சனி, 20 அக்டோபர், 2012

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் உற்பத்தித் திறன் அடிப்படையில் சம்பள உயர்வு : இதனால் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு




தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் எதிர்காலத்தில் உற்பத்தித் திறனுக்கேற்ற சம்பள முறையொன்றினை முன்னெடுப்பதற்கு பெருந் தோட்டக்கம்பனிகள் தற்போதிருந்து முயற்சித்து வருவதால் இவ்விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் புசல்லாவை பணிமனையில் இன்று இடம் பெற்ற தலைவர்மார்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா ,பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் வகையிலான சம்பளத்திட்டமொன்றோ தற்போது நடைமுறையிலுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலைமையில் பெருந்தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி எதிர்வரும் கூட்டொப்பந்தக்காலத்தில் உற்பத்தித் திறனுக்கேற்ற சம்பளத்திட்டமொன்றினை தோட்டக்கம்பனிகள் முன்னெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது. இதனைத் தொழிலாளர்கள் சார்பாக செயற்படுகின்ற தொழிற்சங்கங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. இவ்விடயம் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.


புதன், 17 அக்டோபர், 2012

மலையகத்தில் கடும் மழை : நாவலப்பிட்டி நகரில் பெரு வெள்ளம்



மலையகப் பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகின்ற படியால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துச் செல்வதால் ஆற்றோரங்களில் வாழுகின்ற மக்கள் அவதானமாக செயற்பட வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று 17 ஆம் திகதி  பிற்பகல் 4 மணிமுதல் 6 மணி வரை நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் பிரதேச மக்கள்; பலவேறு சிரமங்களுக்கு உள்ளாகினர். நாவலப்பிட்டி நகரில் கம்பளை வீதி வெள்ளக்காடாக காட்சியளித்தால் கம்பளை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரூடாக அட்டன் மற்றும் தலவாக்கலை நோக்கிச் சென்ற வாகனங்களுக்கு இடையுறுகள் ஏற்பட்டன.சில மணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் நாவலப்பிட்டி கம்பளை வீதியில் வெள்ள நீர் தேங்க நின்றதால் கடைகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தமைக் குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி நகரப்பகுதியில் அடைமழை பெய்கின்ற போது கம்பளை வீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழமையாகி விட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

தேசிய உள்ளூராட்சி வாரம் - கல்வி மற்றும் நூலகத்தினம்






தேசிய உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரசபையின் ஏற்பாட்டில் இன்று கல்வி மற்றும் நூலகத் தினம் தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்றன. நாவலப்பிட்டி நகரசபைக்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பங்கு பற்றிய விழிப்புணர்வு பேரணி நாவலப்பிட்டி நகரூடாக இடம் பெற்றது. நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் நிசாந்த ரணசிங்ஹ தலைமையில் நகர சபை மண்டபத்தில் தொழினுட்பக் கல்வித் தொடர்பான செயலமர்வொன்று இடம் பெற்றது. மேலும்  கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் நிகழொன்றும் இடம் பெற்றதாக நாவலப்பிட்டி நகரசபை உறுப்பினர் சுரேஸ்வரன் தெரிவித்தார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

டிக்கோயாவில் பொலிஸாரால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை


அட்டன்  தலைமையக பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் டிக்கோயா மணிக்கவத்தை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், முறைப்பாட்டு பதிவுகளை பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை நிரப்புதல், திருமணப் பதிவுகளை மேற்கொள்ளல், பதிவுகளை பெற்றுக்கொள்ளல் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு சேவைகள் இங்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இந்த பகுதியில் உள்ள பெருமளவிலான தோட்டப்புற மக்கள் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றியிருந்தனர். தமது வேலையை விட்டு மிக நீண்ட தூரம் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகளை மக்கள் தமது ஊரிலையே பெற்றுக்கொள்ள கிடைத்தமையிட்டு மிக திருப்தியடைந்ததுடன் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.

சனி, 13 அக்டோபர், 2012

பொகவந்தலாவையில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனனத்தின நிகழ்வு





சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனனத்தினத்தினை முன்னிட்டு இன்று பொகவந்தலாவையில் விழிப்புணர்வு ஊர்வலமும் சிறப்பு சொற்பொழிவுகளும்
கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்த நிகழ்வுகளில் பொகவந்தலாவைப் பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களும் வர்த்தகர்களும் ஏனையவர்களும் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு ஊர்வலம் பொகவந்தலாவை தர்மகீர்த்தி சிங்கள வித்தியாலயத்துக்கு அருகில் ஆரம்பமாகி  பொகவந்தலாவை நகரூடாக ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தனத்தினை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ தண்டாயுதபாணி கதிரேசன் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஹட்டனில் இன்று சர்வதேச முட்டைத்தினம் அனுஷ்டிப்பு




சர்வதேச  முட்டை தினம் இன்று 12 ஆம் திகதி  அட்டனில் கொண்டாடப்பட்டது. அட்டன் டிக்கோயா நகர சபை தலைவரும் கால்நடை வைத்தியஅதிகாரியுமான டாக்டர் .அ.நந்தகுமார் தலைமையில் அட்டன் சாரதா மண்டபத்தில் இஇடம் பெற்றது.

சீன ரயில் முதற்தடவையாக பதுளை பயணம்.



சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்களில் ஒன்று நேற்று  கொழும்பிலிருந்து காலை பதுளை நோக்கி புறப்பட்டது.
இந்த ரயில் கொழும்பு மருதானை ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. இப் பரீட்சார்த்த ரயில் பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இணைந்து கொண்டார்.
புதிய ரயில் அட்டன் ரயில் நிலையத்தை நேற்று பிற்பகல் 2.06 மணியளவில் வந்தடைந்தது .இதன்போது அட்டன் ரயில் நிலைய குறைபாடுகளையும் பயணிகள் எதிர் நோக்கும் பயண அசௌகரயங்கள் தொடர்பாகவும் அமைச்சர்  கேட்டறிந்து கொண்டார்.
மலையகப்பகுதிக்கு பதிய ரயில் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரண்டு தடைவைகள் ஏற்கனவே பரீட்சித்துப் பார்த்த போதிலும் இம்முறையே பதுளை நோக்கி முதல் தடவையாக இந்தப் புதிய ரயில் சேவையில் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக்டோபர், 2012

லிந்துலை உருளவள்ளித் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெற மறுப்பு



லிந்துலை உருளவள்ளித் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெற மறுப்பு
லிந்துலை உருளவள்ளி மேற்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தமது கடந்த மாதச் சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இம் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்பட்ட கடந்த மாதத்துக்கரிய சம்பளத்தினையே உருளவள்ளித் தோட்டத்தைச் சேர்ந்த 265 தொழிலாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேல் வேலை செய்துள்ள போதும் அரைநாள் சம்பளம் என்ற அடிப்படையில் தோட்ட நிருவாகம் சம்பளத்திட்டம் தயாரிக்கப்பட்டுச் சம்பளம் வழங்குவதற்கு முன் வந்துள்ளமையைத் தொடர்ந்தே தொழிலாளர்கள் தமது சம்பளத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
 

கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் பெண் சாரணியர்களுக்குச் சின்னம் சூட்டும் நிகழ்வு




நாவலப்பிட்டி கதிசேரன் இந்து மகளிர் கல்லூரியின் பெண் சாரணியர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று 11 ஆம் திகதி கல்லூரியின் அதிபர் திருமதி எஸ். செல்வராஜ் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சாரணர் பயிற்சி ஆணையாளர் டப்ளியூ .பெரேரா கலந்து கொண்டு சாரணிய இயக்கம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்வினை இந்தக்கல்லூரியின் சாரணர் பொறுப்பாசிரியை திருமதி ஹரிஸ்கலா ஏற்பாடு செய்திருந்தார்.

திங்கள், 8 அக்டோபர், 2012

லிந்துலையில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விளையாட்டுப்போட்டிகள்







லிந்துல டிலிகூல்ற்றி பிரஜாசக்தி கணனி நிலையமும் சூரியன் அதிரடி சூரிய சொந்தங்களும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்; நேற்று 7 ஆம் திகதி டிலிகூல்ற்றி தோட்ட கரப்பந்தாட்ட மைதானத்தில் டிலிகூல்ற்றி பிரஜாசக்தி இணைப்பாளர்கள் மலையரசன் , பவாஸ்கரன் மற்றும் அதிரடி சூரிய சொந்த நற்பணிமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார் , விக்னேஸ்வரராஜா ,செல்வராஜ் சரத்,  பாபு , தனேஸ்வரன், மூர்த்தி, மாரிமுத்து, ராஜா ஆகியோரின் தலைமையின் கீழ்    பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளுடன் நடாத்தப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்வகுமார் கலந்து சிறப்பித்ததோடு டிலிகூல்ற்றி தோட்ட உதவி முகாமையாளர் அகலவத்த டிலிகூல்ற்றி தமிழ் வித்தியாலய அதிபர் சிவஞானசுந்தரம் பிரஜாசக்தி செயற்றி;ட்ட உதவி இணைப்பாளர் சரவணன் டிலிகூல்ற்றி தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் , சுகாதார உத்தியோகஸ்தர், முன்பள்ளி ஆசிரியர்கள்  தோட்ட தலைவர்மார்கள் பொதுமக்கள் முதியோர்கள் சிறுவர்களஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 6 அக்டோபர், 2012

பாக்ரோ தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கல் நிகழ்வு





சாமிமலை பாக்ரோ தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் ஏற்பாட்டில் பெற்றுக்கொடுக்கப்பட்ட கூரைத்தகடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஸ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பர்தின் இணைப்புச் செயலாளருமான சோ.ஸ்ரீதரன்  அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் கே.சுரேஸ்குமார் ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களும் தோட்ட மக்களையும் இங்கு காணலாம்.


நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா


நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை மேம்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா இந்தக்கல்லுரிரியின் பிரதான மண்டபத்தில் இன்று 6 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்வியமைச்சின் பெருந்தோட்டப்பகுதி பணிப்பாளர் திருமதி மகேஸ்வரி சபாரஞ்சன் கலந்து கொண்டார். அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நாவலப்பிட்டியவில் முதியோர் தின விழா


சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு நாவலப்பிட்டி பிரதேச ஒன்றிணைந்த  முதியோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின விழா நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த விழாவில் முதியோர்கள் பங்கு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதன் போது முதியோர்கள் பாராட்டப்பட்டனர்.

புதன், 3 அக்டோபர், 2012

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் அபிவிருத்தித்திட்டங்கள் : தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கை


தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டில் ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் சிறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதற்கேற்ப ஹோப் தோட்டக் கீழ்ப்பிரிவில் ஒற்றையடிப்பாதை அபிவிருத்திச் செய்வதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ஹோப்தோட்ட மேற்பிரிவு ஒற்றையடிப்பதையைச் செப்பனிடுவதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் முல்ஓயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் ஒற்றையடிப்பதை ஒன்றைச் செப்பனிடுவதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ரட்லண்ட் தோட்டப்பாதை செப்பனிடலுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட பாதை புனரமைப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

சாமிமலை தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு திகாம்பரம் எம்.பி உதவி

 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிதிகாம்பரம் தெரிவித்தார்.
சாமிமலை மாநெலி மாகொல தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பெறப்பட்ட கூரைத்தகடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களினதும் ஏனைய மக்களினதும் தேவைகளையும் குறைபாடுகளையும் அறிந்து தனது நாடாளுமன்ற பதவியின் ஊடாக அந்த மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றேன். இவ்வாறு மக்களுக்குச் சேவையாற்றுகின்ற போது எமது சமூகத்தினைச் சேர்ந்த சிலர் காழ்ப்புணர்வு கொண்டு தடையாக செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும். எனினும்  எனக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கு மூலமாக அந்தத் தடைகளையும் தகர்த்து தன்னால் சேவை செய்ய முடிகின்றது.
இதனடிப்படையில் மலையகத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதுணை புரிகின்ற ஜனாதிபதி அவர்களுக்கும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் மலையகத்தமிழ் மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிதிகாம்பரம் மேலும் தெரிவித்தார்.


