மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 31 ஜூலை, 2011
தோட்டத்தொழிலாளர்களின் வீடில்லா பிரச்சினைக்கு எப்போது தீர்வு ?
சோ.ஸ்ரீதரன்
தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற தொழிலாளர் குடும்பங்களின் பெரும்பாலானோருக்குப் புதிய வீடுகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட லயன் குடியிருப்புக்களில் தோட்டத்தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து வந்தேறு குடிகளாக வந்தவர்கள் இன்று இந்த நாட்டில் நிரந்திரமாக வாழவேண்டிய சூழலிலுள்ளனர். இந்த நாட்டில் பெருந்தோட்டத்தொழிற்துறையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் தோட்டப்பகுதிகளில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புக்கள் இன்று இந்தத்தொழிலாளர்களின் நிரந்திர இருப்பிடங்களாக மாறிவிட்டன. பத்தடி விஸ்திரமான அறைக்குள் முடங்கி வாழும் அவர்களின் வாழ்க்கை இரண்டு சகாப்தத்தை நெருங்கி கொண்டிருக்கின்றது. எந்த விதமான வீட்டுரிமையோ காணியுரிமையோ இன்றி தோட்டத்தொழிலாளர் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டி நிலைமை தொடர்கின்றது.
தோட்டப்பகுதிகளில் லயன் குடியிருப்பு ,இரட்டை வீடுகள் , தொடர் மாடி குடியிருப்புக்கள் என்ற ரீதியில் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய வகையில் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. அமரர் பெ.சந்திரசேகரன் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் 7 பேர்ச்சர்ஸ் நிலத்தில் வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக தனிவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக மீள கடன் செலுத்தும் திட்டத்திற்கேற்ப தொடர்மாடிகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அதே வேளை தோட்டத்தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து கடன் பெற்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் தோட்டப்பகுதிகளில் தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்டக்கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக்கொடுப்பதில்லை ,மாறாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக லயன் குடியிருப்புகளுக்குக் கூரைத்தகரங்களை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
தோட்டங்களில் தற்போது தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற இந்த வேளையில் ஒரே வீட்டில் குறைந்தது மூன்று குடும்பங்கள் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே வேளை தோட்டங்களிலுள்ள ஒதுக்குப்புறங்களில் எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக குடில்களை அமைத்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைமை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் 5000 தற்காலிக குடில்களில் வாழந்தவர்களுக்கு வீடமைத்துக்கொள்வதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் மக்கள் வங்கியின் ஊடாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட 30 ஆயிரம் ரூபா இதுவரை உரியவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது நாடடிலுள்ள ஒவ்வொரு தோட்டப்பிரிவிலும் லயன் குடியிருப்புக்களில் வாழுகின்றவர்களைத்தவிர சுமார் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் எவ்வித குடியிருப்பு வசதிகளுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறு பார்க்கின்ற போது சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் புதிய வீடுகள் தேவைப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இந்திய அரசாங்கம் 4000 வீடுகளைத் தோட்டப்பகுதிகளில் அமைத்துக்கொடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா அண்மையில் அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் மலையகத்திலுள்ள சில தொழிற்சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு தமது சங்கத்தின் ஊடாக வீடுகள் அமைத்தக்கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்ட சங்கங்களில் அங்கத்துவம் உள்ளவர்களுக்கு மாத்திரமே வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுமெனவும் தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் இந்தத்தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவம் சேர்க்கும் போது தமது தலைவர்கள் ஊடாக வீடமைப்புத் தொடர்பாக சில விண்ணப்பங்களை விநியோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தோட்டத்தொழிலாளர்களை எப்படியும் ஏமாற்றலாமென்ற ரீதியில் சில தொழிற்சங்கங்கள் செயற்படுவது வருந்தத்தக்க விடயமாகும்.
எனவே இந்திய அரசாங்கத்தினால் தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத்திட்டமாகட்டும் அல்லது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத்திட்டமாக இருக்கட்டும் இந்த வீடமைப்புத்திட்டங்கள் கட்சி தொழிற்சங்க ரீதியாக மேற்கொள்ள முடியாதென்பதை தோட்டத்தொழிலாளர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். இந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு தனிவீட்டுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக