மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 31 ஜூலை, 2011
ரம்பொடை ஆஞ்சநேயர் ஆலயம்
சோ.ஸ்ரீதரன்
இலங்கை மற்றும் ஏனைய நாட்டு மக்களின் வணக்கஸ்தலமாக கருதப்படுகின்ற இடங்களில் றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயமுமொன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை நுவரெலியா பிரதான பாதையில் றம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின் சிகரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது .
இலங்கை சின்மயா மிஸ்ரீனினால் நிருவகிக்கப்படுகின்ற இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. றம்பொடை என்று அழைக்கப்படுகின்ற இந்த பிரதேசத்தை சிலர் இராமாயணத்துடன் தொடர்புபடும் வகையில் ராம்படை என்று குறிப்பிடுகின்றனர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்த போது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப்பிரதேசத்திலும் சீதையைத் தேடியதாகவும் இராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப்பிரதேசத்தில் தயாராகவிருந்ததாகவும் இதனால் ராம்படை என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் றம்பொடையாக பெயர் திரிபடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் சுவாமி சின்மயானந்தர் இந்தப்பிரதேசத்தை இராம்போத ( இராமர் பற்றிய அறிவு ) என்று குறிப்பிட்டு இந்தப்பகுதியில் ஆச்சிரமம் ஒன்றும் ஸ்ரீ பக்த அனுமனுக்கு கோவிலொன்றும் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலயத்திலுள் ஸ்ரீ பக்த அனுமன் சிலை 16 அடி உயரமானது. தமிழ் நாட்டிலுள்ள மகாபலிபுரத்திலுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலை தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து றம்பொடைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட இந்தச்சிலையைப் பிரதிஷ்டை செய்த பின்பு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆலயத்தின் குன்று பகுதியிலிருந்து றம்பொடை பிரதேசத்தின் அழகினை ரசிக்க முடியும்.இந்த ஆலயத்துக்கு அருகில் றம்பொடை நீர்வீழ்ச்சி , இலங்கையில் நீண்ட சுரங்கப்பாதை ,கொத்மலை நீர்த்தேக்கம் என்பன உள்ளமை முக்கிய அம்சமாகும்.இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பூரணைத்தினத்தன்றும் இடம் பெறும் விசேட பூஜைகளில் உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வர். இந்த ஆலயத்துக்கு சகல இனமக்களும் சகல மதத்தினரும் வந்து செல்வது முக்கிய அம்சமாகும். றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலய ஆச்சிரமத்தின் ஊடாக ஒவ்வொரு பூரணித்தினத்தன்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. இந்த ஆச்சிரமத்தினால் பிரதேசத்தில் வாழுகின்ற சிறுவர்களுக்கு முன்பள்ளி ,அறநெறி கல்வி புகட்டப்படுவதோடு ,கல்வி உதவிகளும் பெண்களுக்கு சுயத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக