கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தில் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்திற்கான வேலை அளவு குறித்து தீர்க்கமாக குறிப்பிடப்படாத காரணத்தினால் தற்போது தோட்டப்பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான கூட்டொப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய கூட்டொப்பந்தம் கடந்த வருடம் ஜீன் மாதம் 6 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டமையும் இந்தக்கூட்டொப்பந்தம் 2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும். 21 பெருந்தோட்டக்கம்பனிகள் , இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ,மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றின் நிருவாகத்துக்கு உட்பட்ட தோட்டங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு புதிய கூட்டொப்பந்தத்திற்கேற்ப வேதனம் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. புதிய கூட்டொப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளமாக 380 ரூபாவும் நிலையான விலை பங்கு கொடுப்பனவாக 30 ரூபாவும் மாதமொன்றுக்கு வழங்கப்படுகின்ற வேலை நாட்களில் 75 வீதம் அல்லது அதற்கு மேலாக வருகைத்தருகின்ற தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வருகைக்கொடுப்பனவாக 105 ரூபாவும் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படைச்சம்பளம் மற்றும் நிபந்தனைக்கொடுப்பனவுகள் உட்பட தோட்டத்தொழிலாளி ஒருவர் 515 ரூபா சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமென புதிய கூட்டொப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேயிலைத்தொழிலாளர்கள் மேலதிகமாக பறிக்கின்ற ஒவ்வொரு கிலோ தேயிலைக்கொழுந்துக்கும் 17 ரூபாவும் இறப்பர் தொழிலாளர்கள் மேலதிகமாக சேகரிக்கின்ற ஒவ்வொரு கிலோ இறப்பர் பாலுக்கும் 25 ரூபாவும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்திற்கான வேலை அளவு குறித்து குறிப்பிடப்படாத காரணத்தினால் சிலதோட்டங்களில் ஒரு நாள் அடிப்படைச்சமபளத்திற்காக 13 கிலோ கொழுந்தினையும் மேலும் பல தோட்டங்களில் 14 கிலோ ,15 கிலோ ,16 கிலோ ,17 கிலோ ,18 கிலோ ,20 கிலோ என்ற ரீதியில் கொழுந்து பறிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அளவையும் சில தோட்டங்கள் தன்னிச்சையாக அதிகரிப்பதற்கு எத்தனித்து வருவதால் பொகவந்தலாவை ,அட்டன் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் தத்தமது தொழிற்சங்கங்கள் ஊடாக தொழிற் திணைக்கள ஆணையாளரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் சில தோட்டங்களில் அவ்வப்போது கவனயீர்ப்புப் போராட்டங்களும் இடம் பெற்று வருகின்றன. எனவே அடிப்படைச்சமபளத்திற்கான வேலையின் அளவு தோட்டத்துக்குத் தோட்டம் வேறுபடுவதால் தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு மறைமுகமாக மீறப்பட்டு வருகன்றமைக்குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் குறித்து கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுபப்தாக தெரியவில்லை.
பொகவந்தலாவை பிரதேசத்தில் தோட்டமொன்றின் தொழிலாளர்கள் ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்திற்காக 14 கிலோ கொழுந்தினைப் பறித்து வந்ததாகவும் இந்த அளவினை 16 கிலோவாக அதிகரிக்குமாறு தோட்ட நிருவாகம் கோரியதாகவும் இதற்கு தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்த போதும் தோட்ட நிருவாகத்தினால் 16 கிலோவுக்குக் குறைவாக கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு கொழுந்து ஒரு கிலோ 23 ரூபா வீதம் சம்பளம் நிருணயிக்கப்பட்டதாகவும் 16 கிலோவுக்கு அதிகமாக பறித்தவர்களுக்கு 16 கிலோவுக்கு அடிப்படைச்சம்பளம் நிருணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. தோட்ட நிருவாகங்களின் இந்தத் தன்னிச்சையான தீர்மானம் ஏனைய தோட்டங்களுக்கும் தொழிலாளர்களின் சம்மதமின்றி பரவக்கூடிய நிலைமை தோட்டப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்விடயம் குறித்துப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் தீர்க்கமான முடிவொன்றுக்கு வராவிட்டால் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏறபடப்போகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக