வியாழன், 16 மே, 2013

மலையக மக்களை தாக்கிய மாகாசேன் சூறாவளி : நிவாரணம் தேவை







குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகபாதிப்புக்களும் கண்டி , இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மேலும் பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ , நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தோட்டங்களிலும் கிராமங்களிலும் ஏற்பட்ட அனர்த்தத்தின் காரணமாக இதுவரை 7700 பேர் பாதிக்கப்பட்டு 41 இடைத்தங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தின் போது டிக்கோயா பிரதேசத்தில் ஏழு வயது அம்ரித்தா என்ற சிறுமியும் 65 வயதுடைய சிவபாக்கியம் என்ற பெண்மணியும் நீரில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர். லிந்துலை வலகா கொலனியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 4 வயதுடைய போல்ராஜ் ஷிரோ என்ற சிறுமியும்  உயிரிழந்துள்ளனர். அத்துடன் டிக்கோயா தோட்டத்தில் பெண்ணொருவரும் லிந்துலை ரட்ணகிரி தோட்டத்தில் முதியவரொருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.இவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை.
கடந்த 13 ஆம் திகதி பெய்த அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. அட்டன் ரயில்  நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ரயில் நிலைய ஊழியர்களின் விடுதி மீது மண் மேடு சரிந்து வீழ்ந்தமையால் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அட்டன் நகரை அண்டிய பல பிரதேசங்களிலும் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளினுள் வெள்ளம் உட்புகுந்தமையால் குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அட்டன் நகரின் அபுசாலி பூங்காவுக்கு அருகிலுள்ள பாதையில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் மூன்று வாகனங்கள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. டிக்கோயா நகரில் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர். நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிமனைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்பட்டது. டிக்கோயா காசல்ரீ தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இந்தத் தோட்டத்தின் பிரதான பாதையினூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. சாமிமலை கவிரவல  கொலனியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். டிக்கோயா போடைஸ் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தத் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கின. அத்துடன் நுவரெலியா பிரதெச செயலகத்தக்க உட்பட்ட பெய்த கடும் மழைக்காரணமாக கொட்டகலை நகரை அண்டிய பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் மேபீல்ட் , லொக்கில்  ட்ரைட்டன்  , சார்ல்மஸ் , பளிங்குமலை , ஹொலிருட் , கட்டுகல , லிந்துலை  பேர்ஹாம்  , மன்றாசி உட்பட பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாரியசேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மகாவலிகங்கையை அண்டிய ஓவிட்ட ,பவ்வாகம போன்ற பகுதிகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டு மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஓடைகளிலும் ஆறுகளிலும் அண்டிய பகுதிகளில் காணப்பட்ட குடியிருப்பகயே வெள்ளப்பெருக்கினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.நீண்டகாலமாக ஆறுகள் ஓடைகள் அகலப்படுத்தப்படாமை , ஆற்றோரங்களில் பாதுகாப்பற்ற குடியிருப்புக்கள் அமைத்தமை போன்ற காரணங்களினாலே வெள்ளப்பெருக்கினால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தோட்டப்பகுதிகளில் ஓடைகளையும் ஆறுகளையும் ஆழ அகலப்படுத்தவதற்குப் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகவுள்ளவர்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலையக மக்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய பரோபகாரிகள் இந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் . கோயில் நிர்மாணப்பணிகளுக்கு அள்ளிக்கொடுக்கம் வர்த்தகர்கள் தோட்டப் பகுதிகளில் கொப்பி பென்சில் உடைகளின்றி நிர்க்கதி நிலைக்க உள்ளாகியள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்கு இதுவே தக்கத் தருணமாகும்.

புதன், 15 மே, 2013

மலையகத்தில் மகாசேன் சூறாவளித்தாக்குதலும் பாதிப்புக்களும்


நுவரெலியா மாவட்டத்தில் மகாசேன் சூறாவளித் தாக்குதலால் பாதிப்படைந்த பிரதேசத்தினையும் பாதிப்படைந்த மக்களையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுவருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கான நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்தச்சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் இந்த விஜயத்தில் பங்கு பற்றினர்.







பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்



பண்டபரவளை பூணாக்கலை மூன்றாம் பிரிவு தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி நள்ளிரவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  சம்பவத்தில் சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேரைத் தொடர்ந்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் அருண விக்கிரமசிங்ஹ உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் 16 பேரும் இன்று  15 ஆம் திகதி பதுளை சிறைச்சாலையிலிருந்து பண்டாரவளை நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை பேருந்தில் கொண்டுவரப்பட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட இந்தச் சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிமன்ற நீதிவான் அருண விக்கிரமசிங்ஹ சிறைச்சாலை பேருந்திற்குள் சென்று பார்வையிட்டார்.
இதன் பின்பு சந்தேக நபர்களைத் தொடர்ந்து 21 ஆம் திகதி வரை விளக்கமறியிலி;ல் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் உத்தரவிட்டதாக தொழிலாளர்  தேசிய சங்கத்தின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி திருமதி பஸ்நாயக்க தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகரில் இடம் பெற்ற போது இந்தக்கூட்டத்தில் பண்டாரவளை பூணாக்கலைத் தோட்டத்திலிருந்து வருகைத்தந்த ஆதரவாளர்கள் மீது கடந்த 7 ஆம் திகதி நள்ளிரவில் வாகனங்களில் வந்த கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டனர்.
இதன் பின்பு பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் கடந்த 9 ஆம் திகதி பண்டாரவளை நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டனர். ஏனையவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளகக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அதே வேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெள்ளி, 10 மே, 2013

பண்டாரவளை பூணாக்கலை தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கிய கும்பல் பொலிஸ் வலையில் : தேடுதல் தீவிரம்

ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் ஆதரவு கும்பலால் பண்டாரவளை பூணாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சதனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைகளை அறிந்து கொள்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப விஜயம் செய்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா  பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட உயர் மட்டக்குழுவினர்  நேற்று 9 ஆம் திகதி பூணாக்கலைத் தோட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
அதற்கு முன்பதாக இந்தக்குழுவினர் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயரதிகாரிகளைச் சந்தித்து தாக்கதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எவ்விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிந்து கொண்டனர்.
அதன் பின்பு பண்டாரவளை தலைமை பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவுடன் பூணாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்திற்குச் சென்றனர்.
இந்தத் தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் உட்பட தோட்ட மக்கள் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான கோழைத்தனமாக தாக்குதல் குறித்த பல்வேறு விடயங்களைத் தெரிவித்தனர்.
ஊவா மாகாணத்தின் அமைச்சர்  ஹல்துமுல்லை பிரதேச சபையின் உறுப்பினர் ஆகியோரின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.


                         




இதன் பின்பு கொஸ்லாந்தை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக்குழுவினர் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரான ரொஷான் பெர்;னான்து தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.இதன் போது பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாக்குமூலத்தினை வழங்கினர். இதன் பின்பு இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்தத் தராதரத்தில் இருந்தாலும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரான ரொஷான் பெர்;னான்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக்குழுவினரிடம் உறுதியளித்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ள நாவலப்பிட்டி குருந்துவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த சமாதானம் என்ற குடும்பஸ்தர் தொடர்ந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அத்துடன் தலையில் வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற வருகின்றார்.இவர்களைத் தவிர மேலும் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தத்தாக்குதல் சம்பவத்தில் இடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு பண்டாரவளை நீதிமன்றத்தினால் நேற்று 9 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 19 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தலவாக்கலை , உடபுசல்லாவை , பொகவந்தலாவை , பதுளை , அப்புத்தளை போன்ற பகுதிகளில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தலவாக்கலையில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கடந்த   7 ஆம் திகதி  அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான .பி.திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.
இந்தக்கூட்டத்திற்கு பதுளை , பண்டாரவளை போன்ற பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் தொழிலாளர்களை அழைத்து வந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட அமைப்பாளர்களுக்குக் கடந்த சில நாட்களாக பதுளை மாவட்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.இந்த அச்சுறத்தல் தொடர்பாக பதுளை மாவட்ட பொலிஸாரின் கவனத்துக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட தொழிற்சங்க பணிமனைகளின் மூலமாக கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில்  7 ஆம் திகதி   அதிகாலை 12.15 மணியளவில் பண்டாரவளை பூணாகலை இலக்கம் மூன்று தோட்டத்துக்குச் சென்று காடையர் குழுவொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் வீடொன்றினைத் தாக்கி அங்கிருந்தவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர். திகாம்பரம் கட்சியின் மேதினக்கூட்டத்திற்கு இனிமேல் போவீர்களா ? என்று கூக்குரல் விட்டவாறும் எச்சரிக்கை விடுத்தவாறும் காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலைத் தடுப்பதற்கு தோட்ட மக்கள் முன்வந்த போது காடையர்கள் சரமாரியாக கல்லெறிந்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்த போது பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119 அழைப்பு எடுத்த போதும் எவ்விததிலும் கிடைக்கவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர். அத்துடன் பண்டாரவளை பொலிஸ் நிலையமுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதன் பின்பு தோட்ட மக்கள் கொஸ்லாந்தைப் பொலிஸுக்கு அறிவித்துள்ளனர் .அதன் பின்பு அவ்விடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன்  மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள்  தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்த வந்தவர்களின் ஒரு வாகனத்தினைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  வாகனமொன்று பாதையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். அந்த வாகனத்தில் கத்திகள் , இரும்புத் துண்டுகள் , போத்தல்கள் இருந்ததாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதன் பின்பு இந்த வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ஒருவர் பெண்ணொருவரும் உள்ளடக்கப்படுகின்றார். தாக்கதலுக்கு உள்ளான அருணகிரி தியாகராஜா ( வயது 25 ) பாரிய உடற்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 53 வயதுடைய கே.பார்வதிக்கு தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. 33 வயதுடைய சமாதானம் என்பவருக்கு உடற்காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பின்பு இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் அரசாங்கத்தின் உயர்மடடத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய், 7 மே, 2013

தோட்டத் தொழிலாளர்களை இ.தொ.கா. குண்டர்கள் தாக்குவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் : திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு


கடந்த வாரம் இடம்பெற்ற எமத தொழிலாளர் தேசிய சங்க மேதினத்துக்கு வருகைதந்த எமது ஊவா மாகாண ஆதரவாளர்கள் பண்டாரவளை பணிய பூனாகலை தோட்டத்தில் நேற்று  அதிகாலை இ.தொ.கா காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொழிலாளர் தெசிய சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என தொழிலாளர் தேசிய சங்க தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் எமது தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத கையாளலாகதவர்கள் நடுராத்திரியில் எமது ஆரவாளர்களின் வீடுகளை சேதப்படுத்தியும் அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். ஊவா மகாணத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டாமான் தனது அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான எமது அதரவாளர்கள் தற்போது வைத்தியாசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆதரவாளர்கள் கடந்த வாரம் எமது மேதினத்தில் அர்ப்பணிப்போடு கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தாக்குதல் நடவடிக்கை இ.தொ.காவின் திட்டமிட்ட மிலேச்சத்தனமான செயற்பாடு என்பதை நாம் உறுதிபட தெரிவிக்கின்றோம். கடந்த சனிக்கிழமை பதுளையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையில் எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் திட்டப்பட்டமை எமக்கு தெரியவந்தது. நாம் எமது ஆதரவாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு கூறியதுடன் கடந்த ஞாயிறு இந்த சதித் திட்டம் தொடர்பில் எமது ஆதரவாளர்கள் பண்டாரவளை பிரதேச பொலிஸ் மற்றும் ரகசிய பொலிஸ் அதிகாரி அலுவலகங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துமுள்ளனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை தமது திட்டத்தின்படி நிறைவேற்றமுடியாத சதிகார மிலேச்சக்கும்பல் நேற்று நள்ளிரவில் கோழைத்தனமாக ஏழைத்தொழிலாளர்களின் வீடுகளை புகுந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமுற்ற எமது ஆதரவாளர்கள் தியத்தலாவ பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். அதே நேரம் தாக்குதலுக்கு வந்த காடையர் குமபலில் 3 பேரை தோட்ட பொதுமக்கள் கையோடு பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் காடையர் கும்பலைச் சட்டத்திற்கு முன்னிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பொலிஸ் உயர் மட்டத்தினருக்கும் நாம் முறைப்பாடுகளைச் செய்துள்ளோம்.
தாக்குதலுக்கு வந்த கும்பலில் இருந்து பிடிபட்டவர்களை நாமும் திருப்பித்தாக்கியிருக்க முடியும். ஆனாலும் நாம் சட்டத்தினை கையில் எடுத்துக்கொள்ளமல் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை ஒப்படைத்துள்ளோம். காரணம் அவர்கள் ஏவிவிடப்பட்டவர்களே இந்த தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாகும். மலையக மக்களிடையே இத்தகைய பிளவுகளை ஏற்படுத்தி எமது இளைஞர்களையே ஏவிவிட்டு மோதவிட்டு தங்களது அரசியலை முன்னெடுக்க முயலும் இ.தொ.காவின் அநாகரீக அரசியலை அம்பலப்படுத்துவதே எமது நோக்கம். தஞ்சாவூரில் இருந்து வந்து இங்கு தமிழ் சினிமா பாணி அரசியலை செய்துவருகிறார்கள். இந்த வில்லத்தனங்களுக்கு மலையக இளைஞர்கள் கதாநாயகர்களாகி பாடம் புகட்டும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கடந்த மாதம் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வுக்கான போராட்டத்தின்போதும் இதற்கு முன்னர் ஊவாவிலும் எமது தொழிலாளர் தெசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மிலேச்சத்தனமான நவடிக்கைள் மூலம் இ.தொ.கா எமது அமைப்பின் வளர்ச்சிமீது கொண்டிருக்கும் பீதி வெளியே தெரிகின்றது. இது அவர்களது அழிவுகாலம் நெருங்கிக்கொண்டிருப்பதையே காட்டி நிற்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தாய் இறந்தமையைத் தாங்கிக் கொள்ளாமல் அதிர்ச்சியில் ஓடிய மகள் உயிருடன் மீட்பு



திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டக்கலை பொரஸ்கிறிக்  தோட்டத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓடி காணாமல போன யுவதி நேற்று முன்தினம் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளார்.  பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்வேன்ன காட்டுப் பகுதியில் வைத்து குறித்த யுவதி  உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்ற பொது மக்கள் யுவதியைக் கண்டு பின் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பத்தனை பொலிஸார் யுவதியை மீட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட யுவதி பயந்து, பேச முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சைகளின் பின்பு குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளார். கொட்டக்கலை - மூங்கில் கொட்டக்கலை (பொரஸ்ட்கிறீக்) பகுதியில் தனது தாய் இறந்த  செய்தியைக் கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போன சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தாயின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதன் பின்பே யுவதி வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் 1400 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

மத்திய மாகாணத்திலுள்ள  பாடசாலைகளில் சேவையாற்றும் வகையில்   1400  பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இந்தப் பட்டதாரிகளை  ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க அறிவித்துள்ளார்.
தற்போது மத்திய மாகாணத்தில் முப்பதாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அவர்களில் அநேகமானவர்கள் கலை பட்டதாரிகள் எனவும் முதலைமைச்சர் சுட்டிக்காட்டினார். மத்திய மாகாண பாடசாலைகளில் கடந்த பல வருடங்களாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் காணப்பட்டன. இந்த  வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் தகைமை வாய்ந்தவர்கள் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு, மே மாத நிறைவுக்குள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மத்திய மாகாண முதலமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

திங்கள், 6 மே, 2013

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளைத் தொழிலாளர்கள் இன்று தாக்கப்பட்டுள்ளனர்.


தலவாக்கலையில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 12.15 மணியளவில் பண்டாரவளை பூணாகலை இலக்கம் மூன்று தோட்டத்துக்குச் சென்று காடையர் குழுவொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் வீடொன்றினைத் தாக்கி அங்கிருந்தவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் பின்பு தோட்ட மக்கள் தாக்குதல் நடத்தியவர்களைப் பிடித்து கொஸ்லாந்தை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட மூன்று பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் ஒருவர் பெண்ணொருவரும் உள்ளடக்கப்படுகின்றார். மேலும் பதுளை மாவட்டத்திலிருந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் பங்கு பற்றிய ஆதரவாளர்களுக்குப் பதுளை மாவட்ட அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்குறித்தும் காவல் துறையினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பூணாகக்லைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தினத்தில் பங்கு பற்றிய தொழிலாளர்களைத் தாக்கிய இந்தச்சம்பவம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் தனது கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக உடனடி சட்ட நடடிக்கைகளில் ஈடுபடுமாறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிறு, 5 மே, 2013

தொழிலாளர் தேசிய சங்கத்தின் எழுச்சி மேதினத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினப் பேரணியும் கூட்டமும் இம்முறை தலவாக்கலை நகரில் இடம் பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலயா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார். அத்துடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஹான்ரத்வத்தையும் கலந்து கொண்டார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , நிதிச்செயலாளர் எஸ்.செபஸ்டியன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள்  அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , ஆதரவாளர்கள் , அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் எழுச்சி மேதினத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பிற்பகல் 11 மணியளவில் தலவாக்கலை நகரின் கொத்மலை வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதினப் பேரணியிலும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற பொதுக்கூட்டத்திலும் பொகவந்தலாவை , நோர்வூட் , சாமிமலை , மஸ்கெலியா , நோட்டன் , டிக்கோயா , என்பீல்ட் , டிலரி , அட்டன் , வட்டவளை , கினிகத்தேனை , கொட்டகலை , பத்தனை , கட்டபுலா , அக்கரப்பத்தனை , லிந்துலை , வட்டகொடை , பூண்டுலோயா , புசல்லாவை , கண்டி , நானுஓயா , நுவரெலியா , கந்தப்பளை , ராகலை , ஹைபொரஸ்ட் , உடபுசல்லாவை , வலப்பனை ,பலாங்கொடை , கண்டி , மத்துகம , பதுளை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரிதிநிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ பேசும் போது கூறுகையில் :
' இந்த நாட்டில் 30 வருட கால யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக மேதின விழாக்களைக் கொண்டாடுவதற்குமான வழியினை ஏற்படுத்தியுள்ளார்.அத்துடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார்.மலையகத்திலும் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்தச்சங்கத்தின் தலைவர் திகாம்பரம் இந்த மக்களுடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். மேலும் மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் இவருக்குத் தேவையான விடயங்களை நாம் செய்து கொடுப்போம் ' என்றார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் பேசுகையில் கூறியதாவது :
' தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சதிகளையும் மோசடிகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது.இந்த அநீதிகளுக்கெதிராக தொழிலாளர்களின் சக்தியைத் திரட்டிக்கொண்டு போராடுவோம். தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக தொழிலாளர்களைத் தெளிவுபடுத்துவோம். கடந்த கூட்டொப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை.இதனை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக கொட்டகலையில் தொழிலாளர் சார்பான அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராடியபோது குடிபோதையில் வந்த குண்டர்கள் அந்தப்போராட்டத்தினைக் குழப்பியடித்தனர். எனினும் நாம்  கூட்டத்தினைத் தொடர்ந்து நடத்தி தொழிலாளர்களைத் தெளிவு படுத்தினோம்.
இவ்வாறு தொழிலாளர்களுக்கெதிரான சக்திகளை ஓரங்கட்டுவதற்கு அவர்களின் தொழிற்சங்க அரசியல் பலத்தினை இல்லாமல் செய்ய வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. இந்தக்கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் குறைந்த சம்பள அதிகரிப்பினைக் கொண்ட கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்தத்துரோகத்தனத்தினை இந்தச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வேலாயும் மேற்கொண்டுள்ளமை தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூடடத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளமையானது எமது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தினையும் வெளிப்படுத்துகின்றது.அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிகாலத்தில் நாடு பல்வேறு அபிவிருத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. மலையகத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
கடந்த 50 வருட காலமாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்கள். திகாம்பரத்தின் வருகைக்குப் பின்னர் ஓடி ஓடி வேலை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நாட்டில் சுமுகமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது :
தோட்டத் தொழிலாளியின் பிள்ளையான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து அவற்றினை அவளிக்கொணருவதில் நேர்மையாக செயற்பட்டு வருவதால் தான் இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரின் பின்னால் அணித்திரண்டுள்ளனர். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடுகின்ற போது அதனைத் தடுக்க நினைக்கும் சக்திகளுக்குச் சவால் விடும் தலைவராக திகாம்பரம் செய்றபடுகின்றார். நேர்மையான , கட்டுக்கோப்பான  புத்திசாதுர்யமான இளைஞர்கள் அவர் பின்னால் பக்கபலமாக உள்ளனர். திகாம்பரத்தின் சக்தி என்ன என்பதை இன்று அரசாங்கமும் மலையகமும் புரிந்து கொள்கின்ற மேதினக் கூட்டமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இந்தக் கூட்டம்  அமைகின்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். பிலிப் பேசுகையில் கூறியதாவது :
அமரர் வி.கே. வெள்ளையன் அவர்களால் 1965. 05. முதலாம் திகதி தொழிலாளர் வர்க்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் இன்று தலைவர் திகாம்பரத்தின் வருகைக்குப் பின்னர் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து செயற்படுகின்ற தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் செயற்படுகின்றது.
தொழிலாளர்களுக்காக போராடுகின்ற போது அந்தப் போராட்டத்தினை குண்டர்களைக் கொண்டு அடக்க முற்படுகின்ற தொழிற்சங்கம் மலையகத்தில் உள்ளமைக் குறித்து வெட்கமடைகின்றேன்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங். பொன்னையா பேசுகையில் கூறியதாவது :
தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையாக செயற்படுகின்ற தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் செயற்படுகின்றது. தலைவர் திகாம்பரத்தின் நேர்மையான செயற்பாடுகளால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்கள் உத்வேகமடைந்துள்ளனர். இந்த உத்வேகத்தின் மூலமாக  தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்போம்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் - 2013




 தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் - 2013
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் இந்தச்சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம்  தலைமையில் இடம் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி கலந்து கொண்டார்.
இந்தக்கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா , பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றினர்







வெள்ளி, 18 ஜனவரி, 2013

பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான முத்தேர் பவனி பெருவிழா




இலங்கையில் ஈழத்துப் பழனி என்று போற்றப்படும் பொகவந்தலாவை நகர் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 78 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவ முத்தேர் பவனி இன்று 18 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த முத்தேர் பவனி பெருவிழாவினை முன்னிட்டு மகோற்சவ ஆரம்பமும் கொடியேற்றமும் கடந்த  7 ஆம் திகதி இடம் பெற்றது.
தொடர்ந்து மகோற்சவ கால கிரியை நிகழ்வுகள் இடம் பெற்றன. இன்று 18 ஆம் திகதி இடம் பெற்ற முத்தேர் பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாளை  19 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் 20 ஆம் திகதி பூங்காவனமும் இடம் பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.