திங்கள், 1 அக்டோபர், 2012

மலையகத்தில் தமிழ் மொழி அமுலாக்கலில் தமிழ் மக்களின் நிர்ப்பந்தம் அவசியம் : தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சோ.ஸ்ரீதரன்


பெருந்தோட்டப்பகுதி தமிழ் மக்கள் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செனன் இளைஞர் சேவைகள் மன்றம் , சேவா லங்கா நிறுவனம் , பவர் பிளாண்டேசன் நிறுவனம் என்பனவற்றின்; ஏற்பாட்டில்  அரச நிறுவனங்களில்  தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக செனன் தோட்டத்தில் இடம் பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்; நிஹால் வீரசூரிய , அம்பகவ பிரதேச சபை உறுப்பினர் கே.சுரேஷ்குமார் , அட்டன் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி தவக்குமார் , அம்பகமுவ பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சந்திரமோகன் , செனன் இளைஞர்கழகத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தொடரந்து பேசுகையில் கூறியதாவது :
பிரதேச செயலகங்கள் , காவற்துறை நிலையங்கள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் ஊடாக தமிழ் மொழி மூல சேவைகள் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்களானால் அதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
மலையகப்பகுதிகளில் செயற்படும் அரச நிறுவனங்களில் தமிழ் மக்கள் தமது சேவைகளைப் பெற்றக்கொள்வதில் இடை தரகர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே தாம் கடமையாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை அரச நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்களின் மத்தியல் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படுகின்ற பட்சத்திலேயே மலையகப்பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான சேவைகளைப் பெற்றக்கொள்ளக் கூடியதாகவிருக்கும். அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற போதும் தமிழ் மக்களினால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிமூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையுள்ளது. தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கூட தமிழர்களிடம் சிங்கள மொழியில் உரையாடி பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது.
எனினும் தமிழ் மொழி தெரியாத பொலிஸாரிடம் தமிழ் மொழியில் தமது முறைப்பாடுகளை எழுதி சமர்ப்பிக்கும் நடைமுறையும் இந்த பொலிஸ் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தோட்டப்பகுதி மக்கள்  தமது முறைப்பாடுகளை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு பொலிசுக்குச் சென்ற முறையிடும் நிலைமையே இன்னும் தொடர்கின்றது. இந்த நிலைமை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மலையகப்பகுதிகளிலுள்ள அரச வங்கிகள்  பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவனங்களில் சேவையாற்றுகின்றவர்களிடத்தில் தமிழ் மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் . தமக்கு ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகள் தெரியும் என்ற ரீதியில் நாம் செயற்பட தொடங்கினால் காலப்போக்கில் தமிழ் மொழிக்குரிய அரசகரும மொழி என்ற அந்தஸ்து வலுவிழக்கக் கூடிய நிலைமை ஏற்படலாம். இதனை தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற ஆவணங்களில் தமிழ் மொழி பிரதிகள் வழங்கப்படாவிட்டால் அவற்றினை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழ் மொழி ஆவணங்களைத் தருமாறு நிர்ப்பந்திக்க வேண்டும். அரச நிறுவனங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தால் தமிழ் மொழிப்பெயர்;ப்பினைக் கோர வேண்டும். ஆவணங்கள் , விண்ணப்பப்படிவங்கள் என்பனவற்றைத் தமிழ் மொழியிலேயே நிரப்ப வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற போது அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்குத் தமிழ் மொழியிலும் தாம் சேவையாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்த முடியும். அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுமானால் அவ்விடயம் தொடர்பாக மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட வேண்டும்.