ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் ஆதரவு கும்பலால் பண்டாரவளை பூணாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சதனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைகளை அறிந்து கொள்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப விஜயம் செய்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட உயர் மட்டக்குழுவினர் நேற்று 9 ஆம் திகதி பூணாக்கலைத் தோட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
அதற்கு முன்பதாக இந்தக்குழுவினர் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயரதிகாரிகளைச் சந்தித்து தாக்கதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எவ்விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிந்து கொண்டனர்.
அதன் பின்பு பண்டாரவளை தலைமை பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவுடன் பூணாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்திற்குச் சென்றனர்.
இந்தத் தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் உட்பட தோட்ட மக்கள் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான கோழைத்தனமாக தாக்குதல் குறித்த பல்வேறு விடயங்களைத் தெரிவித்தனர்.
ஊவா மாகாணத்தின் அமைச்சர் ஹல்துமுல்லை பிரதேச சபையின் உறுப்பினர் ஆகியோரின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் பின்பு கொஸ்லாந்தை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக்குழுவினர் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரான ரொஷான் பெர்;னான்து தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.இதன் போது பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாக்குமூலத்தினை வழங்கினர். இதன் பின்பு இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்தத் தராதரத்தில் இருந்தாலும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரான ரொஷான் பெர்;னான்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக்குழுவினரிடம் உறுதியளித்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ள நாவலப்பிட்டி குருந்துவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த சமாதானம் என்ற குடும்பஸ்தர் தொடர்ந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அத்துடன் தலையில் வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற வருகின்றார்.இவர்களைத் தவிர மேலும் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தத்தாக்குதல் சம்பவத்தில் இடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு பண்டாரவளை நீதிமன்றத்தினால் நேற்று 9 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 19 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தலவாக்கலை , உடபுசல்லாவை , பொகவந்தலாவை , பதுளை , அப்புத்தளை போன்ற பகுதிகளில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தலவாக்கலையில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான .பி.திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.
இந்தக்கூட்டத்திற்கு பதுளை , பண்டாரவளை போன்ற பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் தொழிலாளர்களை அழைத்து வந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட அமைப்பாளர்களுக்குக் கடந்த சில நாட்களாக பதுளை மாவட்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.இந்த அச்சுறத்தல் தொடர்பாக பதுளை மாவட்ட பொலிஸாரின் கவனத்துக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட தொழிற்சங்க பணிமனைகளின் மூலமாக கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் 7 ஆம் திகதி அதிகாலை 12.15 மணியளவில் பண்டாரவளை பூணாகலை இலக்கம் மூன்று தோட்டத்துக்குச் சென்று காடையர் குழுவொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் வீடொன்றினைத் தாக்கி அங்கிருந்தவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர். திகாம்பரம் கட்சியின் மேதினக்கூட்டத்திற்கு இனிமேல் போவீர்களா ? என்று கூக்குரல் விட்டவாறும் எச்சரிக்கை விடுத்தவாறும் காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலைத் தடுப்பதற்கு தோட்ட மக்கள் முன்வந்த போது காடையர்கள் சரமாரியாக கல்லெறிந்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்த போது பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119 அழைப்பு எடுத்த போதும் எவ்விததிலும் கிடைக்கவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர். அத்துடன் பண்டாரவளை பொலிஸ் நிலையமுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதன் பின்பு தோட்ட மக்கள் கொஸ்லாந்தைப் பொலிஸுக்கு அறிவித்துள்ளனர் .அதன் பின்பு அவ்விடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்த வந்தவர்களின் ஒரு வாகனத்தினைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாகனமொன்று பாதையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். அந்த வாகனத்தில் கத்திகள் , இரும்புத் துண்டுகள் , போத்தல்கள் இருந்ததாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதன் பின்பு இந்த வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ஒருவர் பெண்ணொருவரும் உள்ளடக்கப்படுகின்றார். தாக்கதலுக்கு உள்ளான அருணகிரி தியாகராஜா ( வயது 25 ) பாரிய உடற்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 53 வயதுடைய கே.பார்வதிக்கு தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. 33 வயதுடைய சமாதானம் என்பவருக்கு உடற்காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பின்பு இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் அரசாங்கத்தின் உயர்மடடத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக