செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மஸ்கெலியா தோட்டமொன்றில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தேயிலைச்செடிகளுக்கிடையில் கிடந்த ஆணொருவரின் சடலத்தினைப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கேற்ப மஸ்கெலியா பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.
நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஹபுகஸ்தென்ன தெபர்ட்டன் தோட்டத்துக்கு அருகில் பிரதான பாதையிலிருந்து 5 மீற்றர் தூரமுள்ள தேயிலைச்செடிகளுக்கிடையில் கிடந்த சடலமொன்றினையே பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று காலை இந்த இடத்திற்கு விறகு சேகரிப்பதற்குச்சென்ற பிரதேச மக்கள் இந்தச்சடலத்தினை கண்ணுற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு அவர்கள் அறிவித்துள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வருகைத்தந்த மஸ்கெலியா பொலிஸார் அட்டன் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்ததன் பின்பு இன்று மாலை சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு அட்டன் நீதிவான் வருகைத்தந்து விசாரணகைளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சுமார் 48 வயது மதிக்கப்பட்ட இந்த ஆணின் சடலத்துக்கு உரியவர் திவுலாபிட்டிய என்ற இடத்தைச்சேர்ந்தவர் என்றும் இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் ஆள் அடையாள ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேர்க்கஸ்வோல்ட் சிறு நீர் மின் திட்டத்திற்கு தோட்ட மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறு நீர் மின் உற்பத்தி திட்டத்தினால் தாம் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாக தொழிலாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயா ஆற்றின் நீரைத் திசை திருப்பி கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் சிறிய நீர் மின் உற்பத்தித் திட்டமென்றினை மேற்கொள்வதற்கு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிருவாகம் அனுமதித்துள்ளது. இதற்கேற்ப தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நிருமாணப்பணிகள் காரணமாக பெருமளவிலான தேயிலைச் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் கால் நடைகளுக்கான புல் நிலங்களும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தோட்டக்குடியிருப்புக்களை அண்மித்து கால்வாய்கள் அமைக்கப்படுவதால் தோட்டக்குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் இந்தத்திட்டத்திற்காக பெருமளவிலான தேயிலைச் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வேலை நாட்களும் இழக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதே வேளை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறு நீர் மின் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் உரிய பரிகாரங்கள் குறித்து உடனடி உத்தரவாதத்தினை தோட்ட நிருவாகம் வழங்கா விட்டால் இந்தத்திட்டத்திற்கெதிராக கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட போவதாக கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதே வேளை ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தலைமையில் கடந்த 29 ஆம் திகதி இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டமைக்குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட மக்கள் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் ,ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான அடைமழை


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள ஆறுகளிலும் ஓடைகளிலும் கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கேற்பட்டுள்ளது. காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்கள் முழுமையாக நிறைவதற்கு இன்னும் இரண்டு அடி உயரம் நீர் நிரம்ப வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கெனியன் மற்றும் லக்ஷபான போன்ற சிறிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி விடுகின்ற போது அவற்றின் வான்கதவுகள் அடிக்கடி திறந்து மூடிவிடப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது. இதே வேளை அட்டன் நகரில் முறையான வடிகால் வசதிகள் இன்மையால் வெள்ள நீர் பிரதான பாதையை ஊடறுத்துச்செல்வதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இன்றைய மலையகத்தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமரர்சௌமியமூர்த்தி தொண்டான் காரணமானவராவார். பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ன பெருமிதம்

மலையகத்தமிழ்ச்சமூகத்திற்கு மாத்திரமின்றி இந்த நாட்டில் வாழுகின்ற சகல சமூகத்திற்கும் உதாரண புருஷராக செயற்பட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆவார் என்று பிரதம மந்திரி தி.மு.ஜயரண்டன தெரிவித்தார்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு இன்று அட்டனில் இடம் பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவி;ததார்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு இன்று அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அமரர் சௌமிய மூர்த்தித் தொண்டமானின் திருவுருப்படத்திற்கு பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ன ,அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் ,பாரர்ளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ,மாகாணசபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான் ,அனுஷியாசிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
இந்த நாட்டில் வாழுகின்ற பெருந்தோட்டச்சமூகம் இன்று இந்த அளவிற்கு முன்னேறியமைக்கு அமரர் சௌமியமூர்த்தித் தொண்டடானின் சிறந்த செயற்பாடுகளே காரணமாகும். முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தொடக்கமுள்ள அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்து தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் மிகவும் கெடுபிடியான நிலைமையிலேயே தனது தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்த அவரை என்றும் நான் மறக்க மாட்டேன். அத்துடன் இவர் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்வுமற்றவர். தோட்டத்தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம் தேவை என்பதை முதல் முதலில் வலியுறுத்தியவர் இவர் தான் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு தோட்டப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தவர். இன்னும் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கபடவேண்டியுள்ளது.இதே வேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார்.

எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். : திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத் தோட்டத்தொழிலாளர் சமூகம் உட்பட அனைத்துத்தரப்பினருக்கும் சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்.இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் காழப்புணர்வுடன் விமர்சனம் செய்யத்தொடங்கியுள்ளனர்.இவ்வாறான விமர்சனங்களைக் குறித்து நான் அலட்டிக்கொள்வதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் நானுஓயா பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடரந்து பேசுகையில் கூறியதாவது :
எனக்கு வாக்களித்த மக்களுக்குச்சிறந்த சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளளேன்.நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்குறித்து எனக்கு வாக்களிக்காதவர்களே பெரிதும் கவலைப்படுகின்றனர்.எனது இந்தத்தீர்க்கமான முடிவு குறித்து எனக்கு வாக்களித்த மக்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் தேவைப்பாடுகள் குறித்தும் எனக்கு நன்கு தெரியும். இவற்றினை நிறைவேற்றும் வகையில் நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு பிறகு மலையகத்தில் அபிவிருத்திக்குறித்து கூடிய கவனம் செலுத்த உள்ளதாக எனக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் தோட்டப்பகுதி மைதானங்கள் மற்றும் பாதைகளைச்செப்பனிடுவதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளேன். இந்த நிலையில் நாம் எதிர்தரப்பில் இருந்து போது எமது ஆதரவாளர்களுக்குப் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எமது அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

நுவரெலியா மாவட்ட தோட்டப்பகுதிகளிலும் டெங்கு நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள்










நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளிலும் டெங்கு நோய்த்தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கேற்ப கினிகத்தேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெதண்டி கிராமசேவர் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில்
டெங்கு நுளம்பு ஏற்பாடாத வகையில் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம் பெற்றன. இந்த நடவடிக்கைகளில் லெதண்டி பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஏ.எஸ்.டார்வின்; தலைமையில் மால்புரோ தோட்ட மருத்துவ உத்தியோகஸ்தர்கள் தோட்ட மக்களும் சுகாதார தரப்பினரும் கலந்து கொண்டனர்.
படங்களும் தகவலும் ஹட்டன் ஆர்.ரஞ்சன்

பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மின் உற்பத்தித்திட்டத்திற்கு தோட்டத்தொழிலாளர்கள் எதிர்ப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவர் அதே தோட்டத்தைச்சேர்ந்த மாணவி ஒருவரைக் கடத்த முற்பட்ட சம்பவத்தைத் தட்டிக்கேட்டவர்களின் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மின் உற்பத்தித்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 28 ஆம் திகதி கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த நபரொருவரை ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் நோர்வூட் பொலிஸாருடன் தொரடர்பு கொண்டதன் பின்பு குறிப்பிட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தலைவர் விசுவநாதன் தெரிவித்தார். இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக்கொண்டு வரப்பட்டதாகவும் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தித்திட்டத்தினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டான்; பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட உள்ளதாகவும் இ.தொ.கா.வின் முக்கியஸ்தரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஜுலை 12 ஆம் திகதி இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமி ஒருவர் கேர்க்கல்ஸ்வோல்ட் கீழ்ப்பிரி தோட்டத்திலிருந்து பிரதான பாதையின் ஊடாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது பொகவந்தலாவை நகரப்பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கேர்க்கஸ்வோல்ட் தோட்ட மின்உற்பத்தி நிலையத்தில் பணிபுரிகின்ற பலாங்கொடை பிரதேசத்தைச்சேர்ந்த நபரொருவர் அந்த மாணவியின் கையைப்பிடித்து இழுத்துள்ளார்.இதன் போது அந்த மாணவி கூக்குரலிட்டுள்ளார் இதனைச் செவிமடுத்த அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு குறிப்பிட்ட நபரைப் பிடித்துக்கொண்டு நையப்புடைத்துள்ளனர். இந்தச்சம்பவத்தைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் பெருந்திரளாக திரண்டதோடு தொழிலுக்குச்செல்லவும் மறுப்புத்தெரிவித்தனர்.. இதன் பின்பு இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் பொலிஸார் நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்பு சந்தேக நபரை கைது செய்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட நபரைத் தாக்கிய தோட்ட மக்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நோர்வூட் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகைய நடவடிக்கைகளின் ஒன்றாகவே இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மலையகத்தில் வாழைப்பூவின் விலை அதிகரிப்பு

மலையகப்பகுதிகளில் வாழைப்பூவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாழைப்பூ ஒரு கிலோ தற்போது 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாகவே வாழைப்பூவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் தெரிவிக்கின்றனர். நாவலப்பிட்டி ,கினிகத்தேனை ,அட்டன் ,தலவாக்கலை ,மஸ்கெலியா ,தலவாக்கலை போன்ற நகரங்களுக்கு தம்புள்ள காய்கறி மொத்த விற்பனை நிலையத்திலிருந்தே வாழைப்பூக்கள் கொண்டு வரப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பு

உருளைக்கிழங்குக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டதைத்தொடர்ந்து சந்தையில் உருளைக்கிழங்கின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்ப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் தற்போது சந்தையில் 80 ரூபா முதல் 85 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் நுவரெலியா மற்றும் வெலிமடையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு கிலோ உருளைக்கிழங்கு 90 ரூபா முதல் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதே வேளை இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்குக்கு இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உள் நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் நன்மையடைந்துள்ளனர். இதே வேளை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்த ஒரு கிலோ உருளைக்கிழங்கைத்தற்போது 80 ரூபா முதல் 85 ரூபா வரை விலைக்கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மலையகத்திற்கு விஜயம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் நாளை மறுதினம் 29 ஆம் திகதி தலவாக்கலை ,லிந்துலை ,நானுஓயா ,அக்கரப்பத்தனை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தப்பகுதிகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்கள் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர்கள் ,மாவட்டத்தலைவர்கள் ,தோட்டக்கமிட்டித்தலைவர்கள்,தோட்டத் தலைவர்கள் மற்றும் இந்தச்சங்கத்தின் முக்கியஸ்தர்களைச்சந்தித்துகலந்துரையாடுவதற்காக இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதியமைச்சர் அட்டன் இல்லத்தில் கொள்ளை

முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் ஊடகச்செயலாளருமான எஸ்.ஜெகதீஸ்வரனின் அட்டன் இல்லத்தில் கொள்ளைச்சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டன் நகரின் மல்லியப்பூ பகுதியிலுள்ள முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன் இல்லத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற இனந்தெரியாத குழுவொன்று சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பனவற்றைக் களவாடிச்சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட அவரின் குடும்பத்தினர் கடந்த 16 ஆம் திகதி வீட்டை மூடிவிட்டு சென்றதன் பின்பு நேற்று 26 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளனர். இதன் போது வீட்டின் ஜன்னலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததையும் வீட்டினுள் இருந்த நகைகள் உட்பட ஒரு தொகை ரொக்கப்பணம் காணாமல் போயிருந்ததையும் தெரிந்து கொண்டதன் பின்பு அட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழுவொன்று தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி கண்டி இந்திய உதவி தூதுவருக்குக் கடிதம்


மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற உடனடிக்குறைப்பாடுகள் சிலவற்றைத் தீர்க்கக்கோரி கண்டி உதவி இந்திய தூதுவருக்கு ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவது குறித்து நான் ஏற்கனவே உங்களை நேரில் சந்தித்து அறிவித்துள்ளேன்.அதன் போது அந்த வைத்தியசாலைக்கு உடனடியாக தேவைப்படுகின்ற சில விடயங்கள் குறித்து அறிவிக்குமாறு என்னிடம் தெரிவித்தீர்கள் அதற்கேற்ப இந்த வைத்தியசாலையில் உடனடியாக தேவைப்படுகின்ற பின்வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஆய்வுக்கூட வசதிகள் ,எக்ஸ்ரே இயந்திரம் ,அல்ட்ரா இஸ்கேனிங் இயந்திரம் ,வைத்தியசாலைக்கான பாதுகாப்பு மதில் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனான விசேட வைத்திய நிபுணர்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே இவ்விடயம் குறித்து கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்தக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் கடும் மழை : மரக்கறி விலைகள் அதிகரிக்கலாம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்தில் விவிசாயப்பயிர்ச் செய்கை பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இவ்வாறு தொடர்ச்சியான மழை வீழ்;ச்சித்தொடருமானால் நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கோவா ,போஞ்சி ,கரட் ,பீட்றூட் ,லீக்ஸ் போன்ற மரக்கறி வகைளின் விலைகள் எதிர்வரும் வாரங்களில் அதிக்கலாமென நுவரெலியா மாவட்ட மரக்கறி வியாபாரிகள் எதிர்வு கூருகின்றனர். இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை ,மஸ்கெலியா ,அக்கரப்பத்தனை போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

நாவல் நகர் அரச மீன் விற்பனை நிலையம் குறித்து பொதுமக்கள் புகார்

மீன் பிடிக்கூட்டுத்தானபத்தின் அனுமதியுடன் நாவலப்பிட்டி நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையம் அடிக்கடி மூடப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். மீன் பிடிக்கூட்டுத்தாபனத்தினால் நாடெங்கும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மீன் விற்பனை நிலையங்களில் தரமான மீன்களை நியாயமான விலையில் பெறக்கூடியதாக உள்ளது.இவ்வாறானதொரு நிலையில் நாவலப்பிட்டி நகரிலுள்ள மீன் விற்பனை நிலையம் முறையாக செயற்படாததால் மீன் நுகர்வாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே நாவலப்பிட்டி நகரிலுள்ள மின் விற்பனை நிலையத்தினை முறையாக செயற்படுவதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாவலப்பிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தித்திட்டத்தின் சுரங்கப்பாதை பணிகள் பூர்த்தி










மேல்
கொத்மலை நீர் மின்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மும்முரமாக இடம் பெற்று வருகின்றன. தலவாக்கலை நகரத்துக்கு அருகில் மேல் கொத்மலை நீரணையின் கட்டுமானப்பணிகள் கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தத்திட்டத்தின் தலவாக்கலை நீரணையிலிருந்து சுரங்கப்பாதை ஊடாக பூண்டுலோயா நியாங்கந்துர மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. 13 கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மேல் கொத்மலைத்திட்டத்தின் மூலமாக 150 மெஹாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேல் கொத்மலைத்திட்டத்தினை முன்னிட்டு தலவாக்கலை பிரதேசத்தில் புதிய குடியிருப்புக்கள் ,கட்டிடங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேல் கொத்மலைத்திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

புதன், 25 ஆகஸ்ட், 2010

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடய கூட்டொப்பந்தத்துக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முஸ்தீபு : சதாசிவம் தெரிவிப்பு

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தத்தில் இந்தக் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்க அங்கத்தவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் இதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வுத் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ,இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ,பெருந்தோட்டத்தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று அதன் பின்பு கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தக்கூட்டொப்பந்தமானது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குச் சாதகமாக மேற்கொள்ளப்படுவதால் தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற் ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது.இதே வேளை கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த கூட்டொப்பந்தமானது ஏனைய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி விடுவதால் கூட்டொப்பந்தத்தில் உடன்படாத தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விருப்பமின்றி கூட்டொப்பந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனை நாம் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதுகின்றோம்.இதனடிப்படையில் இந்தக்கூட்டப்பொப்பந்த்திற்கெதிராக உயர் நீதி மன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருகின்றேன் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஹட்டன் வட்டவளையில் தண்ணீர் கொள்கலன் குடை சாய்ந்தது : எவருக்கும் பாதிப்பு இல்லை.










தண்ணீர்
எடுத்துச்சென்ற கொள்கலன் ஒன்று குடைசாய்ந்த சம்பவமொன்று வட்டவளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வட்டவளை நகருக்கு அருகிலுள்ள டி காடன் பகுதியில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை மாலைத்தீவுக்குக் கொண்டுச்செல்வதற்காக கொழும்புத் துறைமுகத்தை நோக்கிச் சென்ற லொறியின் கொள்கலனே குடை சாய்ந்துள்ளது. இந்தச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.இந்தச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.









தகவல்
: ஹட்டன் ஆர்.ரஞ்சன்

நாவலப்பிட்டியவில் சிறுத்தை தாக்கியதால் சிறுமி ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.

சிறுத்தை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய தோட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு உள்ளான இந்தச் சிறுமி தனது சித்தியுடன் பீலிக்கரையில் குளித்து விட்டு வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை ஒன்று சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.இதன் போது சிறுமியின் சித்தி வீறிட்டுக் கதறவே சிறுத்தை தப்பிச்சென்றுள்ளது. சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுமியின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தச்சிறுமி இம்புல்பிட்டிய தோட்டத்தைச்சேர்ந்த ஒன்பது வயதான ரூபிக்கா என்பவராவார்.

மலையகத்தின் பிரபல கணிதத்துறை ஆசிரியர் அமரர் ஜீவராஜன் பற்றிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்












அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கணித ஆசிரியராக கடமையாற்றி மலையகத்தமிழ் மாணவர்களின் நூற்றுக்கணக்கானோர் பல்கலைக்கழகங்களில் கணித விஞ்ஞானத்துறைகளில் பட்டம் பெறுவதற்கு வழிவகுத்த அமரர் ஜீவராஜனின் 24 ஆம் திகதி 48 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் பெயரில் இணையத்தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் விஜயசிங் தலைமையில் இடம் பெற்ற போது அமரர் ஜீவராஜனின் குடும்பத்தினரும் மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர். இந்த இணையத்தளத்தின் பெயர் ஜீவராஜன்.com







நாவலப்பிட்டி
தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 24 ஆம் திகதி நாவலப்பிட்டி தமிழ்க்கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கு பற்றிய மலையக காமன் கூத்துக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் அ.லெட்சுமணனின் ஏற்பாட்டிலும் சு.குணசீலனின் தலைமையிலும் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது கவிஞர் சு.முரளிதரன் காமன் கூத்து நெறியாளர் பிரான்சிஸ் ஹெலன் ஆகியோர் பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் நன்றியுரையினை த.இராஜேந்திரன் ஆற்றினார்.மேலும் காமன் கூத்துக்கலைஞர்கள் இந்தக்கூத்துத்தொடர்பான சில விளக்கங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்;ந்துக்கொண்டனர்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்று முரளிரகுநாதன் தெரிவிக்கின்றார்.











கொட்டகலை
மாவட்ட வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அந்த மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் இடம் பெற்ற சந்திப்புக்குப் பிறகு கருத்துத்தெரிவித்த போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் :
கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் நீர்பற்றாக்குறை ,சிற்றூழியர் பற்றாக்குறை மற்றும் உள்ளகத்தொலைத்தொடர்பாடல் வசதியின்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றினை மத்திய மாகாணசுகாதார அமைச்சின் ஊடாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் .அத்துடன் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மூலமாக உள்ளகத்
தொலைத்தொடர்பாடல் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.என்றார்.

கொட்டகலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொட்டகலை ட்ரைட்டென் தோட்ட கே.ஓ தோட்டத்தில் இன்று மாலை குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை ட்ரைட்டென் தோட்ட கே.ஓ தோட்டத்தில் தனது விவசாயத்தோட்டத்தில் விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபரொருவரை திடீரென வந்த நூற்றுக்கும்
மேற்பட்ட குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளன. இதன் போது இவரைப் பாதுகாப்பதற்கு முயன்ற மேலுமொரு நபரையும் அந்தக்குளவிகள்
தாக்கியுள்ளன. இவ்வாறு குளவிகள் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உடனடியாக கொட்டகலை மாவட்டவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய கிறேஹெட் தோட்டச்சிறுவர்களின் நலன் கருதி இலசவ வைத்திய முகாம்.






நாவலப்பிட்டி மஹிந்தானந்த அபிவிருத்தி மன்றம் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்பன ஏற்பாட்டில் நாவலப்பிட்டி கிறேஹெட் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இலசவ வைத்திய முகாமொன்று இடம் பெற்றது. இந்த வைத்திய முகாமில் கிரேஹெட் மேற்பிரிவு ,கீழ்ப்பிரிவு ,சமர்செட் ,அலுகெல ,பரணகல ஆகிய தோட்டங்களைச்சேர்ந்த 183 சிறுவர்கள் பயன் பெற்றனர். இந்த வைத்திய முகாமில் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தோட்ட சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.எம்.கிருஸ்ணமூர்த்தி , தோட்ட முகாமையாளர் சமிந்த குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

கெலிவத்தைத்தோட்ட முதியோர் சுற்றுலாப் பயணம்.















பத்தனை
கெலிவத்தை தோட்ட நிருவாகமும் எப்.எல்.ஓ நிறுவனமும் இணைந்து பொது நல சமூக சேவை திட்டத்திற்கேற்ப ஏற்பாடு செய்த சுற்றுலா பயணத்தின் போது இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த ஓய்வுப்பெற்ற தொழிலாளர்கள் 40 பேர் கெலிவத்தைத்தோட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீ கணேசன் தலைமையில் பங்கு பற்றினர். இவர்கள் இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்பு கண்டி மாவட்டத்திலுள்ள சில முக்கிய சில இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பின்பு தோட்டத்திற்குத் திரும்பினர்.

அட்டனில் முச்சந்தி இலக்கிய வட்டத்தின் சந்திப்பு









அடுத்த வருடம் இலங்கையில் இடம் பெறவுள்ள உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மலையக எழுத்தாளர்களின் பங்களிப்புத் தொடர்பாக முச்சந்தி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் அட்டனில் நேற்று இடம் பெற்றது
இந்த நிகழ்வில் மலையக இலக்கிய ஆர்வலர் லெனின் மதிவாணம் கருத்துரை வழங்கும் போது உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மலையகத்தில் பிரதேச வாரியாக எழுத்தாளர்கள் பங்கு பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது லண்டனில் தற்போது வாழுகின்ற சாகித்திய பரிசு பெற்ற எழுத்தாளர் வவுனியூர் ஆர்.உதயணனுக்கு மலையக எழுத்தாளர்கள் சார்பான பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் எழுத்தாளர் அந்தனிஜீவா தலைமையில் கொழுந்து சஞ்சிகை அறிமுகவிழாவும் இடம் பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் திடீர் மரணவிசாரணையாளர்களுக்குப் பணிமனைகள் அமைக்குமாறு கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு மத்திய மாகாணசுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கரப்பத்தனை ,கொட்டகலை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகள் உள்ள பிரதேசங்களில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவையினை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு
அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சருக்குக் கடிதம் மூலம் தான் அறிவித்துள்ளதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு


இலங்கையின் தோட்டபுறப் பாடசாலைகள் மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் விசேடமாக தோட்டப் பகுதிகளில் வருடாந்தம் பாடசாலைகளை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 20 வீதம் என்ற அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆரம்ப பாடசாலையான முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரையுள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 8.4 வீதமாக காணப்படுவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் தோட்டபுறங்களில் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் சதவீதம் தோட்டப்புறங்களில் 20 வீதமாக காணப்பட்ட போதிலும் நாட்டின் ஏனைய பகுதியில் இந்த எண்ணிக்கை 5 வீதமாக காணப்படுகிறது. அத்துடன் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து விலகும் மாணவர்களின் சதவீதம் தோட்டப்புறங்களில் 8.4 வீதமாக காணப்பட்ட போதிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த எண்ணிக்கை 1.4 வீதமாக காணப்படுகிறது. இதனை தவிர தோட்டப்புறங்களில் சாதாரண தரப்பரீட்சையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 வீதம் என்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ளதுடன் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத வீதமாக காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் போதிய வசதிகள் காணப்படவில்லை எனவும் அத்துடன் தோட்டங்களில் இயங்கும் பாடசாலைகள் பலவற்றில் உயர்தர வகுப்புகள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதார தாழ் நிலையாலும் போதிய வாழவிட வசதிகள் இன்மையினாலும் பாடசாலைகளுக்குச்செல்ல வேண்டி பெரும்பாலான பிள்ளைகள் வறிய நிலையை எதிர்நோக்குவதாலும் பாடசாலைக்குச்செல்லும் ஆர்வம் பிள்ளைகள் மத்தியில் குறவைடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம் பெற்றது











இவ்வருடத்திற்கான
ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. முதலாவது வினாப்பத்திரற்கான பரீட்சை காலை 9.௩0 மணிமுதல் 10.15 மணிவரையிலும் இரண்டாம் வினாப்பதிரத்திற்கான பரீட்சை காலை 10.45 முதல் நண்பகல் 12 மணிவரை இடம் பெற்றது.. இந்தப்பரீட்சைக்குத்தோற்றவுள்ள பிள்ளைகளைப் பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வருவதில் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தியதை அவதானிக்கக்கூடியதாகயிருந்தது.

சனி, 21 ஆகஸ்ட், 2010

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் பல வகையான பூக்கள்







நுவரெலியா மாநகர சபையினால் நிருவகிக்கப்படுகின்ற விக்டோரியா பூங்காவில்
தற்போது பலவகையான பூக்கள் மலர்ந்துள்ளதால் இதனைக் கண்டுக்களிப்பதற்கு
வெளிநாட்டு உள்நாட்டு உல்லாச பயணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்தப்பூங்காவில் உலாவுதவற்கு சிறுவர்களும் மிகுந்த ஆர்வம் செலுத்தி
வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

மலையகப் பஸ்சேவை குறித்து முரளிரகுநாதன் பேச்சுவார்த்தை










அட்டன் பஸ் டிப்போவினால் மலையகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற
பஸ்சேவைகள் குறித்து ஜனநாயகத்தொழிலாளர் காங்;கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் அட்டன் பஸ் டிப்போவின் முகாமையாளரைச் சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார். இதன் போது தோட்டப்பகுதி மக்களின் நலன் கருதி உரிய பஸ்சேவைகளை நடத்துவதற்கு இந்தப்பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு காணப்பட்டதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் மேலும் தெரிவித்தார்.

கெலிவத்தைத்தோட்ட முதியோர் சுற்றுலாப் பயணம்.



பத்தனை கெலிவத்தை தோட்ட நிருவாகமும் எப்.எல்.ஓ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுலா பயணத்தின் போது இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த ஓய்வுப்பெற்ற தொழிலாளர்கள் 40 பேர் இன்று பங்கு பற்றியுள்ளனர். இவர்கள் இன்று இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கண்டி
மாவட்டத்திலுள்ள சில இடங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
.