சனி, 9 ஜூலை, 2011

ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் நிறுவகர் தினமும் பரிசளிப்பு விழாவும்










சோ.ஸ்ரீதரன்
இலங்கைத்திரு நாட்டில் மணி மகுடமென விளங்கும் ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மழலயகத்தமிழ்க் கல்வித்துறையில் வீறு நடைபோட்டு 121 ஆவது மைல் கல்லில் தடம் பதித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் 29 இந்தக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் பெருமையுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. இதற்கேற்ப இவ்வருடத்திற்கான கல்லூரியின் நிருவகர் தினமும் அதனோடு ஒட்டிய பரிசளிப்பு விழாவும் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஹற்றன் D.K.W கலாசார மண்டபத்தில் அதிபர். எஸ். விஜயசிங் தலைமையில் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.









இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னைய நாள் பீடாதிபதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான சோ. சந்திரசேகரன்;, சிறப்பு அதிதியாக ஹைலன்ட்ஸ் கல்லூரியில் இருந்து வைத்திய பீடத்திற்குத் தெரிவாகிய, முதல் மாணவியான, வைத்திய காலநிதி வாசுகி குருசாமி வருகை தந்து சிறப்பித்தனர்;. மிகக் குறுகிய கால, செல் நெறியில் பெருந்தோட்ட பாடசாலைகளின் கௌரவத்தை நிலை நிறுத்தும் பெறுமதி மிக்க உயர் பீடமாக இக் கல்லூரி திகழ்கிறது. 'வலியது வாழும்' என்னும் வாய்மொழிக்கேற்ப பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் சாதனைக்களமாக மாறியுள்ளது. தேசிய நிலையிலான பெறுபேறுகள் பெரும்பாலான பாடசாலைகளில் கவலை தரக் கூடிய வகையில் அமையும் அதேவேளை ஹைலன்ட்ஸ் கல்லூரி, கடந்த தசாப்தங்களில் வியக்கத்தக்க வகையில் பெறுபேறுகளைப் பெற்றிருப்பது பெருமைக்குரியது.
ஹைலன்ட்ஸ் கல்லூரியின் சாதனைப் பட்டியல் வரிசையில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 113 மாணவர்களுள் 140 என்ற வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 33 மாணவர்கள் சித்திபெற்றனர். 66 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அதேவேளை அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று கல்லூரியின் தரத்தை நிலைநிறுத்தினர்.
செல்வன். S. கவினாஸ் 175 புள்ளிகள், செல்வன். C. தனுஷன் 174 புள்ளிகள், செல்வி. R. பவாஷினி 172 புள்ளிகள் என்ற அடிப்படையில் பெற்று 06, 11, 14 என்ற மாவட்ட நிலைகளையும் தட்டிச் சென்றனர். இம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தம்மை அர்ப்பணித்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த காலங்களை விட மனநிறைவைத் தரும் வகையில் அமைந்துள்ளன. 164 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களுள் 155 மாணவர்கள் 6 பாடங்களுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர். 143 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அத்தோடு அதி விஷேட சித்தியான 9யு சித்தியை 05 மாணவர்கள் பெற்றுள்ளனர். செல்வன். R. டிலச்ஷன், செல்வன். M. கௌசிக், செல்வன். R. திலக்சான், செல்வி. J. சிந்துஷா, செல்வி. J. லக்சாலினி ஆகியோர் அச் சிறப்பிற்குரியவர்கள். அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுள் ஒருவராக செல்வன்.R டிலக்ஷன் ஜனாதிபதி விருதைப் பெறுவதற்கு ஹைலன்ட்ஸ் கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் மாணவன் என்பது பெருமைக்குரிய விடயம்.

கருத்துகள் இல்லை: