மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 31 ஜூலை, 2011
ரம்பொடை சுரங்கப்பாதை
சோ.ஸ்ரீதரன்
இயற்கை எழில் கொஞ்சும் நுவரெலியா மாவட்டத்திற்குப் பல்வேறு தேவைகளுக்காக வருகின்ற மக்களுக்கு இலகுவான போக்குவரத்துச்சேவையை வழங்குவதற்காக யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ஏற்படுத்தப்பட்டதே ரம்பொடை சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதை தான் இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.
54 கிலோ மீற்றர் தூரமுள்ள கம்பளை – நுவரெலியா பாதையில் தவலந்தென்ன சந்தியைத் தொடர்ந்துள்ள ரம்பொடையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச்சுரங்கப்பாதையின் நீளம் 225 மீற்றராகும். இதன் அகலம் 7 மீற்றராகும்.இந்த சுரங்கப்பாதையினுள் வாகனப்போக்குவரத்துகளுக்காக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பான் அரசாங்கத்தின் 200 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதையின் பணிகள் 2008 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.
இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட இந்தச்சுரங்கப்பாதையை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ 2008 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்தச்சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாதைப்பகுதியில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்பட்டதால் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காக அருகிலுள்ள மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
இந்தச்சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் சிறிய நீர் வீழ்ச்சியொன்று உள்ளது. சுரங்கப்பாதையைக்கடந்ததன் பின்பு ரம்பொடை நீர்வீழ்ச்சி உள்ளது.
சுரங்கப்பாதையினுள் இரவும் பகலும் மின்னொளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுரங்கப்பாதையினுள் வாகனப்போக்குவரத்தக்களை அவதானிப்பதற்காக பொலிஸ் காவலரணொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கம்பளை வழியாக நுவரெலியாவுக்குச் செல்லுகின்ற உல்லாசப்பயணிகளும் ஏனையவர்களும் இந்தச்சுரங்கப்பாதை அருகில் தமது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு ரசித்துச்செல்வதை அவதானிக்கலாம்.
இலங்கையின் மிக நீண்ட சுரங்கப்பாதையை நீங்களும் ஒரு நாள் சென்று ரசியுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக