் வேவையாற்றி வருகின்றேன். என்றார்

புதன், 6 அக்டோபர், 2010

சாமிமலை நகரில் சட்டவிரோத ஜக்பொட் இயந்திரமொன்றினை பொலிஸார் கைப்பற்றயதோடு சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை நகரில் நீண்டகாலம் சட்டவிரோதமான முறையில் ஜக்பொட் இயங்திரமொன்றின் உதவியுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவந்த நபரொருவரை அட்டன் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத்தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிவான் சதுன்விதாரண உத்தரவிட்டுள்ளார்.
சாமிமலை நகரிலுள்ள மதுபான சாலைக்கு அருகில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு வந்த இந்த சட்டவிரோத ஜக்பொட் நிலையம் குறித்து அட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றினைத்தொடர்ந்து அங்குச்சென்ற பொலிஸார் ஆறுமுகன் சிவனேசன் ( வயது 55 ) என்பரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததோடு அவர் வசமிருந்த ஜக்பொட் இயந்திரத்தினையும் கைப்பற்றியுள்ளனர். குறிப்பிட்ட ஜக்பொட் இயந்திரம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதென்றும் அதற்குரிய சாவி அவரிடமுள்ளதென்றும் இந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் 10 வீதம் இந்த பொலிஸ் அதிகாரியால் தனக்கு வழங்கப்படுமென்றும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியொக்கீட்டில் பெறப்பட்ட பொருட்கள் பகிர்வு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெறப்பட்ட பொருட்களை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வொன்று நாளை 7 ஆம் திகதி காலை 10 மணிக்கு அம்பகமுவ பிரதேச சபையில் இடம் பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் தோட்டத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாமிமலை ஒல்டன் கீழ்ப்பிரிவு , கிங்காரோ ,மொக்கா மேற்பிரிவு ,கியூ மேற்பிரிவு ,பொய்ஸ்டன், மோறார் மேற்பிரிவு ,செனன் தொழிற்சாலை பிரிவு ,கொட்டியாக்கலை என் .சி ,சென்என்ரூஸ் மேற்பிரிவு,பொகவந்தலாவை கீழ்ப்பிரிவு ,வெஞ்சர் 50 ஏக்கர் ,பீரட் ,எடம்ஸ்பீக் ,போடைஸ் ,எல்பட கீழ்ப்பிரிவு ,வட்டவளை லொனொக் ஆகிய தோட்டங்களின் பல்வேறு அபிவிருத்திக்கு மேற்படி பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

கினிகத்தேனையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச்சேர்ந்த 30 வயது இளைஞரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச்சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர் நேற்றுமுன்தினம் 3 ஆம் திகதி தோட்டத்திலுள்ள ஆற்றைக்கடக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.இதன் போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இளைஞர் வீடு திரும்பாதது குறித்து அந்த இளைஞனின் உறவினர்களும் அயலவர்களும் தேடிய போது ஆற்றோரத்தில் குறிப்பிட்ட இளைஞனின் செருப்புகளும் அவர் அணிந்திருந்த சாரமும்; இருந்துள்ளமையைக் கண்ணுற்றுனர். இதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இதன் பின்பு பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று 4 ஆம் திகதி முதல் ஆற்றில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.எனினும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கரையொதுங்கிய நிலையில் இளைஞனின் சடலம் இன்று 5 ஆம் திகதி மீட்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து உயிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தலவாக்கலையில் வெடிப்பொருள் மீட்பு

தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் ஒரு தொகை வெடிப்பொருட்களை
தலவாக்கலை பொலிஸார் நேற்று 4 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் மீட்டுள்ளனர்.தலவாக்கலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து தலவாக்கலை ரயில் நிலையப்பகுதிக்கு மோப்ப நாயுடன் சென்ற பொலிஸ் குழு அங்கு மேற்கொண்ட தேடுதலைத்தொடர்ந்து 14 கிலோ கிராம் வெடிப்பொருளையும் வெடிக்க வைப்பதற்கு உதவுகின்ற 1250 அடி கொண்ட வயர் தொகுதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்கைப்பற்றப்பட்ட பொருடகள் தற்போது தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்டுள்ள இந்த வெடிப்பொருடகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை நுவரெலியா நீதிமன்றில் சமர்ப்பிதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள்

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மத்திய மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல்பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் மத்திய மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் வாழும் 50 000 மக்களின் வைத்திய தேவைக்காக இயங்கிவரும் இவ்வைத்திய சாலையில் முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்துடன் இந்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை. மேலும் தாதியர்களுக்கும், சிற்றூழியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு எழுத்தாக்கப் போட்டிகள்

இவ்வருட ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றியம் தமது அங்கத்தவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலிய எழுத்தாக்கப் போட்டிகளை நடத்தவுள்ளது. ஆசிரியர்கள் தாம் எழுத விழையும் ஆக்கங்கள் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டதாக அமைதல் வேண்டும்.
சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும்.பிரசுரிக்கப்படாததாகவும் வேறு எங்கும் சமர்பிக்கப்படாததாகவும் இருத்தல் வேண்டும்.தொனிப் பொருள் சமூக பிரஞ்சை உடையதாக அமைதல் வேண்டும்.கட்டுரைகள் ஆய்வு பூர்வமானதாக இருத்தல் வேண்டும், சான்றாதாரங்கள் காட்டப்பட வேண்டும்.அத்துடன் உள்ளடக்கம், உருவம், அமைப்பு குறிப்பாக கவனத்தில் எடுக்கப்படும். ஒருவர் ஒரு ஆக்கம் மட்டுமே எழுதலாம். ஆக்கங்கள் கணினிபதிப்பு, தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். ஏட்டின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பதியப்பட்டிருத்தல் வேண்டும்.நடுவர் தீர்ப்பே இறுதியானது.மேலும் போட்டிகளில் பங்குபற்றுகின்றவர்கள் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.அத்துடன் தாய் சங்க செயற்குழு உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்கு பற்ற முடியாது.ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறுகின்றவர்களுக்கு முதலாம் பரிசாக 2500 ரூபாவும் இரண்டாம் பரிசாக1500 ரூபாவும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாவும் பங்குப்பற்றியமைக்காக சான்றிதழகளும்; வழங்கப்படும்.அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆக்கங்கள் தொகுப்பாக வெளியிடப்படும். சகல ஆக்கங்களும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன் 133 1ஃ1 திம்புள்ள வீதி அட்டன் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.என்று மலையக ஆசிரியர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

திங்கள், 4 அக்டோபர், 2010

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தில் முன்பள்ளி ஆசிரியர் பாடநெறிகள்

ஊவா மாகாண அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி எஸ். கே. சந்திரசேகரன் தெரிவித்தார். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் உலக கல்வி பிரச்சார வாரத்தின்போது முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் மலையக பகுதி திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் இப்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்தில் பங்குபற்றி முப்பத்திரண்டாயிரம் கையெழுத்துக்களை பெற உதவிய பிரிடோ முன்பள்ளி சிறுவர் உரிமை சமாதான மேம்பாட்டாளர்களுக்கு இந்த பரப்புரை தொடர்பான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்காக நானுஓயா காந்தி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திறந்த பல்கலைக்கழக முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா பயிற்சிநெறியை ஹட்டனில் ஆரம்பிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி நெறியை இவ்வருடம் கண்டியில் ஆரம்பிக்க உள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபாலி விதான பத்திரனவும், திறந்த பல்கலைக்கழக கல்வித்துறை போதனாபீடத் தலைவர் பேராசிரியர் ஜீ.டி. லேகம்கேவும் பிரிடோ நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இந்த பயிற்சிநெறியை மலையக பகுதிகளில் உள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் ஆரம்பிக்க வேண்டும் என பிரிடோ நிறுவனம் இரண்டு வருடத்திற்கு மேலாக பரிந்துரை செய்து வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த காலத்தில் இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்ட பலரோடு கலந்துரையாடல் நடைபெற்றதோடு பத்திரிகைச் செய்திகள், கையெழுத்துக்கள், கடிதங்கள் மூலம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த விடயத்தை வலியுறுத்தி கடந்த ஏப்ரலில் உலக கல்வி பிரசார வாரத்தின் போது முப்பத்திரண்டாயிரம் கையொப்பங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்வர்களுக்கு அனுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில் ஹட்டனில் பயிற்சிநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும், கண்டியில் பயிற்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதும் பாரிய முன்னேற்றமாகும். அடுத்த வருடம் பதுளை, பண்டாரவளை பகுதியில் இப்பயிற்சிநெறி வருகைதரும் விரிவுரையாளர்களின் சேவைகளை பெறும் வாய்ப்புக்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் அடுத்த வருடத்தில் இந்த பயிற்சிநெறியை தமது பகுதியில் ஆரம்பிப்பதற்கான அழுத்தத்தை ஊவா மாகாண கல்விமான்களும், அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகளும் இப்போதிருந்தே ஆரம்பித்தல் வேண்டும். மேலும் இப்பாடநெறிகளை நடத்தும் தகுதி பெற்ற விரிவுரையாளர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து திறந்த பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பதுடன் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களும் இவ்விடயத்தில் தாங்கள் உதவ தயார்நிலையில் இருப்பதாக திறந்த பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவிப்பார்களாயின் இப்பயிற்சிநெறியை பதுளை பண்டாரவளையில் உட்பட மலையக பகுதிகளில் உள்ள சகல திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களிலும் ஆரம்பிப்பது சாத்தியமாகும்.என்றார்.

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளக தொடர்பாடல் வசதிக்கு நிதியொதுக்கீடு

ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து கொட்டகலை மாவட்டவைத்தியசாலைக்கு 75 ஆயிரம் ரூபா நிதியொதுக்கீடு செய்துள்ளார். இந்த வைத்தியசாலையின் உள்ளக தொடர்பாடல் வசதியினை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தோட்ட பகுதி மக்களுக்கு அரச நிறுவன சேவைகள் தமிழ் மொழியில் கிடைப்பதில் பாரபட்சம்

இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கிகரிக்கப்பட்டுள்ள போதும் மலையக பிரதேசங்களில் காணப்படுகின்ற அடித்தள தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தாய் மொழியில் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடைமுறையில் பல தடைகள் காணப்படுவதாக சக வாழ்வு மன்றத்தின் மொழி மற்றும் நல்லாட்சிக்கான திட்ட முகாமையாளர் எம். முத்துக்குமார் தெரிவித்தார். அட்டன் சமூக நல நிறுவனத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகின்ற மாதாந்த தொடர் மாலை கூட்டமாகிய களம் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
இலங்கையில் 1833 ஆண்டு நடைபெற்ற மொழி பிரச்சினை தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையில் ஏற்படவில்லை மாறாக ஆங்கிலத்தில்; அரச கருமங்கள் நடைபெறுவதற்கு எதிராக தமிழ், சிங்கள மக்கள் குரல் கொடுத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்பு 1956ம் ஆண்டு சிங்கள மொழி அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் சில அரசியல் காரணங்களினால் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே அன்றில் இருந்து இன்றுவரையிலும் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு மொழி ஒரு பிரதான காரணமாக இருந்து வந்துள்ளது.
1972ம் ஆண்டு அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருந்தன. 1978ம் ஆண்டு இலங்கை சோசலிச குடியரசு அரசியல் அமைப்பிலே, தமிழ் மொழி தேசிய மொழியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் நிர்வாக மொழி குறித்து சொல்லப்படவில்லை. அதே நேரம் 16ம் அரசியல் அமைப்பு திருத்தத்தில் தமிழ் மொழி நிர்வாக மொழியாகவும், வழக்காறு மன்றங்களுக்கான பயன்பாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தும் நடைமுறையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய ஏனைய பிரதேசங்களில் தமிழ் மொழி அமுலாக்கத்தின் நடைமுறை மிக மிக குறைவாகவே காணப்;படுகின்றது. ஆனால,; இலங்கை சனத்தொகையில் 14 வீதமான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். கடந்த காலங்களில் ஜனாதிபதி அவர்களால் 29 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மலையகத் தமிழர்கள் வாழக்கூடிய பிரதேசங்களாக இருக்கின்றன.
குறிப்பாக 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நுவரெலிய, வலப்பனை மற்றும் பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, அப்புத்தளை, ஹ}லி எல, மீகஹகிவுல, பசறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2001ம் ஆண்டு கொழும்பு மத்தி, திம்பிரிகஸயா பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகல, வெலிமட, சொரணந்தொட, களுத்துறை மாவட்டத்தில் பேருவளையும், கண்டி மாவட்டத்தில் அக்குறண, தெல்தொட, பன்வில, பஸ்பாகே கோறளை, உடபலாத்த மற்றும் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டிய, முந்தல, புத்தளம், வணாத்த வில்லு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக அலகுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட பிரதேசங்களில் நடைமுறையில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது மந்தகதியில் அல்லது இல்லாமலே காணப்படுகின்றது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் தமிழில் கடமையாற்றுவதற்கான பணியாளர்கள் தொடர்ந்தும் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாமர தோட்டத் தொழிலாளர்கள் பிரதேச செயலகம், கிராம சேவகர்கள், பொலிஸ் நிலையகங்கள் போன்ற பல அரச நிறுவனங்களுடன் தங்கள் தாய்மொழியில் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் தடைகள் காணப்படுகின்றன. குறிப்பாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தமிழில் பெற்றுக்கொள்ள முடியாமையால்; பல தசாப்தங்களாகவே பல்வேறு தவறுகள் மலையக சமூகத்தில் இடம்பெறுகின்றமையை நாம் அறிவோம்
எனவே உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்துவதுடன் உரிமைகள் மீறப்படுகின்ற போது அவற்றுக்கு எதிராக சட்டரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்களை தயார்படுத்தவேண்டும். யாருக்கு உரிமைகள் மீறப்படுகின்றனவோ அவர்கள் அதனை உணர்ந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு உறுதியுடன் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயல்வது அவசியமாகும். அதற்கான மேலதிக முயற்சிகளையும், உதவிகளையும் சமூக அமைப்புகளும், புத்தி ஜீவிகளும் மேறகொள்வதும் இன்றியமையாததாகும்.

இந்த களம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணசாமி பேசுகையில் கூறியதாவது 1950களில் அரசு துறைகளில் தமிழ் ஊழியர்களே அதிகமாக பணியாற்றினர். இவ்வாறான நிலைமையை இல்லாதொழிப்பதும் தனி சிங்கள மொழிசட்டம் கொண்டுவருவதற்கு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது. நமது நாட்டில் அரசு நிர்வாகத்தில் மொழி ரீதியான பிரச்சினைகளை தீhப்;பதற்கு அடிப்படையாக, அரசு ஊழியர்கள் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளையும் கற்றிருப்பது அடிப்படை தகுதியாக வழியுறுத்தப்படவேண்டும். அத்துடன் நடைமுறையிலும் இதனை பயன் படுத்துவதையும் உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக கணிசமான தமிழ் அரச ஊழியர்கள் தமிழில் பணியாற்றுவதற்கு அஞ்சுகின்ற, சிலர் தாழ்வாகவும் கருதுகின்ற நிலை மாறவேண்டும்.
கல்வி துறையிலும் மொழி தொடர்பான பல சிக்கல்களை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. குறிப்பாக பாடப்புத்தகங்கள், பரீட்சை வினாத்தாள்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்படுகின்றபோது பல தவறுகள் நடக்கின்றன. மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்வதற்கு சிரமங்கள் காணப்படுகின்றன. மேலும் அரசாங்கத்தில் இருந்து வருகின்ற சுற்று நிருபங்கள், அரச ஆவணங்கள் பெரும்பாலும் சிங்களத்திலேயே வருகின்றன. இவ்வாறான நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகும்.

சட்ட விரோதமாக கால்நடைகளை வெட்டியவர்கள் பொலிஸாரிடம் அகப்பட்டுக்கொண்டனர்.

பொகவந்தலாவை நகருக்கு அருகில் மறைமுகமான இடமொன்றில் கால்நடைகளை இறைச்சிக்காக நீண்டகாலம் வெட்டும் இடம் ஒன்றினை அட்டன் பொலிஸார் இன்று 3 ஆம் திகதி சுற்றிவளைத்த போது சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ததோடு 150 கிலோ மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர். அட்டன் பொலிஸ் பிரிவின் சூழல் பாதுகாப்புப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றை அடுத்து இன்று அதிகாலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமாக கால்நடைகளை அறுக்கும் இடத்தினை சுற்றி வளைத்துள்ளனர்.இதன் போது அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அத்துடன் 150 கிலோ கிராம் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர். இந்தக் கால்நடை அறுக்கும் இடத்தில் கால்நடைகள் வெட்டப்பட்டதன் பின்பு அவற்றின் கழிவுகள் ஆற்றில் வீசப்படுவதாகவும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. சந்தேக நபர்களை அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் அம்பகுமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவை நகரில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டும் கொல்களம் கவனிப்பாரற்றிருப்பதாலேயே அம்பகமுவ பிரதேச சபையில் இறைச்சி விற்பனைக்கு அனுமதிப் பெற்றவர்கள் சட்டவிரோதமான இடங்களில் கால்நடைகளை வெட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் சீரற்ற கால நிலை










மலையகத்தில்
சீரற்ற கால நிலை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் மேகமூட்டம் காணப்படுவதால் வாகனங்களைச் செலுத்துவதில் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்த நிலையில் அட்டன் - கொழும்பு பிரதான பாதையில் இன்று மேகமூட்டம் சூழ்ந்திருந்ததால் பவுசர் வாகனமொன்று புருட்டில் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியது.அட்டனிலிருந்து குருணாகலைக்குப் பால் கொண்டு சென்ற பவுசர் வாகனமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தோட்டப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை : உதயகுமார் தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் செலுத்தி வருகின்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட ,மாகாண ,தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நுவரெலியா மாவட்டத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கே இந்த உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை
உறுப்பினருமான உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு : முரளிரகுநாதன்

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு 15 இலட்சம் ரூபாவும் நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச அபிவிருத்திக்கு சுமார் 9 இலட்சம் ருபாவும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.

கண்டி உதவி இந்திய தூதுவர் தோட்டப்பகுதிகளுக்கு விஜயம்











ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் அழைப்புக்கேற்ப அண்மையில் மலையகப்பகுதிக்கு விஜயம் செய்த கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றுக்கு விஜயம் செய்து அந்தத்தோட்ட மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

சனி, 2 அக்டோபர், 2010

மத்திய மாகாணத்தமிழ் மொழித்தினப் போட்டிகளின் பரிசளிப்பு விழா










மத்திய
மாகாணத் தமிழ் மொழித்தினப்போட்டிகளில் பங்கு பற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று 2 ஆம் திகதி நாவலப்பிட்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற போது மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா உட்பட கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

மலையகத்தில் அடை மழை : நாவலப்பிட்டியவில் பெரு வெள்ளம்

மலையகப்பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் அடைமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கைப்பெரிதும் பாதிப்படைந்தது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா ,கண்டி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் அடை மழை பெய்தது.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை பெய்த அடை மழையின் போது நாவலப்பிட்டி நகரின் கண்டி வீதி சுமார் ஒரு மணிநேரம் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. இதன் போது நாவலப்பிட்டி நகரிலிருந்து கண்டி பகுதிக்கான வாகனப்போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது.இந்த நகரின் எரிபொருள் நிரப்பு நிலையம் , வங்கிகள் , வர்த்தக நிறுவனங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் சில சேதங்கள் ஏற்பட்டன.
இதே வேளை நாவலப்பிட்டி நகரில் வடிகால் கட்டமைப்பு உரியவகையில் இல்லாத காரணத்தினாலேயே மழைக்காலங்களில் கண்டி வீதியில் வெள்ள நீர் நிரம்பி விடுவதாக பொதுமக்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

முதியோர் தினத்துக்கு முதல் நாள் முதியோரால் மனைவி வெட்டப்பட்டார். வெட்டியவர் தற்கொலைக்கு முயற்சி : மலையகத்தில் தொடரும் அவலங்கள்

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் கடந்த 30 ஆம் திகதி இடம் பெற்ற கொலைச்சம்பவம் ஒன்றில் குடும்பப்பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இவரை வெண்டிய இந்தப்பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக்கொண்டு தற்கொலை முயற்சிக்கு உள்ளானதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
கவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனைவி கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடீரென பாய்ந்து கவ்வாத்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்தச்சம்பவம் தொட்ரபாக மஸ்கெலியா பொலிஸார் அட்டன் நீதிவானுக்கு அறிவித்ததைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகைத்தந்து விசாரணைகளில் ஈடுபட்ட அட்டன் நீதிமன்ற நீதிவான் சதுன் விதாரண உயிழந்த பெண்ணின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பிரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். இதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்;.அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான 55 வயதுடைய ஏ.பி. வள்ளி என்ற பெண்மணினாவார். ஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 60 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.