சோ.ஸ்ரீதரன் -
மஸ்கெலியா தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பொன்று தற்போது நிறைவேறுவதற்கான காலமொன்று மலர்ந்துள்ளது. ஆம். அட்டன் ,டிக்கோயா ,நோர்வூட் ,பொகவந்தலாவை ,மஸ்கெலியா பிரதேசங்களில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்களின் வைத்திய சேவையினை தாம் வாழும் சூழலிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது. மேற்படி பிரதேச மக்கள் எதிர்நோக்கி வந்த வைத்திய சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து மலையகத்தமிழ் அரசியல்வாதிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் ஊடகவியலாளர்களாலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டதன் பயனாக இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் மூலமாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்த வைத்தியசாலையின் தரமுயர்த்தலின் முதற்கட்டமாக 150 படுக்கை அறைகள் கொண்ட மாடிக்கட்டிடத்தொகுதி ஒன்று இந்திய அரசாங்கத்தின் 120 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 2013 ஆம் ஆண்டு பூர்த்தியடையவுள்ள இந்த நிர்மாணப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 4 ஆம் திகதி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வளாகத்தில் இடம் பெற்றது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே .காந்தா உட்பட அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன நவீன் திசாநாயக்க ,மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ,மத்தியமாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க ,பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ,மத்திய மாகாண அமைச்சர்களான சுனில்அமரதுங்க ,திருமதி அனுஷியா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே .காந்தா பேசுகையில் :
இந்திய அரசாங்கத்தின் உதவியால் இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கனவாக இருந்தது. அந்தக்கனவு நனவாகும் காலம் தற்போது கனிந்துள்ளது. இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதால் பிரதேச மக்கள் பல்வேறு நன்மைகளை பெறவுள்ளனர். இந்திய அரசாங்கம் மலையக மக்களின் நலன்கருதி கல்வி ,போக்குவரத்து போன்ற துறைகளுக்கு உதவி நல்கி வருகின்றது. அத்துடன் பெருந்தோட்டப்பகுதிகளில் நான்காயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமொன்றினையும் அமுல்படுத்தப்படவுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பேசுகையில் : டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு 150 படுக்கையறைகள் கொண்ட கட்டிடத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 120 கோடி ரூபாவை நன்கொடையாக வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்திய அரசாங்கத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்திய அரசாங்கம் எமது நாட்டுக்குப்பல்வேறு வகையில் உதவி செய்கின்றது. குறிப்பாக பாதுகாப்பு ,சுகாதாரம் ,பொருளாதார உதவிகளை வழங்குவதில் எமது நட்பு நாடாக இந்தியா திகழுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எமது அரசாங்கம் இலவச சுகாதார வைத்திய சேவைக்குப் பாரிய நிதியினை வருடாந்தம் செலவழிக்கின்றது. வருடாந்தம் இலவச மருந்துப்பொருட்களுக்கு மாத்திரம் அரசாங்கம்; 12 பில்லியன் ரூபாவை செலவழித்து வந்தது. இந்த நிலையில் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவின் காலம் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதால் இலவச மருந்துப் பொருட்களுக்காக வருடாந்தம் 16 பில்லியன் ரூபாவை செலவழிக்க வேண்டிய தேவை தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பாரிய நிதியினை அரசாங்கம் செலவிடுவதற்கு நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காகும்.எனினும் நீரிழிவு உட்பட பல்வேறு நோய்கள் காரணமாக எமது நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 300 தொடக்கம் 350 பேர் மரணிக்கின்றனர். மதுபானம் , புகைத்தல் என்பனவற்றுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவர்களினதும் இவர்களைத் தங்கி வாழுகின்றவர்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே மதுபானம் ,புகைத்தல் என்பனவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும். இந்த நிலையில் எமது நாட்டு மக்களின் போஷனை தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். நுவரெலியா மாவட்டத்திலேயே போஷனைக்குறைப்பாடு அதிகமாகவுள்ளது. இந்தப்போஷனைக்குறைப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக தேசிய போஷனை சபையின் மூலமாக விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்தத்திட்டத்தினை நாம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளோம்.இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதே வேளை நுவரெலியா மாவட்ட மக்கள் தமது போஷனைத் தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் காலநிலைக்கேற்ப விவசாயப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு முன்வரவேண்டும். தோட்டப்பகுதி மக்களின் சுகாதார வைத்திய சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக 52 தோட்ட வைத்தியசாலைகளை எமது அமைச்சின் கீழ் பொறுப்பெடுத்துள்ளோம். இந்த வைத்தியசாலைகளின் அடிப்படைத்தேவைகள் குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வோம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுக்கேற்ப மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்தவுள்ளோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக