வியாழன், 3 ஜூன், 2010

வாக்காளர் பதிவு ஆரம்பம்

இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேட்டின் மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் இம்முறை கணக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கிறது.
கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்குரிய விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளன. குறித்த திகதிக்கு முன்னர் கணக்கெடுப்பு விண்ணப்பப் படிவங்கள் கிடைக்காத வாக்காளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் அல்லது மாவட்டத் தேர்தல் செயலகமூடாக அது குறித்து அறிவிக்க முடியுமெனப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 15 ஆம் திகதிவரை மீளச் சேகரிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையகத்தில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

குழந்தையைக் குப்பைத்தொட்டிக்கு அருகில் விட்டுச்சென்ற தாய் விளக்கமறியலில்
மஸ்கெலியா பிரதேசத்தில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டிக்கு அருகில் விட்டுச்சென்ற தாயை மஸ்கெலியா பொலிஸார்; கைது அட்டன் நீதிமன்றில் ஆஜர் செய்தததைத்தொடர்ந்து அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அட்டன் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான முனியாண்டி புஷ்பராணி என்ற 23 வயது இளம் பெண்ணே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் உள நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் அவரை கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மன நல மருத்துவர்களிடம் அறிக்கை ஒன்று பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை மீட்கப்பட்ட பெண்குழந்தை தொடர்ந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: