சனி, 9 ஜூலை, 2011

நுவரெலியா சீதையம்மன் ஆலயம்


சோ.ஸ்ரீதரன்

எமது நாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளைக் கவர்ந்திழுப்பதில்
வரலாற்று முக்கியத்தவம் மிக்க வணக்கஸ்தலங்களும் உள்ளன. அந்த வகையில்இராமாணயத்தில் குறிப்பிடப்படுகின்ற அசோக வனமாக நுவரெலியா நகருக்கு அண்மையிலுள்ளசீதையம்மன் கோவில் சூழல் அமைகின்றது.
இராமன் , சீதை ,லக்குமணன் வனவாசம் செய்து கொண்டிருந்த போது இலங்கை அரசன் இராவணன் நயவஞ்சகமாய் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில் சிறையடைத்தான் என்று இராமாயணம் கூறுகின்றது. அவ்வாறு இராவணனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சீதை இராவணனின் அரண்மனையில் தங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து அசோக வனத்தின்
அசோக மரத்துக்கு அடியில் தங்கியதாக இராமயணக்கதைகள் கூறுகின்றன.
அவ்வாறு இலங்கையில் சீதை தங்கிய இடமாக சீதா எலிய கருதப்படுகின்றது.
சீதை தங்கியதாக கருதப்படுகின்ற இடத்தில் தற்போது ஆலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயத்தில் ராமர் , சீதை ,லக்குமணன் , அனுமன் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளன. இந்த
ஆலயத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் சீதாதேவி குளிர்த்ததாகவும் அந்த ஆற்றோரத்திலுள்ள கற்பாறையில் அமர்ந்து கூந்தல் உலர்த்தியதாகவும் பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.


அத்துடன் இந்தக் கற்பாறையிலுள்ள பாதச்சுவடுகள் இராமனின் தூதுவனான அனுமானின் பாதச்சுவடுகளென்றும் அவனின் பாதச்சுவடுகள் கற்பாறையில் பதியும் வகையில் அவன் பலசாலி என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதே வேளை இந்தச் சீதையம்மன் ஆலயத்ததைச்சூழவுள்ள பகுதிகளிலுள்ள மண் கரு நிறமாகவுள்ளமைக்கு அனுமன் இலங்கையை எரித்த போது மண் கருநிறமாக மாறியதாக பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். நுவரெலியா நகரிலிருந்து 6 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த சீதையம்மன் ஆலயத்துக்கு
வெலிமடைபாதையின் ஊடாக பயணிக்கின்ற போது காணலாம். அடர்ந்த காடுகள் சூழ்ந்த பகுதியிலுள்ள இந்த ஆலயத்துக்கு நாளாந்தம் இந்தியாவிலிந்து பக்தர்களும் உல்லாச பயணிகளும் அதிகமாக வந்து செல்வது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த ஆலயத்தின் உட்சுவர்களில் இராமாயண கதையினைச்சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வித இனமத பேதமின்றி சீதையம்மன் ஆலயத்துக்கு வந்துச்செல்வதில் இலங்கை மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: