புதன், 15 மே, 2013

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்



பண்டபரவளை பூணாக்கலை மூன்றாம் பிரிவு தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி நள்ளிரவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  சம்பவத்தில் சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேரைத் தொடர்ந்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் அருண விக்கிரமசிங்ஹ உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் 16 பேரும் இன்று  15 ஆம் திகதி பதுளை சிறைச்சாலையிலிருந்து பண்டாரவளை நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை பேருந்தில் கொண்டுவரப்பட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட இந்தச் சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிமன்ற நீதிவான் அருண விக்கிரமசிங்ஹ சிறைச்சாலை பேருந்திற்குள் சென்று பார்வையிட்டார்.
இதன் பின்பு சந்தேக நபர்களைத் தொடர்ந்து 21 ஆம் திகதி வரை விளக்கமறியிலி;ல் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் உத்தரவிட்டதாக தொழிலாளர்  தேசிய சங்கத்தின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி திருமதி பஸ்நாயக்க தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகரில் இடம் பெற்ற போது இந்தக்கூட்டத்தில் பண்டாரவளை பூணாக்கலைத் தோட்டத்திலிருந்து வருகைத்தந்த ஆதரவாளர்கள் மீது கடந்த 7 ஆம் திகதி நள்ளிரவில் வாகனங்களில் வந்த கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டனர்.
இதன் பின்பு பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் கடந்த 9 ஆம் திகதி பண்டாரவளை நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டனர். ஏனையவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளகக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அதே வேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: