திங்கள், 28 ஜூன், 2010

குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் 12 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு : 8 பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை செல்வக்கந்தைத் தோட்டத்தில் இன்று கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைக் குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் பாதிப்படைந்த 12 பேர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். செல்வக்கந்தைத் தோட்டத்தின் ஆறாம் இலக்க தேயிலை மலையில் இன்று நண்பகல் வேளையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது திடீரென பறந்து வந்த குளவிகள் பெண்தொழிலாளர்களைத் தாக்கியுள்ளன.இதனால் இந்தப்பெண் தொழிலாளர்களின் முகத்திலும் உடற்பகுதிகளிலும் பாதிப்பு உடனடியாக இவர்கள் அனைவரும் தோட்ட லொறி ஒன்றின் மூலமாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நான்கு பேர் உரிய சிகிச்சைக்குப்பின்பு வீடு திரும்பியுள்ளனர். மேலும்; எட்டு பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் கொழுந்து பறிக்கும் பெண்களைக் குளவிகள் தாக்கிய வருகின்றமையும் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றமையும் தற்போது வாடிக்கையாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

பிறந்த சிசு ஒன்றின் மரணத்தினைத் தொடர்ந்து தோட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : புரட்டொப் தோட்டத்தில் சம்பவம்


உரிய சகாதார மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தருமாறுக் கோரி புசல்லாவை புரட்டொப் தோட்டத்தொழிலாளர்கள் இன்று 27 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்குத் தோட்ட லொறி ஒன்றில் கர்ப்பிணி தாயைப்பிரசவத்திற்கு அழைத்துச்சென்ற போது வழி நடுவில் லொறியிலேயே அந்தத் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் இடம் பெற்றுள்ளது. இதன் போது பிறந்த சிசு ஒரு சில மணிநேரத்துக்குள் உயிரிழந்த சம்பவமொன்று 25 ஆம் திகதி இரவு நுவரெலியா மாவட்டம் புசல்லாவை புரட்டொப் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. புரட்டொப் தோட்டத்தில் எம்புலன்ஸ் வாகன வசதிகள் இல்லாத காரணத்தினாலும் தோட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் குடும்ப நல மருத்துவரின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினாலுமே இந்த உரியிழப்பு இடம் பெற்றுள்ளதாக தெரிவித்து இன்று இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின்; ஊடாக புரட்டொப் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை இதுவரை திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும் : புசல்லாவ பா.திருஞானம்

சனி, 26 ஜூன், 2010

உரிய மருத்துவ வசதியில்லாததால் பிறந்தவுடன் சிசு உயிரிழந்துள்ளது : புசல்லாவையில் சம்பவம்




வைத்தியசாலைக்குத் தோட்ட லொறி ஒன்றில் கர்ப்பிணி தாயைப்பிரசவத்திற்கு அழைத்துச்சென்ற போது வழி நடுவில் லொறியிலேயே அந்தத் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் இடம் பெற்றுள்ளது. இதன் போது பிறந்த சிசு ஒரு சில மணிநேரத்துக்குள் உயிரிழந்த சம்பவமொன்று 25 ஆம் திகதி இரவு நுவரெலியா மாவட்டம் புசல்லாவை புரட்டொப் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
புரட்டொப் தோட்டத்தில் எம்புலன்ஸ் வாகன வசதிகள் இல்லாத காரணத்தினாலும் தோட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் குடும்ப நல மருத்துவரின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினாலும் இந்த உரியிழப்பு இடம் பெற்றுள்ளதாக தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின்; ஊடாக புரட்டொப் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை இதுவரை திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 ஜூன், 2010

கிறிஸ்தவ ஆலய விழாக்கள்

பொகவந்தலாவை தோட்ட புனித ஜெபமாலை மாதா புதிய ஆலயத்தின் இரண்டாம் வருட பூர்த்தி விழா 27 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வு
இடம் பெற்றதைத்தொடர்ந்து விசேட ஆராதனைகள் இடம் பெற்று வருகின்றன.
27 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலி இடம் பெறவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது. இதே வேளை பொகவந்தலாவை டின்சின் நகர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பத்தாவது வருட திருநாள் ஆராதனைகள் இன்று 25 ஆம் திகதி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

பொகவந்தலாவை ,நோர்வூட் பகுதிகளில் இன்று அதிகாலை வேளையில் மினி சூறாவளி : வீடுகளின் கூரைகள் சேதம்

பொகவந்தலாவை ,நோர்வூட் ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை 12.30 மணி முதல் நான்கு மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன. பொகவந்தலாவை கெம்பியன் லின்போர்ட் தோட்டத்திலுள்ள இரண்டு வீடுகளின் கூரைகள் முழுமையாக காற்றினால் அள்ளுண்டு சென்றதால் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த ஒன்பது பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் தோட்ட நிருவாகத்தின் ஏற்பாட்டில் தற்காலிக இருப்பிடமொன்றில் தங்கவைப்பட்டுள்ளதாக லின்போர்ட் தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்
பி.யசோகுமார் தெரிவித்தார். இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பாக பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து சேதவிபரங்கள் குறித்த தகவல்களைத்திரட்டிச்சென்றுள்ளார்.

புதன், 23 ஜூன், 2010

அட்டன் தொழிற்திணைக்களத்தின் முன்னால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப்போராட்டம்










மஸ்கெலியா அப்புகஸ்தென்னத்தோட்ட நிருவாகத்தின் பல்வேறு கெடுபிடிகளைக்கண்டித்து இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் தொழிற்திணைக்களத்தின் அட்டன் பணிமனைக்கு முன்னால் இன்று மாலை கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அப்புகஸ்தென்னத்தோட்ட நிருவாகம்; ஒருநாட்சம்பளத்திற்காக 19 கிலோ கொழுந்தினைப்பறிக்குமாறு கோரிவருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டன் நகருக்கு இன்று வருகைத்தந்த தொழிலாளர்கள் தொழிற்திணைக்கள பணிமனைக்கு முன்னால் இன்று மாலை 2 மணிமுதல் 4 மணிவரை சுலோகங்களை ஏந்தியவண்ணம் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அட்டன் பொலிஸார் பாதுகாப்பிலும் ஈடுபட்டனர்.
மேற்படி தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஒருநாட்சம்பளத்திற்காக நாளொன்றுக்கு 16 கிலோ தேயிலைகொழுந்தினை மாத்திரமே பறிப்போம் என்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் மே மாதம் 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 9 ஆம் திகதி வரை பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்தப்போராட்டம் தொடர்பாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் முயற்சியினால் அட்டன் தொழிற்திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.இதனைத்தொடர்ந்து இம் மாதம் 9 ஆம் திகதி அட்டன் தொழிற்திணைக்களத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றது.இந்தப்பேச்சுவார்த்தையின் போது இந்தப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கும் மேலுமொரு பேச்சுவார்த்தை இம் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.இவ்வாறானதொரு நிலையில் இன்று இடம் பெற்ற பேச்சுவார்த்தைக்குத்தொழிலாளர் பிரதிநிதகள் வருகைத்தந்திருந்த போதும் அப்புகஸ்தென்ன தோட்ட நிருவாகத்தின் சார்பாக எந்தவொரு பிரதிநிதியும் வருகைத்தரவில்லை என்பது குறிhப்பிடத்தக்கது.
இதேவேளை தொழிலாளர்களின் இந்தப்போராட்டம் தொடர்பாக அட்டன் தொழிற்திணைக்களத்தின் பிரதித்தொழில் ஆணையாளர் எஸ்.சந்திரதிலக்கவுடன்
ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்லைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்றைய பேச்சுவார்த்தைக்குத் தோட்ட நிருவாகத்தின் சார்பாக பிரதிநிதிகள் வருகைத்தராத காரணத்தினால் மீண்டுமொரு பேச்சுவார்த்தை ஒன்று ஜுலை மாதம் 16 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 ஜூன், 2010

நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் குறித்து சுகாதார அமைச்சு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்.சதாசிவம் வேண்டுகோள்

நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் நன்மைக்கருதி சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுக்க வேண்டுமென்று இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் ஊடாகவே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு வருகின்ற நோயாளர்கள் அதிகாலை வேளையில் தமக்குரிய இலக்கங்களைப்பெற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறை உள்ளதால் நுவரெலியாவில் தற்போதுள்ள சீரற்ற காலநிலையினால் இந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆகவே நுவரெலியாவில் தற்போதுள்ள காலநிலையைக்கருத்திற்கொண்டு மாதாந்த சிகிச்சைக்கு வருகின்ற நோயாளர்களின் நலன்கருதி நுவரெலியா ஆதாரவைத்தியசாலையின் நிருவாகம் புதியதொரு வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 21 ஜூன், 2010

தோட்டங்களில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படும் போது கடைப்பிடிக்கப்படுகின்ற சில உரிமை மீறல் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு


தோட்டத்தொழிற்துறையில் பெண்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு முன்பு அவர்கள் கர்ப்பம் தரித்துள்ளார்களாக என்பதை அறிந்து கொள்வதற்காக தோட்ட நிருவாகங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வைத்தியபரிசோதனையானது அடிப்படை மனித உரிமை மீறலாகமென்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் இன்று 21 ஆம் திகதி கையளித்துள்ளார். மலையகத்தோட்டப்பகுதிகளில் யுவதிகள் தோட்ட நிருவாகங்களால் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்பு தோட்ட மருத்துவ உதவியாளரால் குறிப்பிட்ட யுவதிகளின் சிறுநீர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த யுவதிகள் கர்ப்பம் தரித்துள்ளார்களாக என்பது தொடர்பில் ஆராயும் நடவடிக்கை மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளில் பெரும்
விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளை கர்ப்பம் தரித்தப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதால் அவர்களின் குழந்தைப்பிரசவத்தின் போது பல்வேறு கொடுப்பனவுகளைத் தோட்ட நிருவாகத்தினால் வழங்கப்பட நேரிடும் என்பதைக்கருத்திற்கொண்டே இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுவதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால் பாதிப்படையும் மைதானம்



பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டின்சின் தோட்ட விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையினால் பாதிப்படைந்துள்ளது. கெசல்கமுவ ஓயா ஆற்றுக்கு அருகிலுள்ள இந்த மைதானத்தின் ஆற்றோரப்பகுதியில் இரவு நேரங்களில் இடம் பெறுகின்ற சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையினால்
இந்த மைதானத்தின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளை டின்சின் தமிழ் மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் தமது விளையாட்டுத்தேவைகளுக்கு இந்த மைதானத்தினையே பயன்படுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
தகவல் : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

ஞாயிறு, 20 ஜூன், 2010

இ.தொ.கா.வின் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் கட்சிமாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் அந்தக்கட்சியின் உயர்பீடத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இதன் படி இ.தொ.கா.வின் தலைவரான முத்துசிவலிங்கம் அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவும்
இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகவும் செயற்படுகின்றார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான வி.இராதாகிருஷ்ணன் ,பி.இராஜதுரை ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணனுக்கும் இ.தொ.கா.வின் முக்கியஸ்தருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தின் இன்னொரு முக்கிய அமைப்பான மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அதன் தலைமைப்பதவியை ஏற்கப்போவதாகவும் இவருடன் இணைந்து மலையகத்தின் மாற்று அரசியல் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் இணையவுள்ளனர்
என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இந்தக்கட்சி மாறுதல் தகவல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்
வி.இராதாகிருஷ்ணனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுவருவதாகவும் விரைவில் தீர்க்கமான முடிவொன்றினை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படவுதவி : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

உணவில் விசம் கலக்க முற்பட்டவர் விளக்கமறியலில்

அரசியல் தொழிற்சங்க பகை ஒன்றின் காரணமாக மாற்றுத்தொழிற்சங்கமொன்றின் ஆதவாளர் ஒருவர் இன்னொரு தொழிற்சங்கமொன்றின் ஆதரவரவாளர் ஒருவரின் வீட்டார் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் விசத்தினைக் கலந்துவிட முற்பட்ட சம்பவமொன்று கொத்மலை முறுக்கு றம்பொடைத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கொத்மலைப்பொலிஸார் கைது செய்து புசல்லாவை எலிபொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும்; 23 ஆம் திகதி வரை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி மேற்படி சந்தேக நபர் மேற்படி வீட்டின் கோழிகளுக்கும் விசம் கலந்த உணவினைத் தூவியதால் ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன.அதே வேளை குறிப்பிட்ட வீட்டின் சமயலறை கதவினை உடைத்துக்கொண்டு உணவில் விசத்தினைக்கலக்க முற்பட்ட போது வீட்டாரிடம் கையுமெய்யுமாக பிடிபட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து இந்தச்சம்பவம் தொடர்பாக கொத்மலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து கொத்மலை பொலிஸார் குறிப்பிட்ட நபரைச்சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதோடு உயிரிழந்த கோழிகளின் உடற்பாகங்களையும் மேலும் சிலப்பொருட்களையும் கொழும்பு இரசாயனப்பகுப்பாய்வுத்திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதோடு இந்தச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளி, 18 ஜூன், 2010

பாலம் அமைக்கும் போர்வையில் மாணிக்கம் அகழ்ந்தெடுக்க முயற்சி












நோர்வூட்
நிவ்வெளி தோட்டத்தொழிற்சாலை பிரிவில் பாலம் ஒன்றை அமைக்கும் போர்வையில் மாணிக்கம் அகழ்வதற்கான மறைமுகத்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அம்பகமுவ பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இந்தப்பாலத்திற்கான
பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்காது சூட்சமான முறையில் மாணிக்கம் அகழ்வதில் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை இந்த நடவடிக்கை இடம் பெறுகின்ற இடத்தில் தொழிற்சங்கமொன்றின் கொடியொன்றும் நாட்டப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தகவல் : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

மணிச்செய்திகள்

கினிகத்தேனை அஞ்சலகத்தினை நகர மத்தியில் ஏற்படுத்துமாறு கோரிக்கை
கினிகத்தேனை அஞ்சலகம் கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ளதால் இந்தத் தபாலகத்தின் சேவைகளைத் துரிதமாகப்பெற்றுக்கொள்வதில் கினிகத்தேனை பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கினிகத்தேனை அஞ்சலகம் நீண்டகாலமாக தனியார் ஒருவருக்குச் சொந்தமான கட்டிமொன்றிலேயே இயங்கி வருகின்றது.இந்த அஞ்சலகத்தில் 7 பேர் சேவையாற்றுகின்றனர்.
இந்த அஞ்சலகம் கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில்
அமைந்துள்ளதால் பிரதேச மக்கள் இந்த அஞ்சலகத்திற்குச் சென்று வருவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அஞ்சலகங்கள் பொதுமக்களின் நன்மைக்கருதி நகரப்பகுதிகளிலேயே
அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் இதற்கு மாறாக கினிகத்தேனை அஞ்சலகம் நகரின் ஒதுக்குப்புறமொன்றில் அமைந்துள்ளதால் இந்த அஞ்சலகத்தினை கினிகத்தேனை நகருக்கு அருகில் ஏற்படுத்துமாறு கினிகத்தேனை பிரதேச மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே கினிகத்தேனை அஞ்சலகத்தினை கினிகத்தேனை நகர மையப்பகுதியில்
ஏற்படுத்துவதற்குப்; பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்மலையில்
இரத்ததான நிகழ்வு


இலங்கைத்தேசிய பௌத்த நிறுவகத்தின்; ஏற்பாட்டில் கொத்மலை மாவட்ட வைத்தியசாலையில் 19 ஆம் திகதி காலை 9 மணிமுதல் இரத்த தான முகாமொன்று இடம் பெறவுள்ளது. இந்த இரத்ததான முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.




நாவலப்பிட்டியில்
நூல் அறிமுக விழா
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி எஸ்.இராமநாதன் எழுதிய மலையக இந்திய வம்சாவளியினர் இருளும் ஒளியும் நூல் அறிமுக விழா 20 ஆம் திகதி
காலை 10 மணிக்கு நாவலப்பிட்டிநகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வின் வரவேற்புரையை திருமதி தேவிதர்ஷினியும் நூல்அறிமுகத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரனும் நூல்விமர்சன உரையை
அருணாச்சலம் வைத்தியலிங்கமும் சிறப்புரையை தோட்டத்தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓ.ஏ.இராமையாவும் வழங்கவுள்ளனர்.

நாவலப்பிட்டி அறநெறி பாடசாலை ஆண்டு விழா
நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான அறநெறிப் பாடசாலையின் ஆண்டு விழா 20 ஆம் திகதி நாவலப்பிட்டி தமிழ்க்கலாசார மண்டபத்தில் பிற்பகல்
2 மணிக்கு இடம் பெறவுள்ளது. நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான பரிபாலன சபைத்தலைவர் ஏ.சண்முகம் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி இந்து கலாசார
அபிவிருத்தி அலுவலகர் திருமதி .எம்.அனந்தலெட்சுமி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த விழாவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்
சமயச்சொற்பொழிவுகளும் இடம் பெறவுள்ளன.

வியாழன், 17 ஜூன், 2010

தோட்டப்பகுதி சிறுவர்களின் நலனோம்பு விடயங்களில் அரச நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் : எம்.உதயகுமார் தெரிவிப்பு

பெருந்தோட்டப்பகுதி சிறுவர்களின் நலனோம்பு விடயங்களில் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற சிறுவர்கள் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழந்து வருகின்றனர்.குறிப்பாக தோட்டப்பகுதி சிறுவர்களுக்கு முன்பள்ளிக்கல்வி இதுவரை முறையாக வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தைப்பொறுத்த வரையில் பிரிடோ போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் முன்பள்ளிகளை ஏற்படுத்துவதில் முனைப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் தோட்டப்பகுதிகளில் முறையாக முன்பள்ளிகளை அமைத்துக்கொடுப்பதில் தோட்ட நிருவாகங்களோ அரசாங்கமோ உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் மத்தியில் போஷாக்கின்மை 36.2 வீதமாக காணப்படுவதாக அறிவித்துள்ளது.இவ்வாறு போஷாக்குக்குறைபாடுடைய பிள்ளைகள் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகமாகவுள்ளனர். இவ்வாறு பிள்ளைகள் போஷாக்குறைப்பாடுடன் வாழுவதால் அவர்களின் பல்வேறு ஆளுமை வளர்ச்சிகள் பாதிப்படைகின்றன.அத்தோடு ஏனைய சிறுவர்கள் அனுபவி;க்கக்ககூடிய உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் வருமான தாழ் நிலைமை சிறுவர்களின் வாழக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்டச்சிறுவர்களின் நலனோம்புத்திட்டங்கள் குறித்து அரசாங்கமும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களும் அக்கறையின்றி செயற்படுகின்றமைக் கவலைத்தரக்கூடிய விடயமாகும். இதே வேளை தோட்டப்பகுதிகளில் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் தேவைகள்; என்பன தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படாததால் பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் இதனால் அவர்களில் பல்வேறு உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.. பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள் காட்டும் அக்கறை சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரச நிறுவனங்கள் அக்கறை செலுத்தாமலிருப்பது கவலைத்தரக்கூடிய விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணசபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

மஸ்கெலியா மாவட்டவைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்க்கவும்

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ்ச்செயற்படுகின்ற மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையைப் பிரதேச மக்களின் நலன் கருதி மேம்படுத்துவதற்கு மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபையின் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
மஸ்கெலியா பிரதேசத்தில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்களின் வைத்திய சேவையைப் பூர்த்திச் செய்யக்கூடியவகையில் விசாலமான கட்டிடமொன்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் செயற்பாடுகள் உரியவகையில் இல்லாத காரணத்தினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.தற்போது இந்த வைத்தியசாலையின் மாடிக்கட்டிடங்கள் பல பாழடைந்த நிலையிலுள்ளன.இந்த வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. முக்கிய வைத்திய பிரிவுகள் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன..எனவே இதனைக்கருத்திற்கொண்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைக்குறித்து ஆராய்ந்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ளுவதற்கு மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் கரிசனைக் கொள்ள வேண்டும் : பி.திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அதிக அக்கறையுடன் செயற்படவேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்ட முக்கியஸ்தர்களுக்காக நேற்று 16 அம் திகதி அட்டனில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களான மனோகரன் ,நாகராஜ் ,அந்தோனிராஜ்,சிவகுமார் ,சிவானந்தன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள் ,மாவட்டத்தலைவர்கள் ,தோட்டக்கமிட்டித்தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதன் போது தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம்; கூறியதாவது :
இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் தன்னை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வது ஜனநாய ரீதியான உரிமையாகும் .இந்த உரிமையை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி மக்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு சதிகள் இடம் பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்களை வாக்காளர்களாக பதிவு செய்கின்ற கிராம உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பெருந்தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு என்பது தனியே தேர்தலில் வாக்களிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதொன்றல்ல. உரிய வகையில் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போது அதன் மூலம் நாம் தனிப்பட்ட வகையிலும் சமூக .அரசியல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளைப்பெற்றுக்கொள்ள முடியும்..வாக்காளர் இடாப்புக்கள் மீளாய்வு செய்கின்ற போது கிராமப்பகுதிகளிலும் நகரப்பகுதிகளிலும் அமுல் படுத்தப்படுகின்ற சில நடை முறைகள் தோட்டப்பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழந்து வருகின்றனர்.ஆகவே இந்த நிலையைத் தொடரவிடக்ககூடாது.எனவே எமது தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்தி தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அவர்களுக்கு வழிகாட்டியாக செயற்படவேண்டும்.இதே வேளை நுவரெலியா மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றில் குரலெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலையகத்தின் காமன்கூத்தும் இடம் பெறவுள்ளது.



எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தமிழகத்தின் கோவையில் இடம் பெறுவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24 ஆம் திகதி இடம் பெறவுள்ள கலாசார நிகழ்வில் மலையகத்தின் நாட்டுக்கூத்தான காமன்கூத்து இடம் பெறவுள்ளது. மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தக்காமன் கூத்தில் மலையகத்தைச்சேர்ந்த 14 கலைஞர்கள் பங்கு பற்றவுள்ளனர். உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தலைவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆலோசனைக்கேற்ப மலையகக்கவிஞர் சு.முரளிதரனின் சிபாரிசின்படி மலையகத்தைச்சேர்ந்த ஆசிரியர் பிரான்ஸிஸ் ஹெலனின் நெறியாள்கையில் மலையகக் காமன் கூத்து இந்தச்செம்மொழி மாநாட்டில் மேடையேற்றப்படவுள்ளது.

புதன், 16 ஜூன், 2010

நோர்வூட் வேன் விபத்தில் ஒருவர் பலி : ஐந்து பேர் படுகாயம்.





நுவரெலியா மாவட்டம் நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் இன்று பிற்பகல் வேளையில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் பலியானதோடு ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியாவைச்சேர்ந்த வேன் ஒன்று கண்டிக்குச்சென்று மஸ்கெலியா நோக்கி சென்றுகொண்டிருந்த போது நோர்வ+ட் - மஸ்கெலியா பிரதான பாதையில் நிவ்வெளி பாடசாலைக்கு அருகில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. இதன் போது வேனின்; சாரதி சம்பவம் இடம் பெற்ற இடத்திலேயே பலியானதோடு அந்த வானில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மூவர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையிலும் மேலும் இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்துச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் : நோர்வூட் ரஞ்சித் ராஜபக்ஷ

செவ்வாய், 15 ஜூன், 2010

நோர்வூட் பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஓல்டன் சந்தியில் இன்று திகதி காலை 8.45 மணியளவில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களின் 10 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்துத்தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :
சாமிமலை நகரிலிருந்து ஓல்டன் வழியாக அட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையைக் கடந்து நோர்வூட் நோக்கி வந்து கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டைத் திடீரென பஸ் இழந்துள்ளது. இதன் போது சமயோசிதமாக செயற்பட்ட சாரதி பஸ்ஸை மண்திட்டொன்றின் மீது மோதியுள்ளார்.
இதன் போது பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு பஸ்ஸின் முன்பகுதியின் ஒரு பகுதி சேதத்துக்கு உள்ளாகியது. இதன் போது பஸ்ஸினுள் இருந்த பயணிகள் 32 பேரும்; ஆசனங்களுடன் மோதியதால் அவர்களின் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இவர்களின் 10 பேர் டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
படஉதவி : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

திங்கள், 14 ஜூன், 2010

சாமிமலைப்பிரதேசத்தில் மாணிக்கம் அகழ்வதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சாமிமலை பிரதேசத்திலிருந்து உற்பத்தியாகும் மஸ்கெலியா ஓயாவில் மாணிக்கம் அகழ்வது தொடர்பில் நிபந்தனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. சாமிமலை கவிரவில கிறின்பார்ம் கிராம மக்களின் நலன் கருதி அருகில் உள்ள ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்த போது அப்பிரதேசத்தில் மாணிக்கக்கற் படிமங்கள் இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்பு இந்தப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆற்றோரத்தில் மாணிக்கம் அகழும் பொறுப்பினை இரத்தினக்கல் மற்;றும் ஆபரணங்கள் அதிகாரசபைப் பெறுப்பேற்றது. இவ்வாறானதொரு நிலையில் இந்தப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்,இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் ,நுவரெலியா அரசாங்க அதிபர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ ஆகியோர் மாணிக்கக்கற் படிமங்கள் உள்ள இடத்தினைப் பார்வையிட்டனர். அத்துடன் ஆற்றுவெள்ளத்தினால் அடிக்கடி இடம் பெயர்ந்து பாதிப்படைகின்ற கிறின்லைன்பார்ம் குடியிருப்பாளர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே மாணிக்கம் அகழும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இந்தப்பிரதேசத்தில் மாணிக்கம் அகழுவதற்கான ஏலவிற்பனை இடம் பெறக்கூடாது ,இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை மாத்திரம் மாணிக்கம் அகழும் நடவடிக்கையைப் பொறுப்பேற்க வேண்டும்.ஆற்று வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகின்ற கிறின்பார்ம் குடியிருப்பாளர்கள் 52 பேருக்கு நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையோரத்தில் இனங்காணப்பட்ட இடமொன்றில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்ற பொறுப்பினை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை ஏற்க வேண்டும்.இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே மாணிக்கம் அகழும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமென்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றும் விரைவில் இடம் பெறவுள்ளன.
தகவல் : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களின் பணி தொடர்கிறது : நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை

போராளிகளின் கைகளிலுள்ள ஆயுதங்களை விட ஊடகவியலாளர்களின் கரங்களிலுள்ள பேனைகள் சக்தியானவை என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் உன்னத சேவை இந்த நாட்டுக்கு முக்கியமானதாகும். பல்வேறு பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே உடகவியலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. உண்மைச் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை நாம் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.எனவே ஊடகத்துறை சுதந்திரமாக செயற்படுகின்ற போது நாட்டு மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கல்.

























நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் நுவரெலியாவில் இடம் பெற்ற போது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.
இந்த ஒன்றியத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார ,பொதுச்செயலாளர்
எஸ்.தியாகு ,பொருளாளர் ஷெல்டன்ஹெட்டியாராய்ச்சி ,பிரதம அமைப்பாளர் ரஞ்சித்ராஜபக்ஷ, உபசெயலாளர் எஸ்செல்லஹேவா ஆகியோருக்கு அதிதிகள் விருது வழங்குவதைப்படங்களில் காணலாம்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் ஊடகவியலாளர்களுக்கும் பங்கு உண்டு வி.இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு

நாட்டில் ஜனநாயக்கத்தை நிலை நாட்டுவதில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்களிப்பினை நல்கின்றனர் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் நுவரெலியா டிப்டொப் விருந்தக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போதுஅதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
நாட்டில் நடக்கின்ற நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களாக ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர். இவ்வாறான ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பின்றி செயற்படுகின்ற போதுதான் நாட்டில் அநீதியை ஒழிக்க முடியும்.நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் அமைப்பு ரீதியாக
செயற்படுகின்றமை முக்கியமான விடயமாகும். ஊடகவியலாளர்கள் அரசியல் ,இன ,மத ரீதியாக செயற்படக்கூடாதென்பதே எனது எண்ணமாகும்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

மலையகத்தில் டெங்கு நோய்த்தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பம்.

மஸ்கெலியா சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய்த்தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் பி.ஏ.பாஸ்கர் தெரிவித்தார். இவ்வருடத்துக்குள் பொகவந்தலாவை ,நோர்வூட் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் மூவர் இனங்காணப்பட்டனர் என்றும் இவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்குப்பின்னர் தற்போது நலமுடனிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புத் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிப்பதற்கு பிரதேச சபைகள் ,பிரதேச செயலகங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பகமுவ பிரதேச செயலகம், அம்பகமுவ பிரதேச சபை ஆகியன சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

சனி, 12 ஜூன், 2010

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தனை பகுதியில் மண்சரிவு அபாயம் : வாகனப்போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தென்ன நகரிலிருந்து றம்பொடை இடையிலான வாகனப்போக்குவரத்துக்களுக்கு இன்று பிற்பகல் 6 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை தடைவித்திக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி. குமாரஸ்ரீ அறிவித்துள்ளார்.
றம்பொடை கெரன்டிஹெல நீர் வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மண்சரிவு அபாயமொன்று ஏற்பட்டுள்ளதாலேயே இவ்வாறு வாகனப்போக்குவரத்துகளுக்குத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.
கம்பளையிலிருந்து நுவரெலியாவுக்குச்செல்லூகின்ற வாகனங்கள் அனைத்தும் தற்போது தவலந்தென்ன சந்தியிலிருந்து நவநகர பாதை ஊடாக பூண்டு லோயா டன்சினன் வழியாகவும் தலவாக்கலை வழியாகவும் இடம் பெறுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட சிறுவர்களும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினமும். – ஜுன் 12 ஆம் திகதி










வருடா
வருடம் ஜ}ன் மாதம் 12ம் திகதி சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சிறுவர்களின் அனைத்து உரிமைகளையும், விசேடமாக அவர்கள் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுவதற்கு அத்தியாவசியமான கல்வி என்னும் உரிமையையும் பாதிக்கிறது என்பதால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பட்டு வந்திருக்கிறது. சிறுவர் உரிமை சாசனத்தின் 32ம் உறுப்புரை “தம் ஆரோக்கியம் . கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக்கூடிய வேலைகளில் இருந்து பாதுகாப்பு பெறக்கூடிய உரிமை பிள்ளைகளுக்கு உண்டு” எனக் கூறுவதன் மூலம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதானது அவர்களின் முக்கியமான உரிமைளைப் பாதிக்கும் விடயம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. ஆயினும் பல்வேறு நாடுகளில் சிறுவர் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு தொழிற்துறைகள் தொடர்ந்து இயங்கிவந்ததாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படாததால் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே ஐக்கிய நாடுகள் சபை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினத்தை பிரகடனப்படுத்தியது.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அவர்களின் உரிமைகளை மறுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கiயில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக இருப்பினும் பொதுவாக அரசுகளும் பொது அமைப்புக்களும், மக்களும் கூட ஒக்டோபர் முதலாம் திகதியான அனைத்துலக சிறுவர் தினத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலகத் தினத்துக்கு வழங்குவதில்லை. இதனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகச் சமூகத்தின மத்தியில் ஒரு எதிர்புணர்க் கட்டியெழுப்புவதில் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை. தற்போதைய புள்ளிவிபரத்தின் படி உலகில் சுமார் 72 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். ஒவ்வொரு சிறுவருக்கும் கல்வி பெறும் ;உரிமை உண்டு என்பதை உலகம் ஒரு கொள்கையளவாக ஏற்றுக்கொண்டிருப்பதுடன் கல்வி தொடர்பான மிலேனிய இலக்கின் படி 2015 ஆண்டுக்குள் அனைத்து சிறுவருக்கும் தரமானதும் இலவசமானதுமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கையிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சிறுவர்களை பாதிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த விடயத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட சிறுவர்களே ஆவர். வேலைக்கு அமர்த்தப்படும் பெருந்தோட்டச் சிறுவர்கள் பாதிக்கப்படும் போது அல்லது மரணமடையும் போது மட்டும் பெருந்தோட்ட சிவில் சமூகமும் அரசியல் தலைவர்களும் அது தொடர்பாக ஓரிரு நாட்கள் குரல் எழுப்பவதோடு எல்லாம் முடிவடைந்து விடுகிறது. கடந்த வருடம் கொழும்பில் சுமதி ஜீவராணி ஆசிய இரு மலையக சிறுமிகள் உயிரிழந்த போது முன்னரை விட அதிகமாக மலையகச் சமூகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான தனது உணர்வலைகளை வெளிக்காட்டியது . ஆனால் மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஏற்படும் பாரதூரமான பாதிப்புக்களை இல்லாதொழிக்கவும் பெருந்தோட்ட சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்படுவதற்கென்றே உருவாக்கப்பட்டவர்கள் என்ற அவப்பெயரை நீக்கவும் இது போதுமானதல்ல .

நமது அரசாங்கம் சிறுவர்களின் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சையே நிறுவியுள்ளது. இந்த அமைச்சுக்களின் கீழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , சிறுவர் நன்நடத்தை திணைக்களம் உட்பட பல அமைப்புக்கள் சிறுவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்புக்காவும் பல பணிகளைச் செய்வதுடன் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாத்தல் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புதல் உட்பட பல சேவைகளைச் செய்து வருகின்றன. இதற்காக உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைவிட சிறுவர் உரிமை பாதுகாக்கும் விடயத்தில் சிறுவர்களையும் சம்பந்தப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர் பிரிவு முதல் தேசிய மட்டம் வரையில் சிறுவர் சபைகள் அமைக்கப்பட்டு சிறுவர்கள் இவற்றில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றனர். பிரதேச சபை முதல் தேசிய மட்டம் வரையில சிறுவர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக இவை எதுவும் ;பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறையில் இல்லை. பெருந்தோட்ட மக்களில் பலருக்கும் ;ஏன் நமது அரசியல் வாதிகளுக்கும் கூட இவ்வாறு அமைப்புக்கள் இருப்பது தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவே போதிய அறிவு இருப்பாதாக கருத முடியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இந்தச் சேவைகளும் வளங்களும் நிதிகளும் பெருந்தோட்ட மக்களுக்கு விசேடமாக சிறுவருக்குக் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும் .அப்படி செய்ததாக தெரியவில்லை. சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தும் தரகர் தொழில் பெருந்தோட்ட பகுதிகளில் பகிரங்கமாக நடக்கும் போது இந்தச் சட்டவிரோத செயலைக் கட்டுப்படுத்த எந்த ஆக்கப+ர்வமான நடவடிக்கையும் இல்லை. இந்த விடயத்தில் நாம் அரசை குறைக் கூற முடியாது. அனைத்து சிறுவர்களையும் சமமாக மதித்து அரசின் சிறுவர் மேம்பாட்டு சேவைகள் அனைத்து சிறுவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையானாலும் அதனை தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கடமையாகும்.

சிறுவர் தொடர்பான அரசு சேவைகளைப் பெருந்தோட்ட மக்களுக்கும் விசேடமாக சிறுவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு மலையக சமூகததிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான பொதுக்கருத்தினை கட்டியெழுப்ப வேண்டும். மக்களையும் சிறுவர்களையும் இந்த விடயத்தில் நேரடியாக பங்கு பெறச் செய்து சிறுவர் உரிமை மீறலுக்கும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் எதிரானதுமான பொது உணர்வைக் கட்டியெழுப்பாதவரை பெருந்தோட்ட பகுதியில் சிறவர்களை வேலைக்கு அமர்த்தும் பிரச்சனை ஒரு தொடர்கதையாகவே இருக்கப்போகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் தரகர் தொழிலை இல்லாதொழிக்க சட்டப+ர்வமானதுமான நடவடிக்கை மாத்திரமல்ல தாக்கமுள்ள சமூக எதிர்ப்;பியக்கம் கட்யெழுப்பப்படுவது அவசியம். இந்தத்தினம் தொடர்பாக மலையகத்தில் பரப்புரைகளில் ஈடுபடுவதில் பிரிடோ நிறுவனம் முன்னின்று செயற்பட்டு வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 ஜூன், 2010

புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்




புசல்லாவைபிளக்பொரஸ்ட் தோட்டத்தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப்போராட்டமொன்றில்ஈடுபட்டனர். தமது தோட்டத்திலுள்ள தேயிலைச்செடிகளுக்கிடையில் கறுப்பன்தேயிலை மரக்கன்றுகளை நடுவதற்குத் தோட்ட நிருவாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்தக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர். தேயிலைச்செடிகளுக்கிடையில் இந்தக்கறுப்பன்தேயிலை மரக்கன்றுகளை நடுவதால் ஏற்படுமென்றும் இதனால் தமது வேலை நாட்கள் குறைக்கப்படலாமெனவும் தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப்போராட்டம் குறித்துத் தோட்ட நிருவாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே வேளை மத்திய மாகாணசபையின் உறுப்பினர் ராஜரட்ணம் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத்தந்து இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமைக்குறிப்பிடத்தக்கது.
தகவல் : புசல்லாவை .பா.திருஞானம்

சத்தோச விற்பனை மையத்தினைத்திறக்கக்கோரி புசல்லாவை நகரில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்










பிரதேச மக்களின் நன்மைக்ககருதி புசல்லாவை நகரில் அமைக்கப்பட்டுள்ள சத்தோச விற்பனை நிலையத்தினை உடனடியாகத் திறக்கக்கோரி புசல்லாவைப்பிரதேசத்ததைச்சேர்ந்த தோட்டங்கள் மற்றும்
கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர் திறக்கப்படவிருந்த இந்த சத்தோச விற்பனை நிலையம் புசல்லாவை நகரிலுள்ள வர்த்தகர்களின் நடவடிக்கை காரணமாக உரிய காலத்தில் திறக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தின் சகாயவிலைப்பொருட்களைச் சத்தோச விற்பனை நிலையத்தில்
பெறக்கூடியதாகவிருப்பதால் இந்தச் சத்தோச விற்பனைக்கூடத்தினை உடனடியாகத்திறப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரியே பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்புப்போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் : புசல்லாவை .பா.திருஞானம்

மணிச்செய்திகள்

பத்தனைநாவலப்பிட்டி பிரதான பாதையின் போக்குவரத்துக்கள் வழமைக்குத்திரும்பின.
பத்தனை
– நாவலப்பிட்டி பிரதான பாதையில் கெலிவத்தைத் தோட்டத்துக்கு அருகில் காலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றின் காரணமாக இந்தப்பாதையின் ஊடான
போக்குவரத்துக்கள் சில மணிநேரம் தடைபட்டன.
பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையில்; குயின்ஸ்பெரித் தோட்டத்திற்கும் கெட்டப+லா தோட்டத்திற்குமிடையில் லொறி ஒன்று பாதையில் குடைசாய்ந்ததால் இந்தப்பாதையின் ஊடான போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது. இதன் போது பத்தனை பொலிஸாரின் அறிவித்தலுக்கேற்ப மாற்றுப்பாதையின் ஊடாக வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெற்றன.
இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்குப்பிறகு குறிப்பி்ட பாதையிலிருந்து
லொறியை அப்புறப்படுத்தியதன் பின்பு பத்தனை – நாவலப்பிட்டி பாதையின் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பின.

அட்டன் நகரில் நடைபாதை வியாபாரத்துக்குத் தடை
அட்டன் நகரின் பிரதான பாதையோரங்களில் பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற வகையில இடம் பெற்று வந்த வியாபார நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அட்டன் நகர பிதா ஏ.நந்தகுமார் தெரிவித்தார். அட்டன் நகரின் பிரதான பாதையின் இருமருங்கிலும் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த நடைபாதை வியாபாரங்களினால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.இவ்வாறானதொரு நிலையில் அட்டன் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடைபாதை வியாபார நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் நகரபிதா மேலும் தெரிவித்தார்.