நாவலப்பிட்டி கலபொட தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையின் உபகரணங்கள் மற்றும் இரும்புப் பொருட்களைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் தோட்ட நிருவாகம் பலவந்தமாக அப்புறப்படுத்தி வருகின்றமைக்கு எதிரப்புத் தெரிவித்து இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களும் எனையவர்களும் இன்று 4 ஆம் திகதி கலபொட தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
ஜனவசம நிருவாகத்துக்கு உட்பட்ட நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலை நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையிலுள்ளது.அத்துடன் இந்தத் தோட்டத்தில் தொழில் புரிகின்ற 200 தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில் கைவிடப்பட்ட இந்தத் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலையின் ஒரு தொகுதி உபகரணங்களைத் தோட்ட நிருவாகம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் நேற்று 3 ஆம் திகதி லொறி ஒன்றின் மூலம் மிகவும் ரகசியமாக அப்புறப்படுத்தியுள்ளது. இதனைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் உடனடியாக தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்கு வருகைத் தந்து தேயிலைத் தொழிற்சாலையின் உபகரணங்களை அப்புறப்படுத்துவதற்காக வருகைத் தந்தவர்களின் கார் ஒன்றினை தடுத்து வைத்துள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக கலபொட தோட்டத்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கும் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக