புதன், 4 ஜனவரி, 2012

கொட்டகலை கே.ஜி.கே. தோட்ட தொழிலாளர்கள் பணி நிறுத்தம்

கொழும்பிலிருந்து சடலமொன்றினைக் கொண்டு வருவதற்கு தோட்டத்தின் லொறியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த தோட்ட நிருவாகத்துக்கெதிராக கொட்டகலை யுலிபீல்ட் கே.ஜி.கே. தோட்டத்தைச்சேர்ந்த 220 தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப்போராட்டம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :
கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தின் கே.ஜி.கே. பிரிவில் தொழில் புரிகின்ற தொழிலாளர் குடும்பத்தைச்சேர்ந்த 23 வயது இளைஞனொருவன் கடந்த 31 ஆம் திகதி கொழும்பு வத்துபிட்டியவில் இடம் பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலத்தினைத் தோட்டத்துக்கு எடுத்து வருவதற்கு தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்தின் லொறியைக் கேட்டுள்ளனர். எனினும் இந்த லொறியை வழங்குவதற்கு தோட்ட அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமது சொந்த செலவில் சடலத்தினைக் கொண்டு வந்த தோட்டத்தொழிலாளர்கள் குறிப்பிட்ட இளைஞனின் சடலத்தினை 2 ஆம் திகதி அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களில் மரணம் சம்பவிக்கின்ற சந்தர்ப்பங்களில் சடலத்தினை வைத்தியசாலையிலிருந்து கொண்டு வருவதற்கு தோட்ட லொறியை வழங்குவது வழக்கமாகும். இந்த நிலையில் மேற்படி சம்பவத்தில் மரணமான இளைஞனின் சடலத்தினை கொண்டு வருவதற்கு தோட்ட நிருவாகம் லொறியினைக் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தமைக்குக் கண்டனம் தெரிவித்தே கே.ஜி.கே. தோட்டத்தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுப்பு தெரிவித்த தோட்ட நிருவாகத்தினர் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தம் மேற்கொள்வதை உறுதிபடுத்தினர்.

கருத்துகள் இல்லை: