தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் எதிர்காலத்தில் உற்பத்தித் திறனுக்கேற்ற சம்பள முறையொன்றினை முன்னெடுப்பதற்கு பெருந் தோட்டக்கம்பனிகள் தற்போதிருந்து முயற்சித்து வருவதால் இவ்விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் புசல்லாவை பணிமனையில் இன்று இடம் பெற்ற தலைவர்மார்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா ,பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் வகையிலான சம்பளத்திட்டமொன்றோ தற்போது நடைமுறையிலுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலைமையில் பெருந்தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி எதிர்வரும் கூட்டொப்பந்தக்காலத்தில் உற்பத்தித் திறனுக்கேற்ற சம்பளத்திட்டமொன்றினை தோட்டக்கம்பனிகள் முன்னெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது. இதனைத் தொழிலாளர்கள் சார்பாக செயற்படுகின்ற தொழிற்சங்கங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. இவ்விடயம் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக