செவ்வாய், 4 அக்டோபர், 2011

குயின்ஸ்பெரி ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம்

இலங்கையிலுள்ள சித்தர் ஆலயங்களில் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம் முக்கியதொன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை தேர்தல் தொகுதியில் குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு நாவலப்பிட்டிய கட்டபூலா வழியாகவும் தலவாக்கலை – அட்டன் பிரதான பாதையில் பத்தனை வழியாகவும் செல்ல முடியும். தமிழகத்தில் கொல்லிமலையைச்சேர்ந்த நவநாதர் சித்தர் 1901 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்து குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டதாகவும் அதன் பின்பு அவர் 1902 ஆம் ஆண்டு பங்குனிமாதம் நிர்விகர்ப்ப சமாதியடைந்ததாகவும் அறிய முடிகின்றது. மலையகத்தில் முதற் பெண்கங்காணியான நாகன் பெருமாள் அம்மாள் நவநாதர் சித்தரின் மீதுள்ள பற்றுகாரணமாக இந்த சித்தருக்கு குயின்ஸ்பெரி தோட்டத்தில் கோவில் அமைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குயின்ஸ்பெரி
தோட்டத்திலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரமுள்ள காட்டில் தவமிருந்து கொண்டிருந்த நவநாதர் சித்தரை வழிபடச்சென்றிருந்த போது நாகன் பெருமாள் அம்மாள் அங்கு ஒரு பிடி அசிரியால் உணவு சமைத்து பக்தர்களுக்குப்பறிமாரி கொண்டிருந்த போது அப்போது 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவ்விடத்திற்கு வந்ததாகவும் இதன் போது அந்த அம்மாள் நவநாதர் சித்தரிடம் ' சாமி ' என்ன செய்வது என்று கேட்ட போது அதற்கு அவர் ' நீ போட்டுக்கொண்டிரு தாயே ' என்று கூறியுள்ளார்.அவர் கூறியபடியே அந்த ஒரு பிடி அரிசியிலிருந்து 150 பேருக்கும் சோறு வழங்கப்பட்டாதாகவும் இந்தச்சம்பவம் நவநாதர் சித்தரின் அற்புதங்களில் ஒன்று என்றும் தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப்பின்னணியில் இந்தச்சமபவத்தை நினைவு கூரும் வகையில் கடந்த பல வருடங்களாக பொங்கல் தினத்தன்று ஸ்ரீநவநாதர் சித்தர் தபோவனத்தில் பக்தர்கள் ஒன்று கூடி பொங்கல் படைத்து தத்தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பொங்கல் தினத்தன்று ஸ்ரீநவநாதர் சித்தரின் திருவுருவம் தாங்கிய சப்பரம் அவரின் ஜீவசமாதியிலிருந்து குயின்ஸ்பெரி தோட்ட மக்களால் தபோவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு பூஜைகள் இடம் பெறும் அதன் பின்பு அவரின் திருவுவப்படம் தாங்கிய சப்பரம் மீண்டும் கோவிலுக்குக்கொண்டு வரப்பட்டு விசேட பூஜைகள் இடம் பெறும். இந்த ஆலயத்தில் பௌணர்மி தினங்களில் விசேட பூஜைகள் இடம் பெறும்

கருத்துகள் இல்லை: