புதன், 12 அக்டோபர், 2011

மஹிந்தானந்தவின் தலையீட்டினால் தொழிலாளர் பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி போஹில் , பாராண்டா ஆகிய தோட்டங்களில் 110 ஏக்கர் நிலப்பகுதியை ஜனவசம நிறுவனத்தினால் வெளியாருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் தலையீட்டினால் இன்று 12 ஆம் திகதி முதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினார் நிருவாக்கிக்கப்படுகின்ற போஹில் , பாரண்டா ஆகிய தோட்டங்களின் தேயிலைப் பயிர்ச்செய்கை நிலங்களை குறிப்பிட்ட சபை தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் வெளியாருக்கு வழங்கியுள்ளதாகவும் இந்த நிலப்பகுதியைப் பெற்றுக்கொண்டவர்கள் தற்போது உரிமைக்கோரி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத்தோட்டங்களைச் சேர்ந்த 300 தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்

மேற்படி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று 12 ஆம் திகதி குறிப்பிட்ட தோட்டங்களுக்கு விஜயம் செய்து தோட்ட அதிகாரியுடனும் தொழிலாளர்களிடமும் கலந்துரையாடியதைத் தொடர்ந்தே தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்டத் தோட்டங்களின் விளை நிலங்களை எக்காரணம் கொண்டும் வெளியாருக்க வழங்க முடியாது.
இவ்விடயம் தொடர்பாக நான் ஜனவசம தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தொழிலாளர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தமது பணி பகிஸ்கரிப்பைக் கைவிட்டனர்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு : பி.திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு


இவ்வருடத்துக்கான
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில் பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் பார்க் தோட்டத்தில் மைதானப்புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா அமைப்பாளரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான அப்துல் அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் அம்மாசி நல்லுசாமி ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான பி.சிவானந்தன் , தலவாக்கலை அமைப்பாளர் கிறே , கந்தப்பளை மாவட்டத்தலைவர் உதயசூரியன் , இணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே வேளை கந்தப்பளை யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் கந்தப்பளை தோட்ட மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கரப்பந்தாட்ட இறுதிச்சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கான அனுசரணையையும் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில் :
இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக எனக்கு ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ருபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சமூக மற்றும் பௌதிக செயற்றிட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்களைப் பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டதன் பின்பு வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த அடிப்படையில் பார்க் தோட்டத்திலுள்ள முஸ்லிம் பள்ளி வாசலுக்குச்செல்லும் பாதை வெகுவிரைவில் புனரமைக்கப்படவுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.. அத்துடன் கந்தப்பளை தோட்ட கரப்பந்தாட்ட மைதானத்தினையும் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

புதன், 5 அக்டோபர், 2011

உலக குடியிருப்பாளர் தினமும் மலையக தோட்டத் தொழிலாளரின் குடியிருப்புப் பிரச்சினைகளும்

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதலாம் திங்கட்கிழமை உலக குடியிருப்பாளர் தினம் கொண்டாப்பட்டுவருகின்றது. இத்தினமானது 1986 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் அங்கீகரிக்ப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதன் முதலாவது மாநாடு நைரோபி நகரில் நடைபெற்றது. இதன் தொனிப்பொருளாக 'வாழ்விடம் என்பது எனது உரிமை' (ளூநடவநச ளை அல சுiபாவள) அமைந்திருந்தது. இவ்வருடம் இதற்கான தொனிப்பொருள் 'நகரங்கள் மற்றும் காலநிலை மாற்றம்' அமைந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் இலங்கையிலும் ஒவ்வொருவருடமும் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்புலத்தில் இலங்கையில் வாழும் மக்களும் அவர்களுக்கான குடியிருப்புகளும் பற்றி பேசப்படவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
இலங்கையின் குடியிருப்புகளை பற்றி பார்க்கவருகின்ற போது இலங்கையில் முக்கியமான குடியிருப்பு வகைகளாக நகரக் குடியிருப்பு, கிராமக் குடியிருப்பு, தோட்டக்குடியிருப்பு என பிரதான வகைப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளன. இதில் முதல் இரு வகையான குடியிருப்புகளும் இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனக் கட்டமைப்புகளின் கீழும் அதாவது, நகரக் குடியிருப்புகள் நகரசபைகளின் கீழும்;, கிராமக் குடியிருப்புகள் பிரதேசசபைகளின் கீழும் வருகின்றன. பெருந்தோட்டங்களை மையப்படுத்தி சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளே இலங்கையின் தோட்டக்குடியிருப்புகளின் கீழ் வருகின்றன. இவை முன்னர் நேரடியாக தோட்ட நிருவாகத்தினால் நிருவகிக்கப்பட்டதோடு, தற்போது அது கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற நிலையே காணப்பட்டாலும் தொடர்ந்தும் தோட்ட நிரவாகத்தின் தலையீடுகள் காணப்படுகின்றமை அநேகமாக அண்மைக் காலங்களில் சுட்டிக்காட்டப்படும் விடயமாகவுள்ளது.
ஆரம்பத்தில் குறிப்பட்டது போலவே நகரக் குடியிருப்புகளும், கிராமக் குடியிருப்புகளும் யாரோ ஒரு நபருக்கு செர்ந்தமானவையாக இருக்கின்றன. அதாவது தனிநபர் ஒருவருக்கு சொந்தமானதாக அல்லது கூட்டுடமையாக இருக்கின்றது. அதன் உரிமையினை அவர் அனுபவிக்கக் கூடியநிலை உண்டு. அவர் இதனை அனுவிக்கவும், விற்கவும் உரிமையுடையவராக உள்ளார். இவர்களது காணிக்கான உரித்துப் பத்திரம் முதலியவை அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு வழஙக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்நிலையினை மலையக சமூகத்தோடு ஒப்பீட்டு பார்ப்பின் நிலை தலைகீழாக உள்ளதனை அவதானிக்கலாம். 200 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் நிலை, இன்றும் கேள்விக்குரியானதாகவே உள்ளது. தோட்டங்கள் முன்பு ஆங்கிலேயர் உடைமைகளாகவே காணப்பட்டன. அப்போது ஆங்கிலேயர் இலங்கையில் பயன்படுத்தாத காட்டுப்பகுதிகளை தம்வசப்படுத்திக் கொண்டதோடு மலைநாட்டு சிங்களவர்களது காணிகளை பணம் கொடுத்தே பெற்றுள்ளனர். பெருந்தோட்டத்தொழில் துறை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியபோது பெரும்பான்மை கண்ணை குத்தியது. இதன்போது இந்தியத் தொழிலாளர்கள் தமது வாழ்விடயங்களையும் பொருளாதார நிலவுரிமையையும் பறித்துக்கொண்டதாக எண்ணினர். இது பெருபான்மை அரசியல் தலைவர்களுக்கு மனதில் தைத்து வைத்த விடயமாக மாறிப்போயின. தோட்டங்கள் அரசு உடைமையாக்கப்பட்டபோது தோட்டக் குடியிருப்பகளுக்கு உரித்துப்பெற்றுக் கொடுத்திருப்பதற்கு சந்தர்ப்பங்கள் பல வாய்த்தபோதும் அதனை மலையகத் தலைமைகள் பெற்றுக்கொள்ள சரியான வழிவகைகளை கையாளவில்லை. தொடர்ந்தும் அரச தோட்டங்கள், அரச லயன்களிலேயே இம்மக்கள் முடக்கப்பட்டனர்.

ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 2000 வருடத்தில் 'யாவருக்கும் புகலிடம்' என்ற எண்ணக்கருவின்கீழ் பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு கிராமங்கள் (கம) உருவாக்கப்பட்டன. இவை மலைகயத் தமிழரின் இனச் செறிவினை திட்டமிட்டு அழிக்கும் நோக்குடையதாக காணப்பட்டது. அவரின் காலத்திலேயே மலையகத் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கண்டிருக்க முடியும். அதுவும் கைகூடாமலேயே போய்விட்டது. பின்னர் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை சொந்தமாக்குவதாக பிரசாரம் செய்யப்பட்டதோடு, அதற்காக தனியானதொரு அமைச்சாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இக்காலத்தில் இதன் அமைச்சராக இருந்தவர் இதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச்சஸ் நிலத்தினை வழங்கியதோடு, குறித்த காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 30000.00 கடனாக வழங்கப்பட்டதோடு, இக்கடனை 15 வருடக்காலத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடும், இவ்வாறு இத்தொகையினை கட்டிமுடித்த பின்னர் காணிகளுக்கான உரித்து பத்திரம் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. எனினும் இது இன்றளவிலும் வெறும் நீர் மேல் எழுத்தாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆட்சியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் நுவரெலியாவாழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு தமது குடியிருப்புகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கான உரித்துப்பத்திரம் ஒன்றை வழங்கியிருந்தார். அதுவும் நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. இவ்வாறு தொடர்ந்து இந்நடைமுறைகள் சாத்தியம்ற்று போவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமே (Pர்னுவு - வுசரளவ) பெரும்பங்கு ஆற்றியுள்ளது. இந்நிறுவனமானது பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்து லயத்துவாசிகளாவே வைத்திருப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றது. இதன் பெறுபேறாகவே லயத்து அமைப்பு முறை மாடிவீட்டுத் திட்டத்தின் கீழ் மாடி லயங்களாக புனர்ஜென்மம் பெற்றன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'ஜன செவன திட்டம்' என்ற ஒன்றின் மூலம் 'யாவருக்கும் வீடு' என அறிவித்திருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100,000 வீட்டுத்திட்டம் என அது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு குறைந்த வருமானம் பெறுகின்ற நகரை அண்டிவாழும் மக்களுக்காகவும் இரண்டு பேர்ச்சஸ் நிலம் எவ்வித கட்டணங்களும் இன்றி வழங்கப்படும் என எழுதப்பட்டுள்ளமையையும் குறிப்பிட்டு காட்டவேண்டியதோடு இதில் வேண்டுமென்றே பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை உள்ளடக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.
அதேப்போன்று 2010 ஆம் ஆண்டு அவருடைய மகிந்த சிந்தனை பாகம் இரண்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலவுரிமை தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஐ றடைட pசழஎனைந ய pடழவ ழக டயனெ வழ நயஉh Pடயவெயவழைn றுழசமநசள...' என தொடங்குகின்றது. அதாவது ஒவ்வொரு பெருந்தோட்ட தொழிலாளருக்கும் ஒரு பகுதி நிலம் வழங்கப்படும். இதில் அவர்கள் விரும்பிய விடயங்களை (உற்பத்திகளை) செய்துக்கொள்வதற்கு ஏனைய பிரஜைகளுக்கு உள்ளவாறான உரிமையினை பெற்றுக்கொடுப்பேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெருந்தோட்டங்களில் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களுக்கான தனியான வீட்டுத் திட்டம் ஒன்று 'ஜன செவன' திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இதன் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக உள்ள திட்டத்தின்படி இருவது வருடங்களின் பின்னர் ஏழு பேர்ச்சஸ் இலவச நிலம் உரித்தாகும். எவ்வாறாயினும் இவ்வாறு வழங்கப்படுகின்ற நிலங்களை அவர்களின் உரிமையாக்குவேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்ட முடியும்.

எனினும் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களின் முதலாவது தவணைக் காலத்தை முடித்துகொண்டது மட்டுமல்லாது, இரண்டாவது பதவிக்காலத்திலும் ஒரு வருட பூர்த்தியினை நவம்பர் மாதம் கொண்டாட இருக்கும் தறுவாயில் இதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு இருக்க மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் 'எனது வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை' என குறிப்பிட்டிருந்தமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எனினும் கடந்த வருடமளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலை பிரதேசத்தில் இருபத்தைந்து தனிவீட்டுத் தொகுதிகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது என்ற செய்தியும் பத்திரிகையில் வெளிவந்தது. இது பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு கிடைத்துள்ளது என்ற விடயம் ஓரளவு திருப்தி அளித்தாலும் இதற்கான உரித்துபத்திரம் தொழிலாளர்களுக்கு கிடைத்ததா என்பது ஐயத்திற்குரியதே.
அதேவேளை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்த தோட்டத் தொழிலாளர்களுக்காக தலவாக்கலை நகரத்திற்கு அண்மையில் பாரிய தனி வீடமைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இவ்வீடுகளுக்கும் தனியான உரித்துப்பத்திரம் எதுவும் வழங்கப்படவில்லை.
அதேப்போன்று கடந்த இரு வருடங்களாக நாடுமுழுவதும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி 'காணிக்கச்சேரிகள்' நடத்தப்பட்டப்போதும் இதுவரையில் ஒரு தொழிலாளர் குடும்பத்திற்காவது காணிவழங்கப்பட்டதா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களுக்கான பல்வேறு குடியிருப்புத் திட்டங்களை அரசாங்கம் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது. அதேப்போன்று இவர்களால் கைப்பற்றப்படுகின்ற தரிசு நிலங்களையும் அரசாங்கமானது 'சுவர்ணபூமி' உரித்து என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றமையை காணலாம்.
எனவே பெருந்தோட்டங்களை மையப்படுத்தி சுமார் 513 தோட்டக்குடியிருப்புகள் உள்ளதோடு, அவை அனைத்துமே தற்காலிக குடியிருப்புகளாகவே இருக்கின்றன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் - 2ல் மதிப்புக்குரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள வீட்டு உரிமைக்கான உறுதிமொழியினை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் எமது அரசியல் தலைமைகள் உள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திதுகின்றனர் என்ற முறையிலும், அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றனர் என்ற முறையிலும், பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றார்கள் என்ற முறையிலும் தங்களுக்குள் கட்சி பேதமற்ற முறையில் ஓரணியில் திரண்டு வருகின்ற வருடத்திலாவது, வரவு-செலவு திட்டத்தில் பெருந்தோட்டக் குடியிருப்புகளை சுதந்திரமான குடியிருப்புகளாகவும், தனிநபர் உரிமையாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், காணி உரிமையினை பெற்றுக்கொடுக்கவும், தோட்டக்குடியிருப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் கூடிய வகையில் நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கான முன்மொழிவினை கொண்டு வருவதன் மூலம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு விடயம் குறித்த முனைப்பான செயற்பாடுகளை ஏற்படுத்தினால் தவிர இந்நிலைக்கு விமோசனமில்லை.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

குயின்ஸ்பெரி ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம்

இலங்கையிலுள்ள சித்தர் ஆலயங்களில் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம் முக்கியதொன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை தேர்தல் தொகுதியில் குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு நாவலப்பிட்டிய கட்டபூலா வழியாகவும் தலவாக்கலை – அட்டன் பிரதான பாதையில் பத்தனை வழியாகவும் செல்ல முடியும். தமிழகத்தில் கொல்லிமலையைச்சேர்ந்த நவநாதர் சித்தர் 1901 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்து குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டதாகவும் அதன் பின்பு அவர் 1902 ஆம் ஆண்டு பங்குனிமாதம் நிர்விகர்ப்ப சமாதியடைந்ததாகவும் அறிய முடிகின்றது. மலையகத்தில் முதற் பெண்கங்காணியான நாகன் பெருமாள் அம்மாள் நவநாதர் சித்தரின் மீதுள்ள பற்றுகாரணமாக இந்த சித்தருக்கு குயின்ஸ்பெரி தோட்டத்தில் கோவில் அமைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குயின்ஸ்பெரி
தோட்டத்திலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரமுள்ள காட்டில் தவமிருந்து கொண்டிருந்த நவநாதர் சித்தரை வழிபடச்சென்றிருந்த போது நாகன் பெருமாள் அம்மாள் அங்கு ஒரு பிடி அசிரியால் உணவு சமைத்து பக்தர்களுக்குப்பறிமாரி கொண்டிருந்த போது அப்போது 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவ்விடத்திற்கு வந்ததாகவும் இதன் போது அந்த அம்மாள் நவநாதர் சித்தரிடம் ' சாமி ' என்ன செய்வது என்று கேட்ட போது அதற்கு அவர் ' நீ போட்டுக்கொண்டிரு தாயே ' என்று கூறியுள்ளார்.அவர் கூறியபடியே அந்த ஒரு பிடி அரிசியிலிருந்து 150 பேருக்கும் சோறு வழங்கப்பட்டாதாகவும் இந்தச்சம்பவம் நவநாதர் சித்தரின் அற்புதங்களில் ஒன்று என்றும் தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப்பின்னணியில் இந்தச்சமபவத்தை நினைவு கூரும் வகையில் கடந்த பல வருடங்களாக பொங்கல் தினத்தன்று ஸ்ரீநவநாதர் சித்தர் தபோவனத்தில் பக்தர்கள் ஒன்று கூடி பொங்கல் படைத்து தத்தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பொங்கல் தினத்தன்று ஸ்ரீநவநாதர் சித்தரின் திருவுருவம் தாங்கிய சப்பரம் அவரின் ஜீவசமாதியிலிருந்து குயின்ஸ்பெரி தோட்ட மக்களால் தபோவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு பூஜைகள் இடம் பெறும் அதன் பின்பு அவரின் திருவுவப்படம் தாங்கிய சப்பரம் மீண்டும் கோவிலுக்குக்கொண்டு வரப்பட்டு விசேட பூஜைகள் இடம் பெறும். இந்த ஆலயத்தில் பௌணர்மி தினங்களில் விசேட பூஜைகள் இடம் பெறும்

சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு ஆக்க இலக்கிய மற்றும் விளையாட்டுப்போட்டிகள் : மலையக ஆசிரியர் ஒன்றியம் ஏற்பாடு

கடந்த இரண்டு தசாப்தங்களாக மலையக ஆசிரியர்களின் கௌரத்தையும் தாற்பரியத்தையும் வளர்த்தெடுத்த மலையக ஆசிரியர் ஒன்றியம் இவ்வாண்டிலும் ஆசிரியத்துவத்தின் செழுமையைக் காத்தெடுக்க துணிந்துள்ள எமது அங்கத்தினர்களுக்கு இனிய ஆசிரிய தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதி;ல் பெரும் மகிழ்வு கொள்கிறது என்று சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் ஆர். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களின் உரிமையையும் கௌரவத்தையும் வென்றெடுப்பதில் தங்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை நினைவு கூர்வதோடு தொடர்ந்தும் இதே காத்திரமிக்க பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். இநந்த நிலையில் இந்த ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு எமது அங்கத்தவர்களுக்கிடையில் ஆக்க இலக்கிய போட்டிகளையும் விளையாட்டுப்போட்டிகளையும் இவ்வருடமும் சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தப்போட்டிகள் பற்றிய விதிமுறைகளை எமது அங்கத்தவர்களுக்கு பின்வருமாறு தெரிவித்துக்கொள்கின்றோம். ஆக்க, இலக்கிய போட்டிகளாக கவிதை ,சிறுகதை , கட்டுரை ஆகிய போட்டிகளை நடத்த உள்ளோம். இந்தப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பின்வரும் விடயங்கள் கவனம் செலுத்த வேண்டும். படைப்புகள் சழூக அக்கறை மிக்கதாக இருத்தல் வேண்டும். கவிதைகள் மரபு கவிதையாகவோ புதுகவிதையாகவோ அமையலாம்.. கட்டுரைகள் ஆய்வு பண்புகளை கொண்டதாகவும் உசாத்துணைகள் இணைக்கப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் ஒரு பக்கத்திள் மட்டும் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்புதல் வேண்டும். ஏலவே பிரசுரிக்கப்பட்டதாகவோ தழுவலாகவோ இருத்தல் கூடாது. ஆக்கங்கள் 07.11.2011க்கு முன்பதாக செயலாளர் மலையக ஆசிரியர் ஒன்றியம் 133 1ஃ1 திம்புள்ள வீதி ஹட்டன். என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். ஆக்க இலக்கிய போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்படும்;.
ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளாக உள்ளக விளையாட்டு போட்டி ,கிளைச் சங்கங்களுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி , தடகள போட்டிகள் என்பன இடம் பெறவுள்ளன. விளையாட்டுப் போட்டிகளுக்கான திகதி உரிய காலத்தில் அறிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கடந்தகாலங்களைப்போல பெறுமதி மிக்கப் பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

டிக்கோயா காசல்ரீ தோட்ட மக்களுக்கு மின்னிணைப்புக்கான நிதியுதவி

தோட்டத்தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற தொழிற்பிணக்குகளைத் தீர்த்து வைக்கின்ற அதே வேளைத் தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தியிலும் தொழிலாளர் தேசிய சங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட தொழிலுறவு நிருவாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப டிக்கோயா காசல்ரீ தோட்டத்தில் இதுவரை காலமும் மின்னிணைப்பு வசதியில்லாதவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவி;த்தார்.
இன்று 2 ஆம் திகதி மாலை இடம் பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ,தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகளில் காசல்ரீ ,லெதண்டி , காபெக்ஸ் ,சமர்வெலி உட்பட பல தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னரிமை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சனி, 1 அக்டோபர், 2011

ஹைதராபாத்தில் தலைமைத்துவப்பயிற்சி செயலமர்வில் நுவரெலியா மாவட்டம் சார்பாக தமிழர் ஒருவர் பங்கேற்பு

இந்தியாவிலுள்ள பாலவிக்காஷா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் ஹைதராபாத்தில் நடத்தப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி செயலமர்வில் நுவரெலியா மாவட்டம் சார்பாக இராஜேந்திரன் கனகராஜ் கலந்து கொண்டுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் இலங்கையில் இருந்து 60 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூhக 50 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்தப்பயிற்சி செயலமர்வில் நுவரெலியா மாவட்டம் சார்பாக கலந்து கொண்டிருக்கின்ற இராஜேந்திரன் கனகராஜ் பொகவந்தலாவை கில்லார்னி தோட்டத்தைச் சேர்ந்தவரும் ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார். அத்துடன் சூரியா இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பகமுவை பிரதேச சம்மேளனத்தின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட சம்மேளனத்தின் அமைப்பாளராகவும் தேசிய சம்மேளன நுவரெலியா மாவட்ட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.